புதன், 13 ஜனவரி, 2010

ஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும்

ஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும்
சி.அறிவுறுவோன்,
சோலை சுந்தரபெருமாள்



பகவத்கீதைக்கு ஏராளமான உரைகள் வெளி வந்துள்ளன. ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய உரைநூல்களும் இதில் அடங்கும். கீதையின் சார்பாளர்கள் இந்த உரைநூல்களை லட்சக்கணக்கில் அச்சாக்கி இலவசங்கள் மூலம் பரப்பச் செய்கின்றனர். வெற்றியும் பெற்றுள்ளார்கள். மறுப்பதற்கில்லை. அமோக விளைச்சலும் உண்டு.


இந்நிலையில் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்களில் முதன்மை பங்கு வகிக்கும் தேவாரம், திருவாசகத்திற்கு உரைகள் எழுதப்படவில்லை. எழுத ஆட்கள் இல்லை என்பதால் இல்லை. இவைகளுக்கு உரைகள் எழுதக்கூடாது என்ற சட்டமே இருந்திருக்கிறது. இந்தச் சட்டங்களை அமுலாக்கியவர்கள் சைவ, வைணவ, பிராமணியப் புரோகிதர்கள் தான். தமிழ் மறைகளுக்கு உரை எழுதினால் அவற்றின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்று மூடாக்கு போட்டு இருக்கும் ரகசியத் தன்மையை இந்த கட்டுரையில் எழுத இயலாது. அது வேறு தளத்தில் எழுதப்படவேண்டும்.இந்த நூல்களுக்கு உரைகள் வெளிவந்திருந்தால், ஐந்தாம் வேதம் என்று போற்றப்படும் ‘பகவத்கீதை’ கேள்விக்கணைகளுக்கு தாங்க முடியாமல் கரைந்து போயிருக்கும். இப்படியான பூடகத்தன்மையோடு கீதையின் மெல்லிய இழைகள் கூட அறுபடாமல் காத்து வருவதில் இந்து மதத்திற்கு முழு பங்கு உண்டு. வெகுவாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் மக்களைத் திரட்டி வைத்து தங்களது மேலாதிக்கத்தில் தக்க வைத்து வரும் பிராமணிய புரோகிதர்கள் அரசாளும் தகுதி உடைய அறிவாளிகள் என்ற அடையாளத்திற்கு உட்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதனுள்ளே அவர்களின் சூட்சமங்கள் பொதிந்து கிடக்கின்றன.

வேதத்தை ஏற்றுக்கொண்ட அரசும் ஏற்றத்தாழ்வுள்ள வர்ணமும் ஒழுங்குப்படுத்தி வைத்திருக்கும் சூத்திர சாதியினுள் பிறந்த, வே.இந்திரசித்து சமகிருதத்தை முறையாக பயின்றவர். சமஸ்கிருத பண்டிதர்களுடன் விவாதித்தவர். இன்றும் விவாதத்திற்கு தயாராக இருப்பவர். தமிழ் இலக்கியங்களிலும் பயிற்சி உடையவர் என்றும் அறியமுடிகிறது. அவர் ‘பகவத்கீதை ஒரு பார்வை’ என்ற ஆய்வை வெளி யிட்டுள்ளார். இந்நூல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆயினும் பரவலாக அறியப்படவில்லை. இந்த ஆய்வினுள் பயணிக்கும்போது நமக்கு ஏராளமான தரவுகள் கிடைக்கின்றன.

இந்நூலுள் சொல்லப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் மாறுபட்டவை. இன்றைய காலகட்டத்தில் கவனத்துக்குரியவை. இந்து மதம் இந்தியாவின் பெரிய மதம் என்ற ஒரே காரணத்துக்காக அதற்குத் தனி மதிப்பும் முதன்மையும் அளிக்கப்படவேண்டும் எனும் ஒரு கோரிக்கையையே அரசியல் கோரிக்கையாக மக்கள் முன்வைத்து அதிகாரத்தை வென்றெடுக்க முயலும் அரசியல் சக்திகளின் உள்நோக்கத்தைத் தோலுரித்துக் காட்ட இந்நூல் பேரளவில் பயன்படும்.

இந்நூல் பத்தொன்பது உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அதில் ‘தமிழ் வைணவ நெறியும் கீதையும்’ எனும் தலைப்புள் காணப்படும் தகவல்கள் உற்று நோக்கத்தக்கவை. வைணவத்தின் பன்னிரு ஆழ்வார் களும் இயற்றிய எந்த ஒரு நூலிலும் கிருஷ்ணன் அர்ச்சுணனுக்கு ஓதியதாகச் சொல்லப்படும் பகவத் கீதை ஒரு இடத்தில்கூட குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். பன்னிரு ஆழ்வார்களும் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக் கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம் வைணவர்களுக்கு உயிர்மூச்சானது. அதைக்கூறாத எதையும் வைணவச் சார்பானதாக வைணவர்கள் கருதுவதில்லை. தொல் காப்பியர் காலமுதலே மாலியம் என்று சொல்லப்படும் வைணவம் தமிழகத்தில் நிலவி வருவதைத் தொல் காப்பிய வரிகளை எடுத்துக்காட்டிக் கூறியுள்ளார்.

‘திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே’,
‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’,
‘நாராயணா எண்ணா நா என்ன நாவே’


என்னும் சிலப்பதிகார வரிகளை எடுத்தாண்டு எட்டெழுத்து மந்திரம் சிலப்பதிகார காலத்திலேயே தமிழ்மக்களிடம் வேர்கொண்டுள்ளதை நிறுவியுள்ளார். அவரே பிற்காலத்திலே எழுதப்பட்ட கம்பராமாயணத்துள் எட்டெழுத்து மந்திரம் வரவில்லை என்பதால் வைணவர்கள் கம்பராமாயணத்தை வைணவநூலாக ஏற்க மறுத்ததால் கம்பர் பிறகு இரணியவதத்தைக் கம்பராமாயணத்துள் நுழைத்து அதனுள் எட்டெழுத்து மந்திரத்தை போதித்துள்ளார் என்று காட்டியுள்ளார். இதனால் வைணவர்கள் எட்டெழுத்து மந்திரத்தை எத்துணை உயிர் மூச்சாகக் கருதினர் என்பதை விளக்கியுள்ளார்.

கடவுள் நாற்பத்தைந்து பெயர்களால் அழைக்கப்படுவதைக் குறிப்பிட்டு அவற்றுள் நாராயணா என்னும் பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்று காட்டியுள்ளார். (பக்கம் 93) ஆகவே கீதை வைணவப் பெரியார்கள் வணங்கும் பகவான் கிருஷ்ணன் அல்லது கண்ணனால் அர்ச்சுணனுக்கு ஓதப்பட்டிருந்திருக்குமானால் உறுதியாக அதனுள் நாராயணா எனும் பெயர் வந்திருக்கும். வரவில்லை என்பதால் வேறு யாரோ ஒரு கண்ணனால் அல்லது கிருஷ்ணனால் கீதை சொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தெளிவான முடிவிற்கு வருகிறார். இதை மறுக்க முடியாது. பகவான் கண்ணனை மறுப்பது நூலாசிரியர் நோக்கமன்று. பிராமணியத்தை மறுப்பதும் சனாதனத்தை மறுப்பதுமேயாகும். ஆகவே, வைணவ நூல்களை வேதசாரத்தை எதிரொளிப்பவை என்று இட்டுக்கட்டி எழுதும் எழுத்துக்களைக் கடுமையாகச் சாடுகிறார்.

அடுத்துக் கவனத்தில் கொள்ளவேண்டியது பன்னிரண்டாவது உட்தலைப்பாகும். இதனுள் கீதை பத்துக் குற்றங்களும் நிரம்பிய நூல் என்று நிறுவியுள்ளதாகும். பவனந்தி முனிவரின் நன்னூல் நூற்பாவை மேற்கோள் காட்டி நிறுவியுள்ளார். ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் வேறுவழியில்லை.

‘கீதை காட்டும் இந்துமதக்கடவுள்’, ‘இந்துமதக் கடவுள் இரக்கமற்றவன் அறநெறி அறியாதவன்’, ‘இந்துமதம் காட்டும் கடவுள் - கருணையற்றவன்’, ‘இந்துமதக் கடவுள் குறுகிய மனம் படைத்தவன்’, ‘இந்துமதக் கடவுள் - சொல்வன்மையற்றவன்’, என்னும் தலைப்புகளில் மிகச்சரியாக ஆய்வை மேற்கொண்டு உள்ளார் என்பது புலனாகிறது. இவற்றைப் படிப் போர்க்கு இந்துமதக் கொடுங்கோன்மை கடவுளிடமிருந்தே தொடங்குகிறது என்பது புலனாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘ஆத்மாவைப்பற்றி - பகவத்கீதை’ எனும் தலைப்புள் பகவத்கீதையுள் ஆத்மக்கோட்பாடு குழப்பப்பட்டுள் ளதை நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் ஆன்மா இல்லை. அழிக்கப்படுவதும் இல்லை. உடல்கள் மட்டுமே அழிகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன எனும் கோட்பாடு நன்றாகக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப்போரில் மதன்லால் திங்க்ரா முதல் காந்திவரை ஆத்மா அழியாது உடல் தான் அழியும் எனும் கோட்பாடு மதவாதிக்கும், வினை மறவர்க்கும், அஹிம்சாவாதிக்கும் அச்சத்தை அகற்ற உதவிய கோட்பாடு என்பதில் ஐயமில்லை என்றாலும் தற்காலக் குற்றவியல் சட்டம், தண்டனைச் சட்டம் ஆகியவை ஆன்மா அழியாது உடல்தான் அழியும் என்பதால் ஒரு கொலையை கொலையன்று என்று ஒப்புக்கொள்ளுமா? ஒப்புக்கொள்ளா. ஆனால் பிராமணத்தியோடு உறவுகொண்ட சூத்திரன் கொல்லப்படவேண்டும் என்பதும் அது கொலையன்று என்பதும் மனுநீதி என்பதை மறந்துவிடுவதற்கில்லை. ஆகவே மனுநீதியை மக்கள் நீதியாக்க உயர்த்திப் பிடிக்கப்பட்ட கீதையின் ஆன்மக்கோட்பாட்டின் உடல்தான் அழியும்; ஆன்மா அழியாது எனும் பகுதி கொலையை நியாயப்படுத்த உதவுவதாகும் என்பதை உணரவேண்டும்.

‘மரணமில்லா பெருவாழ்வு குறித்து இந்துமதம்’ எனும் தலைப்பில் மனிதன் இறக்கும் நேரமே முதன்மையானது என்று குறிக்கப்பட்டுள்ளது. மனிதன் இறக்கும் நேரம் நல்ல நேரமாக இருந்தால் எவ்வளவு பெரிய அயோக்கியனும் பிறவிப்பெருங்கடல் நீந்தியவனாகிப் பேரின்பம் அடைவான். கெட்ட நேரத்தில் இறப்பவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அவன் பிறவி அறுபடாது; மறுபிறவி எடுக்கவேண்டியதாகிவிடும் என்று கிருஷ்ணன் வாய்மொழியாகப் பகவத்கீதையில் ஒலிக்கும்போது பிராமணர்களின் புரோகிதத்துக்கு முதன்மை வந்து விடுகிறது. எண்குணத்தான் தாளை வணங்காதத் தலை என்று வள்ளுவர் குறிப்பிடுவதில் வரும் எட்டு குணங் களும் இந்நூலுள் 63ஆம் பக்கத்தில் (கீதை ஓஐஏ: 24-25) குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பௌத்தக் கோட்பாடு. கீதையால் உள்வாங்கப்பட்டுள்ளதற்கு எடுத்துக் காட்டாகும். அதற்கு இந்நூலாசிரியர் கூறியுள்ள விளக்கம் பொருந்துவதாய் இல்லை. எப்படி இருப் பினும் கீதை புரோகிதத்துக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் பிராமணியத்தை ஊக்குவிக்கிறது என்பது நன்கு உணர்த்தப்பட்டுள்ளது.

இனி ஐந்தாவது வேதம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மகாபாரதம் கீதை இடம் பெறாதிருந்தால் அப்பெயர் பெற்றிருக்க முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. இந்தியாவில் சொத்தும், சாதியும் கூடப்பிறந்தவை. அரசும் ஏற்றத்தாழ்வுள்ள வர்ணமும் உடன் பிறந்தவை. அதனால்தான் முதலாளித்துவ சனநாயக காலகட்ட அரசு கூட வர்ணத்துக்கு மாறாக வகுப்பை உயர்த்திப்பிடிக்க வேண்டியதாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். வர்ணத்தை மறுவுயிர்ப்பு செய்ய எண்ணினாலும் பாரதீய ஜனதா கட்சி வகுப்புகளை உயர்த்திப்பிடிப்பதன் நோக்கம் இதில்தான் அடங்கியுள்ளது.

குலக்குழு (சாதி) ஆட்சிக்கு மாறாக ஒரு தனி ஆள் ஆட்சிக்கு வித்திட்டுச் சொத்து வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் வித்திட்ட போராகும். இதைத் தொடர்ந்தே பேரரசுகள் உருவாகி வளர்ந்தன. சிற்றரசுகளை ஒழித்துக்கட்டி மகதப்பேரரசு உருவானதும், பாரி போன்ற இனக்குழுத் தலைவர்களை ஒழித்துக்கட்டி சேர, சோழ, பாண்டியர்கள் எனும் முடிமன்னர்கள் உருவானதும் இதன்பிறகே. வடக்கே சமண பௌத்த மதங்கள் தலையெடுத்து பௌத்தம் அரச மதமானதும் தெற்கே களப்பிரர் ஆட்சியைப் பிடித்து பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் முதலான வற்றை அழித்து மக்கள் சொத்தாக்கியதும் நிகழ்ந்து முடிந்தபின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பக்தி இயக்கங்கள் தலையெடுக்கின்றன.

அவற்றால் பௌத்தம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் பிராமணியம் அரியணை ஏறுகிறது. இவ்வாறு மீண்டும் பிராமணியம் அரியணை ஏற முயற்சி செய்த காலத்தில் அல்லது அரியணை ஏறிய கொஞ்ச காலத்திலேயே கீதை எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கான ஆதாரம் ஒன்றை கீதையிலிருந்தே காட்டியுள்ளார். ‘சாதித் தொழிலை செய் கூலியை எதிர்பாராதே’ எனும் தலைப்பில் 103ஆம் பக்கத்தில் உள்ளது.

“இந்த அழிவற்ற யோகத்தை (வழியை) நான் முன்னர் வி°வானுக்குப் (சூரியனுக்கு) பகர்ந்தேன். வி°வான் மனுவுக்குச் சொன்னான். மனு இக்ஷ்வாகு வுக்குச் சொன்னான்” (பகவத்கீதை IV: 1)

“இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். அந்தயோகம் கால மிகுதியால் அழிந்தது”. (பகவத்கீதை IV: 2)

“அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன். இது மேலான மறையாகும்.” (பகவத்கீதை IV: 3)

இதில்வரும் மேலான மறையும் யோகமும் வர்ண முறையையும் வர்ணத்துக்குரிய தொழிலைச் செய்யும் படி வற்புறுத்துவதுமேயாகும்.

‘சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம்’ (பகவத் கீதை IV: 13) என்பது ‘நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டன’ என்று கீதை ஆசிரியன் பகவான் கிருஷ்ணன் கூறுவதாக அமைந்தது.

‘அந்தயோகம் காலமிகுதியால் அழிந்தது’ என்று ‘அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்’ என்று சொல்லப்பட்டதால் நால் வர்ணமும் குலத்தொழிலும் அழிந்துபோனதால் அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டி சொல்லப் பட்டது என்றே பொருள்படுகிறது. பௌத்தத்தாலும் களப்பிரராலும் அழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட வில்லை. காலமிகுதியால் அழிந்தது என்று சொல்லப் பட்டுள்ளது என்றாலும் உண்மை அதுவன்று என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பௌத்தமும், களப்பிரரரும் சிதைத்தனர்; அழித்தனர் என்பதே சரியாக இருக்கும். எனவே கீதை, மகாபாரதம் தோன்றி நீண்ட நெடுங்காலம் கடந்தே எழுதிச் சேர்க்கப் பட்டிருந்திருக்க முடியும்.

‘ஆராய்ச்சியாளர் பார்வையில் கீதை’ எனும் தலைப்பினுள் ஜோசப் இடமருகு குறிப்பிடும் அறிஞர்களின் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன என்றாலும் நூலாசிரியர் பகவத்கீதை இறைவனால் படைக்கப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை என்றும் பகவத்கீதையில் காணப்படும் 18 அதிகாரங்களும் ஒரே புலவனால் எழுதப்பட்டிருக்கலாம் என்பதற்கு இடமில்லை. ஏனெனில் முரண்பட்ட கருத்துக்கள் மிகுதியும் காணப்படுகின்றன. பல்வேறு காலங்களில் வாழ்ந்த வெவ்வேறு புலவர்களின் பாடல் களின் தொகுப்புத்தான் பகவத்கீதை என்று எழுதியுள்ளார்.

ஆக, பகவத்கீதை பகவான் என்று அறியப்பட்ட கண்ணனால் செய்யப்பட்டது அன்று பெயர் தெரியாத யாரோ ஒரு புலவரால் அல்லது வெவ்வேறு புலவர் களால் வெவ்வேறு காலங்களில் செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். பகவத்கீதை இலக்கணப்படி ஓர் ஒழுங்கான நூலன்று என்று தெளிவாக்கி விடுகிறார்.

பிராமணியத்தை மிக நுட்பமாக அம்பலப்படுத்துகிறார். வேதம் சிறுதெய்வ வழிபாட்டினை உயர்த்திப் பிடிப்பது என்பதை மொழி நூலறிஞர் ஞா. தேவ நேயப்பாவாணர் அவர்கள் கூற்றை மேற்கோளாகக் காட்டி நிறுவியுள்ளார். எனவே, வேதத்தின் சாரமாக உபநிஷதங்களைக் காட்டுவது பித்தலாட்டம் என்று கூறியுள்ளார். ‘உபநிஷதங்களும் கீதையும் சேர்ந்து பிரம்ம சூத்திரத்தில் அடக்கம். பிரம்மசூத்திரத்தில் வேதவியாசர் சுருதி என்று குறிப்பிடும் இடங்களில் உபநிஷதங்களையும் °மிருதி என்று குறிப்பிடும் இடங்களில் அநேகமாய் பகவத்கீதையையுமே கருத்தில் வைத்து பேசுகிறார்’ என்று (பக்கம் 27) ஒரு மேற்கோளை காட்டுவதன் மூலம் பிரம்மசூத்திரத்திற்கு மூலமே உபநிஷதங்களும் கீதையும் என்றாகி விடுகிறது. இவை மூன்றுமே இந்துக்களுக்கு வேதநூல்களாகும். இவற்றுக்கான ஒட்டுமொத்த பெயரே ‘பிர°தான திரயம்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இதில் வராத இன்றியமையாத செய்தி ஒன்று உண்டு.

ஸ்ருதி என்பது ஒரு வழிபாட்டுமுறையாக நெருப்பில் ஆகுதி செய்து வழிபடும் முறை. ஆகமம் உருவவழிபாட்டை வலியுறுத்துவது ஸ்ருதி என்பது ஆரிய வழிபாட்டு முறை. ஆகமம் என்பது இந்தியத் தொல்குடி மக்களுக்கு உரியது. இரண்டும் இணைந்தே வேதாகமம் ஆனது. ஆரியரும் இந்தியத் தொல்குடி மக்களும் இணைந்ததன் பண்பாட்டு வெளிப்பாடே வேதாகமம். ஆனால் பிராமணியம் ஆகமத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேதமே அனைத்திற்கும் மூலம் என்று கதைகட்டுகிறது. அதையே பிராமணர்கள் ஆரியர் வழித்தோன்றி யவர்கள் என்று கூறவும் செய்கிறது. உண்மை மறைக்கப்படுகிறது. ஆனால், உபநிஷதங்கள் சத்திரியர் களால் உருவாக்கப்பட்டவை. அதனாலேயே அரசு உருவாக்கத்தில் யாகங்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டது. அதனால் தான் வேதகாலத்திற்குப் பிறகு ஸ்ருதி வழிபாட்டுமுறை முதன்மைப்பட்டது. ஸ்ருதி வழி பாட்டு முறைக்கும், வேதகால வழிபாட்டு முறைக்கு மான முட்டல் மோதலை ரிக்வேதத்தில் வரும் மீமாம் சகனின் பாடல்கள் மூலம் அறியலாம்.

ஸ்மிருதியாகக் கருதப்படும் பகவத்கீதை மகாபாரதத்தில் இணைக்கப்பட்டதால்தான் மகாபாரதம் ஐந்தாவது வேதம் என அழைக்கப்படும் நிலையைப் பெற்றது. இது திட்டமிடப்பட்ட ஓர் உருவாக்கமே என்பதில் ஐயமில்லை. அது பிராமணர்களாலும் சத்ரியர்களாலும்தான் நிகழ்ந்திருக்கமுடியும். ஆகவே, இந்துமதத்தைப் பிராமண வர்ணத்தில் மதம் என்று மட்டும் கருதமுடியாது. இன்றைய நிலையில் பிராமணர் மற்றும் ஆளும் வர்க்கமதமாகத்தான் அதைப் பார்க்க முடியும். பிராமணியத்தை ஏற்காதவர்களையும் கடவுள் நம்பிக்கை இல்லாவர்களையும் கூட இந்துக்கள் என்று கணக்கெடுக்கும் மோசடி நடந்து வருகிறது.

‘கீதை நூலாசிரியர் நெஞ்சம்’ (பக்கம் 95) எனும் 12வது உள்தலைப்புத் தேவையில்லாதது மட்டும் இல்லை, ‘ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் கீதை’ (பக்கம் 33) எனும் 4வது உட்தலைப்புக்கு மாறானது. இந்தத்தலைப்புத் தேவைதான் என்று நூலாசிரியர் கருதுவாராயின் அங்கதமாகச் சொல்லப்படும் கருத்துக் கள் கொடுங்கோன்மையை வளர்க்கவும் பயன்படுத்த முடியும் என்றாகிவிடும். அங்கதத்தின் தேவை அடிப் பட்டுப்போகும்.

மேலும் அங்கதம் என்பது புகழ்வதுபோல் இகழ்வதாகும். கீதையின் தலைவன் தன்னைப்பற்றித் தானே கூறுவதாகும். தன்னைத் தானே புகழ்ந்துகொள்வதையும் மிகைப்படுத்திக் கூறிக்கொள்வதையும் தறுக்குரை என்றுதான் கூறவேண்டுமே தவிர அங்கத மென்று கூறமுடியாது. ஐம்புலன்களால் உணர முடியாத சாதாரண அறிவாலும் உணரமுடியாத ஞானநிலையிலேயே அறியமுடியும், உணர முடியும் என்று சொல்லப்படுகிற கடவுள் தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளாவிட்டால் ஞானிகள் கூற்றை மட்டுமே நம்பவேண்டியிருக்கும். கடவுளே அர்ச்சுணனுக்குக் கூறுவதால் எளியமக்களுக்கு நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. அது தறுக்குரையாகவும் தோன்றாது.

ஆகவே, கீதையை எழுதியவர் ஒருவரோ, பலரோ மக்களை ஏமாற்றும் நோக்கில் நயவஞ்சக உணர்வோடு கடவுளே கூறுவதுபோல்எழுதிச் சேர்த்துள்ளனர் என்பதே உண்மை. எனவே 12வது உள்தலைப்பு இந்த நூலின் உள்ளடக்கத்திலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளதை உணர்ந்து நூலாசிரியர் திரும்பப் பெற்றுக்கொண்டால் குழப்பமற்ற ஒரு நல்ல ஆய்வு நூலாகவே விளங்கும் என்பதில் ஐயமில்லை.



எல்லைத்தமிழன் கவிதைகள்

மழையை ரசித்தல்

குடையை பிடித்துக் கொண்டு அல்ல
மழையில் நனைந்து கொண்டே
மழையில் ரசிப்பது தான் அமர்க்கு அழகு
என்கிறார் புட்டா*
மழையில் நனைந்து கொண்டே
உழுகிறான் உழவன்
மழையில் நனைந்து கொண்டே
படுத்துக் கிடக்கிறான் பாதசாரி
மழையில் நனைந்து கொண்டே
வாழ்கிறார்கள் ஏழைகள்.

* புட்டா: கவிஞர் விக்ரமாதித்யனின் மற்றொரு புனைபெயர்

பறத்தல்

பறக்கத் தயாராகும் பருவத்தில்
கனவுத்தீ படர்ந்து பிடிக்கும்
இனிக்கும் தீயின் ஆவல்
உடல் முழுக்க பரவி
சிறகுகள் அசையும்
பறத்தலில்
காற்றின் அலைக்கழிப்பும்
மரக்கிளைகளின் தடையும்
மேகங்களின் வேகமும்
சிறகுகளை வலுவாக்கும்
அல்லாதவற்றின் சிறகுகள்
முறிந்து தொங்கும்

நண்பர்களும் எதிரிகளும்

எதிரிகளுடனான சண்டையை
நண்பனிடம் விளக்கிக் கொண்டிருந்தேன்
சண்டைக்கான காரணங்கள்
வலுவாக இருக்கின்றன
எல்லா சண்டைகளும்
காரணங்களுடன் தான் நிகழ்கின்றன
நேற்று நெருக்கமாக நடந்தவர்கள்
பிரியமும் அன்பும் கொண்டவர்கள்
இன்று கீரியும் பாம்பும்
நேற்றைய நண்பர்கள் தான்
இன்றைய எதிரிகள்
இன்றைய எதிரிகள்
நாளை நண்பர்கள் ஆகலாம்
ரணக்கீறல்களுடன் பிரிந்தோம்
பேச்சின் முடிவில்

இரவின் மடி

வெளியெங்கும் நிசப்தம்
குடிகொண்டிருந்த போதும்
மனக்கதவுகள்
மூட மறுக்கும் வேளைகளில்
தூக்கம் ஏழேழு கடல் தாண்டி சென்று விடுகிறது
பாடுகள் சுமந்து எப்போதும்
சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்
இயேசுவைப் போல
சிலுவையில் அறையப்படுகிறது எனது தூக்கமும்
புரண்டு புரண்டு நினைவுகள் அகற்றியும்
மண்டை சூடாகி தகிக்கிறது
நிகழ்வுகளின் காயங்ளில் வெடித்துக் கிளம்பும்
புதிய பாதை
படைப்பின் மூலவேர்கள் தேடி அலையும்
மானிடப் பரப்பின்
அயர்ந்து தூங்கும் பின்னிரவு
காகங்களின் கரைதலில்
விழித்தெழும் காலை.



சிக்கல்- சு.தமிழ்ச்செல்வி


லில்லி டீச்சருக்கு தினந்தோறும் இது ஒரு பெரும் பிரச்சனையாய் போய்விட்டது. படுக்கையை விட்டு மகள் ஜெனிட்டா எழுந்துவிட்டால் போதும். ஆறு மணியிலிருந்து ஏழரை எட்டுவரைகூட மகளோடு கழிப்பறையில் மல்லுக்கட்ட வேண்டியதாயிருக்கிறது. பருப்பை ஓர் அடுப்பிலும் பாலை மற்றோர் அடுப்பிலும் வைத்துவிட்டு வந்து மகள் எழுந்து விட்டாளா என்று பார்த்தாள். அவள் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். சில சமயம் விழித்துக் கொண்டாலுமே கூட தூங்குவது போல் பாவனை செய்யக்கூடியவள்.
“ஜெனி... ஜெனி....”
“ம்”
“எழுந்திருக்கல?”
“ம்... எழும்புறம்மா.”
“பொழுது விடிஞ்சிடுத்துடி எழுந்துரு”
ஜெனிட்டா சோம்பல் முறித்து எழுந்து உட்கார்ந்தாள்.
“பல் வெளக்கிட்டு வா. பால் தாறேன்.”
லில்லியின் கணவன் சேவியர் காலையிலேயே எழுந்து சாம்பாருக்கு தேவையான வெங்காயம், காய் இவற்றை நறுக்கி வைத்துவிட்டு நடைப்பயிற்சிக்குப் போயிருந்தான். அதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைப்பவன். காபி, டீ எதையும் வீட்டில் அவன் எதிர்பார்ப்பதில்லை. வழியில் ஏதாவது ஒரு கடையில் குடித்துக்கொள்வான். இதைக்கூட அவன் லில்லிக்கு செய்யும் உபகாரமாய் நினைத்தான்.
லில்லிக்குத்தான் நிறைய தலைவலி. காலைச் சிற்றுண்டி, மதியச்சாப்பாடு செய்யவேண்டும். அடுக்குக் குவளைகளில் மகளுக்கும் கணவனுக்கும் தனக்கும் தனித்தனியாய் எடுத்துவைக்க வேண்டும். பாட்டில் தேடி தண்ணீர் நிரப்பி, துண்டுதேடி, பைதேடி... இதெல்லாம் போதாதென்று ஜெனிட்டாவின் குடலோடு வேறு தினமும் குத்துச்சண்டை நடத்த வேண்டிருக்கிறது லில்லிக்கு. ஜெனிட்டாவை கழிப்பறைக்கு அனுப்புவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. பலி பீடத்துக்குப் போக பயந்து பின்னுக்கு இழுக்கும் ஆட்டைப்போல பார்க்க பாவமாக இருக்கும். என்ன செய்து தொலைப்பதென்று எதுவும் புரியாமல் விழிப்பாள் லில்லி.
அப்படி என்னதான் இருக்குமோ அவள்குடலில். இம்மியும் இளகிக்கொடுக்காத கல்குடல். எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தாகிவிட்டது. ஜெனிட்டாவுக்கு குடல் பிரச்சனை ஒரு பங்கென்றால் வலிக்கும் என்ற பயம் பத்து பங்காக இருந்து காலைக்கடன் கழிப்பதே பெரும் சிக்கலாகிக் கொண்டிருந்தது. கழிப்பறைக்குள் கால்வைக்கக்கூட பயந்தாள் ஜெனிட்டா.
‘நாட்டுல ஒரு டாக்டர் கூடவா ஒழுங்கா படிச்சி வந்திருக்க மாட்டாங்க. தினசரி காலையில குழந்தைய வெளிக்கு போக வைக்க முடியாத டாக்டருங்க என்ன படிச்சிட்டு வந்திருப்பாங்க.’ லில்லியின் கையாலாகாத்தனம் மருத்துவர்களின் மீது கோபமாகத் திரும்பும்.
ஜெனிட்டா குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே அவளுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. குழந்தை தினமும் வெளிக்குப் போகாது. மலம் இறுகிக் கொள்ளும். அப்போதெல்லாம் குழந்தையைக் காலில் போட்டு முருங்கைக் கீரையின் சிறு காம்பை ஓட்டைக்குள்விட்டு பிடித்துக்கொள்வாள். முருங்கைக் காம்பு வைத்த ஓரிரு நிமிடங்களுக்குள் மலம் எவ்வளவு இறுகி இருந்தாலும் வந்துவிடும். இருப்பினும் மலத்துளையைக் சுற்றி தெறிப்புகள் ஏற்பட்டு ரத்தம் கசிவதை தடுக்க முடியாது. பிறகு அதற்கு மருந்து தடவிக்கொண்டிருப்பாள் லில்லி.
ஜெனிட்டாவை மழலையர் பள்ளியில் சேர்த்த பிறகு முருங்கைக் குச்சி மருத்துவம் முடியாமல் போய் விட்டது. தான் வளர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்வாளோ என்னவோ காலில் உட்காராமல் ஆட்டம் காட்ட ஆரம்பித்து விட்டாள். இப்போது இரண்டாம் வகுப்பிற்கு வந்துவிட்டாள். மருத்துவர்கள் அவ்வப்போது நீட்டு நீட்டான மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறார்கள். அதை மலத்துளைக்குள் விடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அப்படியும் இரண்டு நாட்களுக்குத்தான் நிவாரணம் கிடைக்கிறது. வளர்ந்தால் சரியாகிவிடும் என்கிறார்கள். கீரையும் பாலும் முட்டையும் நிறையக் கொடுக்கச் சொல்கிறார்கள். லில்லியும் கொடுத்துத்தான் பார்க்கிறாள். இவற்றை விடவும் கடை பண்டங்களைத்தான் ஜெனிட்டா அதிகமாய் விரும்பித் தின்று தொலைக்கிறாள். ஒரே பெண்பிள்ளை விரும்பித் தின்பதை வாங்கிக் கொடுக்காமலும் இருக்க முடியவில்லை.
அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு பாலை ஆற்றியபடி ஜெனிட்டாவைக் கூப்பிட்டாள். போராட்ட நேரம் ஆரம்பமாகப் போகிறதே என்ற ஒருவிதமான மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தவள். “என்னம்மா?” என்றாள்.
“பல் வெளக்கிட்டல்ல”
“ம்”
“இந்தா இதக்குடி”
கவனமாய் பால் டம்ளரை வாங்கிக் கொண்டவள் லில்லியின் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தாள்.
“நல்லா ஆத்திட்டன். சுடாது. சீக்கிரமாக் குடி.”
“ம்”
“வெண்டைக்காய் நறுக்கணும். என்னால நின்னுட்டு இருக்க முடியாது. குடிச்சிட்டு வா சீக்கிரமா” சமையலறைக்குத் திரும்பினாள்.
“அம்மா”
“என்னடி?”
“இன்னக்கி எனக்கு ஆய் வரல்லம்மா”
“என்னக்கித்தான்டி ஒனக்கு அது தானா வந்துச்சி?”
“...”
“எப்பத்தான் இந்த பிரச்சனைத் தீருமோத் தெரியலையே ஆண்டவரே” அருவாமனையை எடுத்துவைத்து கழுவிய வெண்டைக்காய்களை நறுக்க ஆரம்பித்தாள்.
“ஜெனி இன்னுமா பால் குடிக்கிற?”
“இன்னும் கொஞ்சம் இருக்கும்மா”
“குடி மடக்கு மடக்குன்னு”
“ரொம்ப ஆறிப்பொயிட்டுதும்மா. வயத்தப் பெரட்டுது”
“வெத வெதன்னு குடுத்தா சூடா இருக்கு குடிக்க முடியலம்பே. ஆத்திக்குடுத்தா சில்லுன்னு இருக்கு கொமட்டுதும்ப. நீ என்னக்கித்தான் நல்லாருக்குன்னு சொல்லி குடிச்சிருக்குற. சீக்கிரம் குடி.”
“எனக்குப் போதும்மா”
“குடிடி எல்லாத்தையும் குடிச்சாத்தான் ஆய் வரும்”
“அம்மா இன்னக்கி மட்டும் வேண்டாம்மா. எனக்கு ஆயி வரலம்மா”
“இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம். நீ பாலக்குடிச்சிட்டு இப்ப பாத்ரூமுக்குள்ள போவணும் சொல்லிட்டன். நேத்தைக்கு முழுசா வயத்தவிட்டு கழிஞ்சிருந்தாக் கூடஇன்னக்கி, இருந்துட்டுப்போன்னு விட்டுடலாம். ஆட்டாம் புழுக்கையாட்டம் ரெண்டு வந்து விழுந்துது. அதோட எழும்பிட்ட. இன்னக்கிம் இருக்கலன்னா என்ன அர்த்தம்”
“ஆண்டவர் மேல சத்தியமா எனக்கு ஆயி வரல்லம்மா”
“சத்தியம் பண்றியா நீ. ஏற்கெனவே ஓம் ஒடம்புல முக்காவாசி கல்லாவே இருக்கு. இதுல ஆண்டவர்மேல ஆணயிட்டு வேற சத்தியம் பண்றியா? ஒனக்கும் ஒப்பனுக்கும் ஈவு எறக்கங்குறதே இருக்காதாடி. ஒரு பொட்டச்சி கெடந்து புள்ளக்கிட்ட எவ்வளவு போராடுறாள்னு ஒப்பனும் பாவப்பட மாட்டேங்கிறான். நம்ப அம்மா இவ்வளவு கெஞ்சி கூத்தாடுதேன்னு ஓந்நெஞ்சிலயும் சொரக்கமாட்டங்குது. நான் என்னடி பாவம் பண்ணினேன். ஒங்க ரெண்டு பேருக்கிட்டயும் நான் ஒவ்வொரு நாளும் நரகத்த அனுபவிக்கிறன் தெரியுமாடி. ஆண்டவரே என்னை எதுக்காக இப்படி சோதிக்கிற.”
தன் அம்மா புலம்புவதை சகித்துக்கொள்ள முடியாத ஜெனிட்டா “சரிம்மா நான் பாத்ரூமுக்குப் போறன்” என்று எழுந்து வந்தாள். சமையல்கட்டை அடுத்திருந்த கழிப்பறையுடன் கூடிய குளியலறைக்குள் நுழைந்தாள்.
“ஜெனி இரு இந்தா இத வாங்கிட்டு போடி”
“பேப்பர் வேண்டாம்மா. நான் டாய்லெட் பேஷின்லயே போயிக்கிர்றன்”
“அதெல்லாம் வேணாம். நீ எப்பவும் போல பேப்பர்லயே போ நீ போனியா போகலையான்னு எனக்குத் தெரிய வேணாம்”
“நான் சொல்றம்மா”
“நீ ஒண்ணும் சொல்ல வேணாம். நானே பாத்துக்கிர்றன். நீ பேப்பர்லயே போ”
முறைப்புடன் தாளை வாங்கிக்கொண்டவள் கோபத்தில் படீரென கதவை அடித்துச் சாத்தினாள்.
“பாத்துடி. கதவு ஒடஞ்சிடப்போகுது. வீட்டுக்காரங்ளுக்கு காதில விழுந்துட்டா அப்பறம் அதுக்குவேற நான் விளக்கம் சொல்லிக்கிட்டு நிக்கணும். இப்ப அதுக்கெல்லாம் நேரம் இருக்காச் சொல்லு.”
விசில்வந்த குக்கரை இறக்கி வைத்துவிட்டு வெங்காயம் தக்காளி வதக்கிக்கொட்டி புளிக்கரைசல் சேர்த்து சாம்பாரை கொதிக்கவிட்டாள். ரசத்திற்காக சூடான பருப்புத் தண்ணீருக்குள் முழு தக்காளியை எடுத்துப் போட்டிருந்தாள். ரசம் வைக்க வேண்டும், வெண்டைக்காய் வதக்கவேண்டும். கடைசியாய் ஆளுக்கு இரண்டு தோசை ஊற்றவேண்டும். எத்தனையைச் செய்வது? ரசமும் வெண்டைக்காய் பொரியலும் மட்டும் இருந்தாலே போதும். அவளும் ஜெனிட்டாவும் பெரும்பாலும் ரசத்தில்தான் சாப்பிடுவார்கள். சாம்பார் என்றால் ஜெனிட்டாவுக்கு ஆகவே ஆகாது. லில்லிக்கும் சிலசமயம் பிடிக்காமல்தான் போய்விடுகிறது. காரசாரமாய் வத்தல் குழம்போ, புளிக்குழம்போ வைத்தால் இரண்டு வாய் அதிகமாய்ச் சாப்பிடலாமென்று தோன்றும். ஆனால் அவளின் கணவன் சேவியருக்கு சாம்பாரைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது. தினமும் பருப்பை கடைந்து காய்போட்டு வேகவைத்து இறக்கி வைத்துவிட வேண்டும். மூன்று வேளைக்குமே சோறும் சாம்பாரும் கொடுத்தாலும் தின்றுவிட்டுக் கிடப்பான்.
“ஜெனி”
“என்னம்மா?”
“என்னடி பண்ற உள்ள?”
“ஆயி இருக்கப் போறம்மா”
“நீ ஒக்காந்திருக்கிற மாதிரி தெரியலையே. நின்னுக்கிட்டுல்ல இருக்கிற”
“சுவத்தில பெரிய பல்லி ஒண்ணு தாவுச்சிம்மா. அதான் எழுந்தன்”
“சரி ஒக்காந்து இரு”
“ம்”
‘கதவை மூடி வைத்துவிட்டுக்கூட உள்ளே நிம்மதியாய் நிற்க முடியவில்லையே ஆண்டவரே’ முணுமுணுத்துக் கொண்டாள் ஜெனிட்டா.
இந்நேரம் இந்த ஜெனிட்டா குமாரமங்கலம் சுந்தரமூர்த்தி அய்யங்கார் வீட்டு வாரிசாய்ப் பிறந்திருந்தால் இதுபோன்ற பிரச்சனையெல்லாம் அங்கேயும் ஏற்பட்டிருக்குமா என்று ஒரு கணம் நினைத்தாள் லில்லி. இதுபோல் ஒவ்வொரு சம்பவத்தையும் அந்தக் குடும்பத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்கும் பழக்கம் லில்லிக்கு எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இப்போது இது மட்டும்தான் அவளால் முடிகிறது. வேறு என்ன செய்வது? எல்லாமேதான் நடந்துமுடிந்து விட்டதே. திரண்டு வந்த கார்மேகம் மழை பெய்யாமலே கலைந்து போனதைப் போல லில்லி கண்ட கனவுகள் அனைத்தும் வீணாய் சிதைந்து போய்விட்டதே.
லில்லி படித்த அதே பள்ளியில் அதே வகுப்பில்தான் ரெட்டைத்தெரு ராமானுஜ அய்யங்கார் மகள் வனஜாவும் படித்தாள். ஏழாம் வகுப்பிலிருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம். வகுப்பில் அவளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மற்ற ஆசிரியர்கள் அவளிடம் காட்டும் அக்கறை ஆகியவற்றை பார்த்த லில்லி வனஜா பேசும் அய்யங்கார் ஆத்து பாஷையும் அவளுடைய பழக்கவழக்கங்களும் ரெண்டும் கெட்டானாய் இருந்த லில்லியைக் கவர்ந்துவிட்டன.
வனஜாவின் பாஷையை தானும் ஓரளவு பேச கற்றுக் கொண்டாள் லில்லி. போதாக்குறைக்கு கடவுளின் அருள் பெற்ற பிள்ளைகள் மட்டும் தான் அய்யங்கார் ஆத்தில் வந்து பிறப்பார்கள் என்றும் வனஜா அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தாள். இது தானொரு அய்யங்கார் வீட்டு பெண்ணாய்ப் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை லில்லியின் மனதில் ஏற்படச் செய்திருந்தது. வனஜாவைப் போலவே நடந்துகொள்ள ஆசைப்பட்டாள். மீன், முட்டை, கறி இவற்றை ஒதுக்கியதோடு அவற்றைக் கண்டால் குமட்டவும் செய்தாள். இவைகளை விரும்பிச் சாப்பிடும் தன் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் ஒருவிதமான அசூயையுடன் பார்த்தாள் தான் ஒரு மதம் மாறிய கிருத்துவப் பெண் என்ற அடையாளத்தை சிரமப்பட்டு மறைக்க முயற்சித்தாள்.
ஆசிரியர் பயிற்சி படிக்க லில்லி வனஜாவைப் பிரிந்து கடலூர் சென்றுவிட்ட போதும் வனஜாவை மட்டுமே அவள் உற்ற தோழியாய் நினைத்தாள்.
கடவுளின் அருள்பெற்ற வனஜாவை ஒருநாள் தற்செயலாய் சினிமாக்கொட்டகை வாசலில் பார்த்தாள் லில்லி. அவள் வேறொரு ஆணுடன் தோள்கள் உரச உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தாள். லில்லி அதைப்பார்த்து அதிர்ந்துதான் போனாள்.
“என்ன வனஜா நீ இவன்கூட வந்திருக்கிற?”
“ஏய் அவன் இவன்னு ஏக வசனத்துல பேசாதடி. காதுல விழுந்துடப்போறது. அவரு இப்ப தாலுக்கா ஆபீஸ்ல நல்ல வேலயில இருக்கார் தெரியுமோ. மாதம் பதினெட்டாயிரம் சம்பளம் வாங்குறாராக்கும்”
“வாங்கட்டுமே அதுக்காக நீ ஏண்டி அவன்கூட வரணும்?”
“என்ன இது கேள்வி. சும்மா பொழுதுபோகாமயா நான் சுத்தறேன். நாங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறம்.”
“வீட்டுக்குத் தெரியுமா?”
“ஒனக்குத் தெரியாதா? எங்கக்கா கூட இப்படித்தான் வேற ஜாதிக்காரன விரும்பி வீட்டுக்குத் தெரியாமே கல்யாணம் பண்ணிண்டா. இப்ப திருக்கோவிலூருல ஜம்முன்னு வாழறா”
“அதிருக்கட்டும் ஒங்க வீட்டுல இதுக்கு ஒத்துக்குவாங்களாடி?”
“திரும்பத்திரும்ப என்ன இது கேள்வி. யாரு ஒத்துக்கணுங்கிற? நான் இவர்கூடத்தான் வாழப்போறன். இவர் ஒத்துண்டா போறாதா?” என்றவள்
“கல்யாணத்துக்குப் பிறகு சொல்றன். ஒருநாள் எங்க ஆத்துக்கு வந்துட்டுப் போ” என்றவாறே அவனுடன் வண்டியில் ஏறிப்போய்விட்டாள்.
குடும்ப மானத்தையும் கௌரவத்தையும் கட்டிக் காக்க வேண்டிய பெண் இப்படி பொறுப்பில்லாமல் போகிறாளே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாள் லில்லி.
படிப்பு முடிந்த ஓராண்டுக்குள் லில்லிக்கு திருவண்ணாமலைப் பக்கம் வேலையும் கிடைத்தது. மேற்கொண்டு அஞ்சல் வழியில் படிக்க விண்ணப்பித்திருந்தாள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இளங்கலை கணிதம் எடுத்துப் படித்தாள். செமினார் வகுப்புகளுக்கு திருவண்ணாமலைக்குச் செல்வாள். வகுப்பில் வைத்துத்தான் முதன் முதலில் விக்னேஷ்வரனை சந்தித்தாள். பக்கத்து பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து வகுப்பைக் கவனித்தார்கள். அடிக்கடி இவளைப் பார்த்து புன்னகைத்தான். நெற்றிப்பட்டையும் கழுத்தை ஒட்டி தொங்கிக்கொண்டிருந்த ஒற்றை ருத்ராட்சக் கொட்டையும் பதிலுக்கு இவளையும் புன்னகைக்க வைத்தது.
இரண்டொரு நாளில் வனஜாவின் பிரிவை ஈடுசெய்வதாய் இருக்கும் இவனது நட்பு என்று நம்பினாள். நன்றாகப் பேசினான் அவன். வனஜா பேசும் அதே பாஷையில் இனிக்க இனிக்க அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத்தோன்றும் லில்லிக்கு. நாளாவட்டத்தில் அவன் உரிமையோடு அவளைத் தொட்டுத் தொட்டு பேசவும் ஆரம்பித்தான். லில்லிக்கு அப்படி அவன் நடந்துகொள்வதுகூட உள்ளுர மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது. அவனிடமிருந்து விலகிநின்று பழக வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.
தனிமையில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் தன் வீட்டிற்கு வந்த பிறகு லில்லி கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் முக்கியமான பூஜைகளின்போது சொல்ல வேண்டிய சுலோகங்கள் பற்றியும் ஒவ் வொன்றாக அவளுக்குக் கற்றுக்கொடுத்தான். மூன்றாண்டு முடிவில் கல்யாணம் பற்றி பேசும் போது தான் விக்னேஷ்வரன் வீட்டில் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது லில்லிக்கு தெரியவந்தது. இவ்வளவு ஆசைஆசையாய் பழகி கடைசியில் பிரிவதா? லில்லியால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லா கனவிலும் மண் விழுந்துவிட்டது என்று கலங்கித் தவித்தாள்.
கடைசியாய் சந்தித்தபோது விக்னேஷ்வரன் சிறியதொருபிள்ளையாரைக் கொடுத்து “லில்லி இது எங்க தாத்தாவோட அப்பா காலத்துலேருந்து எங்காத்து பூஜை அறையில் இருந்தது. இத என்னோட ஞாபகமா நீ வச்சிக்க. ஒனக்கு ஏதாவது கஷ்டம் வந்தாக்கூட இத எடுத்து கைல வச்சிக்கிட்டு நான் சொல்லிக்கொடுத்த சுலோகத்த சொல்லு. கஷ்டமெல்லாம் வெலகிடும். மனசார நான் ஒன்ன விரும்பினதுக்கு என்னால செய்ய முடிஞ்சது இது மட்டும்தான். என்ன மன்னிச்சிடு லில்லி” என்று தழுதழுத்தான் அவனின் கலங்கிய கண்களைப்பார்த்து நெகிழ்ந்து போய்விட்டாள் லில்லி. “பரவால்ல, நீங்க அழுதா, என்னால அத தாங்கிக்க முடியாது. நான் எப்பவும் ஒங்கள நெனச்சிட்டேத்தான் இருப்பேன்.” என்று பதிலுக்கு இவளும் உணர்ச்சிகளை கொட்டிவிட்டு பெருந்தன்மையோடு பிரிந்துவந்து விட்டாள்.
லில்லியால் நிம்மதியாய் இருக்கமுடியவில்லை. தன் தோழி வனஜாவிடம் பிரச்சனையை சொல்லிப் பார்க்கலாமா என்று நினைத்தாள் அவள் மூலமாக ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்குமென்ற நப்பாசையில் அவள் வீட்டுக்குப் போனாள்.
வனஜா அதற்குள் இரண்டு பிள்ளைகளை பெற்றிருந்தாள். இரண்டும் நல்ல சூட்டிகையாய் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தன. வனஜாவை ஒரு ராணியைப்போல் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் அவளுடைய கணவன்.
பேச்சை ஆரம்பித்து மெதுவாக தன் விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள் லில்லி. எல்லாவற்றையும் கேட்ட பிறகு. “எங்கிட்ட ஒரு வார்த்த இதப்பத்தி சொல்லியிருந்தா முன்கூட்டியே நான் ஒன்ன தடுத்திருப்பனே. இப்படி ஏமாந்திட்டியேடி” என்று லில்லிக்காக உண்மையாகவே வருந்தினாள் வனஜா.
“நீயெல்லாம் வேறு ஆள கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழலயா. எனக்கு மட்டும் ஏண்டி இப்படி?”
மெதுவாக இவளின் காதோரம் குனிந்து.
“எங்க மனுஷாள் தம் வீட்டு பொண்ணுங்க எந்த கீழ்சாதி பையன விரும்பினாலும் கல்யாணம் பண்ணிண்டு தொலையட்டுமுன்னு விட்டுடுவாங்க. ஆனா ஆண்பிள்ளைகள மட்டும் அப்படி ஒருநாளும் விடவே மாட்டாங்க. குலம் கோத்திரம், பதினாறு பொருத்தம் எல்லாம் பாத்துதான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. எங்க பையனுங்க வேற பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சி நீ எங்கயாவது பாத்திருக்கிறியா சொல்லு”
மௌனமாய் உட்கார்ந்திருந்தாள் லில்லி.
“வேத்தாள ஆத்துக்குள்ளயே சேக்கமாட்டாங்க. அதுவும் மாட்டுப்பொண்ணா சேக்கணுமுன்னா முடியுமா சொல்லு”
தன்னை விக்னேஷ்வரன் ஏன் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதற்கான காரணம்கூட லில்லிக்கு நியாயமாக தெரிந்தது. வேறுவழியில்லை என்று நினைத்து தன் மனதை தேற்றிக் கொண்டாள்.
பிறகு வீட்டில் ஏற்பாடு செய்த சேவியருடன் மோதிரம் மாற்றிக்கொண்டு அவனுக்கு மனைவியான போதும் விக்னேஷ்வரன் கொடுத்த பிள்ளையாரை மட்டும் மறக்காமல் தன்னுடனே வைத்துக் கொண்டாள். மரப்பிள்ளையாரும் சுலோகமும் அவளுக்கு அவ்வப்போது கைகொடுத்து உதவியதாகவும் நம்பினாள்.
தன் மகள் ஜெனிட்டாவின் கையில் அந்த பிள்ளையாரைக்கொடுத்து சுலோகத்தை சொல்லச்செய்யலாமா என்று அடிக்கடி தோன்றும். அவள் தன் அப்பாவிடம் சொல்லி ஏதாவது புதுப்பிரச்சினை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இது நாள் வரை அப்படி செய்யாதிருந்தாள். ஆனால் இனிமேலும் யோசிக்கக்கூடாது. இன்றைக்கு அதை செய்துவிட வேண்டும். ஜெனிட்டாவே கூட இது என்ன ஏதென்று ஆயிரம் கேள்விகளைக் கேட்கலாம். கேட்கட்டும். கேள்விக்கு பதில் சொல்வது முக்கியமில்லை. நமக்கு காரியம் நடந்தாக வேண்டும். அதுதான் முக்கியம் என்று நினைத்தவள்.
“ஜெனி” என்றாள் கழிப்பறையைப் பார்த்து.
“ம்”
“என்ன ஆச்சா?”
“இன்னும் இல்லம்மா.”
“இரு வர்றன்.” என்றவள் அலமாரியில் மறைத்து வைத்திருக்கும் பிள்ளையாரை எடுத்துவரப் போனாள். அதே நேரம் “லில்லி தயிர் வேணுமா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் சேவியர்
“ரெண்டு ரூபாய்க்கு வாங்குங்க” என்றவள் ‘போச்சி இவன் வந்துட்டான். இன்னக்கும் முடியாது’ என்று தனக்குள்ளே அலுத்துக்கொண்டாள்.
“மணி எட்டு ஆயிடுத்துடி ஜெனி... இனிமே எப்ப குளிக்கிறது எப்ப சாப்பிடுறது. தலவேற கட்டணும்.” சத்தம் போட்டாள்.
“நான் குளிக்கிறம்மா”
“இன்னொரு தடவ ஒக்காந்து பாரு ஜெனி”
“....”
“கிருமிகள் ரெத்தத்துல கலந்துரும் ஜெனி.”
“முடியலம்மா வலிக்குது.”
“ஒக்காந்து ட்ரை பண்ணி பாரு ஜெனி”
கழிப்பறைக்குள்ளிருந்து அழும்குரல் கேட்டது.
“என்ன ஜெனி அழுவுறியா?”
இன்னும் சற்று உரக்க தேம்பினாள் அவள்.
“கதவ தொற ஜெனி. இப்ப எதுக்கு அழுவுற?”
ஜெனிதா கதவைத் திறந்து பேப்பரைக் காட்டிவிட்டு மேலும் சத்தமாய் அழுதாள். பேப்பரில் இரண்டு மூன்று சொட்டு ரெத்தம் மட்டும் இருந்தது.
“எப்பவும்தான் ரெத்தம் வரும். அதோட டாய்லெட்டும் வந்துரும். இன்னக்கி ரெத்தம் மட்டும் வந்துருக்கு. உள்ள இழுத்துக்கிட்டியாடி. இறுக்கி இறுக்கிவச்சி என்னடி பண்ணப்போற. அய்யோ கடவுளே... ஆண்டவரே... என்னால தாங்க முடியலயே...” தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள் லில்லி.
இவற்றையெல்லாம் கவனித்தபடியே தயிரை வாங்கிவந்து வைத்த சேவியர் “லில்லி அவள விடு. நீ பள்ளிக்கொடம் கௌம்புற வேலயப்பாரு” என்றான்.
திரும்பி இவனைப் பார்த்தாள்.
“நானும் ஜெனியும் ஊருக்குப் போறம். நம்ம கொல்லயில இன்னக்கி அறுப்பு அறுக்குதாம். எங்கப்பா வரச்சொல்லி பேசுனாங்க”
“பள்ளிக்கொடம்?”
“நான் ஒரு வாரத்துக்கு மெடிக்கல் லீவு வரும்போதே பாபு வாத்தியார்கிட்ட குடுத்துட்டு வந்துட்டன்.”
“அப்ப ஜெனி?”
“அவளுக்கும் ஒரு வாரம் லீவு சொல்லிட வேண்டியது தான்.”
“என்னங்க இப்புடி திடீருன்னு?”
அதான் சொன்னேன்ல. அறுப்பு அறுக்குதாம். அண்ணங்க யாரும் வீட்டுக்கு வரலயாம். எங்கப்பா பாவம். வயசானவங்க அவங்க. என்ன செய்வாங்க. இந்த முறை நான்தான் போகணும்.”
“ஜெனி எதுக்கு?”
“நான் மட்டுந்தான் போவமுன்னு நெனச்சன். இப்பத்தான் இவளயும் கூட்டிப் போகலாமுன்னு தோணுச்சி. பாவம் தெனமுந்தான் °கூல் போறா. ஒரு வாரம் ஊருல வந்து இருக்கட்டுமே. பக்கத்துவீட்டு புள்ளங்ககூட விளையாடிட்டு வரட்டும். கிராமத்து அனுபவமும் அவளுக்கு கெடச்ச மாதிரி இருக்கும்”
“அப்ப நான் மட்டும் தனியா இருக்கணுமா?”
“நீயும் வேணுன்னாலும் லீவு போட்டுட்டு வாயேன்”
“அதெல்லாம் முடியாது. எங்க ஸ்கூல்ல ஏற்கனவே ரெண்டு பேரு மெடிக்கல் லீவுல இருக்காங்க”
“அப்பன்னா சனிக்கெழம வா. நாங்க இப்ப போறம்.”
“ஜெனி இப்படி இருக்காளே”
“அவள நான் பாத்துக்கிர்றன்.”
“அவ வயிறு ரெண்டுநாளா ரொம்ப சிக்கலாருக்குங்க.”
“நான் பாத்துக்கிர்றன்.”
“ஒங்கக்கிட்ட கூச்சப்படுவாங்க.”
“அத விடு. எங்கம்மா இருக்காங்கல்ல. அவங்க பாத்துப்பாங்க. இப்ப அவள யாங்கூட கிளப்பி விடு.”
“போற வழியில நெல்லை விநாயகா ஸ்வீட் ஸ்டால்ல கொஞ்சம் தின்பண்டம் வாங்கிக்கிட்டு போங்க.”
“ஊருல இல்லாத தின்பண்டமா?”
“ஒரு வாரம். ஒண்ணுமில்லாட்டி ஏங்கிப் போயிடுவாங்க.”
“எனக்குத் தெரியாதா, கொல்லய சுத்தி சோளம் வெளஞ்சிநிக்கிது. களத்துமேட்டுல ஒருபக்கம் பயத்தங்கா. இன்னொரு பக்கம் தொவரை. கேப்ப கருதும் கம்மங்கருதும் வாட்டிக்குடுப்பாங்க எங்கம்மா. அந்த வாசனயே அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்பா. நீ வேணுன்னா அவளக் கேட்டுப் பாரேன்.”
“ஆமாம்மா அனிதா மேரியக்கா நிச்சயதார்த்தத்துக்குப் போனப்ப எனக்கு ஆயா வாட்டிக் கசக்கிக் குடுத்தாங்கம்மா. ஆனா என்னாலதான் நெறயா திங்க முடியல. அப்பா கூட்டிட்டு வந்துட்டாரு.”
“சரி சரி போதும் போ”
அழைத்துக் கொண்டு போயே விட்டான்.
ஒரு வாரத்திற்கு ஜெனிட்டாவோடு மல்லுக்கட்ட வேண்டியதில்லை என்று சற்று நிம்மதியாய் இருந்த போதும் ஜெனிட்டாவைப் பற்றி கவலையாகவே இருந்தது. ‘கிராமத்தில் போய் தினமும் எப்படி வெளிக்குப் போவாளோ யாரும் பார்க்காமல் இஷ்டப்படி முக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்க பாத்ரூம் வசதிகூட இல்லையே’ இதுவரை ஒவ்வொன்றையும் மகளுக்கு பார்த்துப் பார்த்து தன் கையாலேயே செய்து பழக்கப்பட்டுவிட்டாள் லில்லி. ஜெனிட்டா இல்லாதது வெறுமையாய் இருந்தது. ஊரில் வைத்தே அவளுக்கு இந்தமுறை பிள்ளையார் வைத்தியத்தை செய்துபார்த்துவிடுவது என்று திட்டமிட்டுக் கொண்டாள். சனிக்கிழமை எப்போதும் வரும் என்று காத்திருந்தாள்.
சனிக்கிழமை விடிந்ததும் விடியாததுமாக கிளம்பி விட்டாள். ஊருக்கு வரும் முதல் பேருந்தில் வந்திறங்கி லில்லியை சேவியர் எதிர்கொண்டு அழைத்துப் போனான். வீட்டிற்கு போவதற்குள் ஜெனிட்டாவைப் பற்றி ஆயிரம் விசாரிப்புகள்.
அம்மா வரும் என்று ஜெனிட்டாவுக்கு தெரியும். இருந்தபோதும் எப்போது வருவாள் என்று அதைப் பற்றி அவள் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை. லில்லி வீட்டிற்கு சென்ற நேரத்தில் அவள் வீட்டிலும் இல்லை.
“ஜெனி எங்க அவளக்கூப்பிடுங்க.”
“நீ காப்பி குடிச்சிட்டு வா. நம்ம களத்துமேட்டுக்குப் போவம். ஜெனி அங்கதான் போயிருப்பா.” இருவரும் களத்துமேட்டிற்குப் போனார்கள். லில்லி தன் முந்தானை மறைப்பிற்குள் பிள்ளையாரை எடுத்து வைத்துக்கொண்டு வந்திருந்தாள்.
நெல் பட்டறைகளைக் காட்டி “இந்த வருசம் நல்ல விளைச்சல்” என்றான் சேவியர்.
“அதிருக்கட்டும் ஜெனி எங்கங்க?”
பழைய புதர்மண்டிய திட்டை நோக்கி கையைக் காட்டினான். புதர்களின் மறைவில் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் ஊசியா? உலக்கையா? நூலா? கேட்டுக் கொண்டு தூரமாகவும் பக்கம் பக்கமாகவும் பாவாடையை மழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். முந்தைய இரவில் அவர்களின் பாட்டி சொன்ன ஆறுமரக்கால் பல்லுக்காரன் பிடித்துக் சென்று அடைத்துவைத்துள்ள பிள்ளைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்படியெல்லாம் அந்த பல்லுக்காரனிடமிருந்து தப்பித்து வரலாம் என்று தீவிரமாய் யோசித்து ஆளுக்கு ஒரு யோசனையாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
லில்லி தன் மகள் ஜெனிட்டாவின் குரல் வரும் திசையில் பின்பக்கமாய் சென்று அவர்கள் யாரும் அறியாதவாறு மறைந்து நின்று கொண்டாள். குனிந்து ஜெனிட்டா உட்கார்ந்திருக்கும் இடத்தை உற்று பார்த்தாள்.
ரெத்தம் சிந்தாமல் வலிய வேதனை எதுவுமில்லாமல் அதுபற்றிய உணர்வுகூட இல்லாமல் வெகு அனாயசமாய் புதர் மறைவில் ஜெனிட்டா உருவாக்கியிருந்தாள் பொன்னிறத்தில் மின்னும் அதை. அது தன் முந்தானைக்குள் மறைத்து எடுத்து வந்திருக்கும் பிள்ளையாரைப் போன்று உருவத்தில் அப்படியே ஒத்திருந்தது. இதழ்கடையில் சிறு புன்னகை நெளிய இது இனிமேல் தேவையில்லை என்று நினைத்தவள் கையிலிருந்ததை நழுவவிட்டாள். கணவன் நிற்குமிடம் நோக்கி நடந்தாள். தூரத்தில் மாதாகோவில் மணி ஒலித்துக்கொண்டிருந்தது.


செய்திகள் - குறிப்புகள் - கருத்துகள்:-மு.சிவகுருநாதன்


பாமரனின் பாசிசக்குரல்

லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறையினர் நடத்திய ‘கனாக்காலம் - 2007’ என்ற கருத்தரங்கில் ‘சினிமாவும் சமூகமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்த கவிஞர் லீனா மணிமேகலை ‘துப்பட்டா’அணியாததால் கல்லூரிவாசல் வரை சென்று திரும்பினார். அந்த கருத்தரங்கில் பாலு மகேந்திரா, அஜயன்பாலா, ஞாநி, பாமரன் போன்றோர் கலந்து கொண்டனர். இது பற்றி கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை ‘இந்த இடம் எங்களுக்கு கோயில் போன்றது’ என்று கூறுகிறார். அவருடைய பார்வையில் அது சரியானதுதான். ஆனால், அந்த விழாவில் கலந்து கொண்ட பாமரன் பண்பாடு, நம்பிக்கைகள் பற்றி நிறைய பிதற்றியிருக்கிறார் (குமுதம் ரிப்போர்ட்டர் - 27.12.2007).

பெரியார் வள்ளலாரையும், சங்காரச்சாரியையும் பாமரனைப்போல ஒன்றாகப் பார்க்கவில்லை; வேறுபடுத்தித்தான் பார்த்தார். விநாயகர் சிலை உடைத்தல், ராமர் படத்தை செருப்பால் அடித்தல் போன்ற எதிர்க் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெரியாரை பாமரன் பண்பாட்டின் பெயரால் கொச்சைப்படுத்துகிறார். “இந்துக்கள் தவிர பிற மதத்தினர் உள்ளே வரக் கூடாது. ஆண்கள் மேலாடையுடன் வரக் கூடாது, பெண்களே வரக்கூடாது” என்றெல்லாம் விதிகள் உள்ளது செருப்பைக் கழற்றிப் போட வேண்டும் என்பதைப் போல. மேலும் ‘தலித்கள், சூத்திரர்கள் கோவிலுக்கு நுழையக்கூடாது, அர்ச்சகர் ஆகக் கூடாது, தேர் இழுக்கக் கூடாது, டீக்கடையில் தனி கிளாஸில்தான் டீ குடிக்க வேண்டும்... என்றெல்லாம் விதிகள் உள்ளன. பண்பாடு கருதி பாமரன்கள் இவற்றைக் கடைபிடிக்கட்டும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை.

“சண்டைக்கோழி” வசனப் பிரச்சினையில் போராட்டம் செய்தவர்கள் ‘சிவாஜி’ ‘அங்கவை, சங்கவை’ பிரச்சினையில் எங்கே போனார்கள்? “என்றெல்லாம் ‘சோ’வைப்போல மிகவும் அறிவுப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல் நாமும் கேள்வி எழுப்பலாம். எல்லாவற்றிற்கும் முன் நிபந்தனைகள் விதிக்கும் பாமரன் போன்றவர்கள் எதற்கு குரல் கொடுத்தார்கள் - கொடுக்கவில்லை என்று விரிவாக எழுத இங்கு இடமில்லை.

தமிழ் சினிமா சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள், அரவாணிகள், மாற்றுத்திறனுடையோர் போன்றோரை ஒவ்வொரு படங்களிலும் இழிவான முறையில் சித்தரித்து வருகிறது. தொடக்க கால கருப்பு-வெள்ளைப் படங்களிலிருந்து பாமரன் போன்றவர்கள் போற்றும் பருத்திவீரன், கற்றது தமிழ் போன்ற படங்கள் வரை இந்நிலைதான். அதைப்பற்றியெல்லாம் பாமரன் உள்பட பலர் தட்டிக் கேட்டதில்லை. ‘சிவாஜி’ படத்தில் ‘அங்கவை-சங்கவை’ கதாபாத்திரங்கள் மூலம் இவர்கள் கருமைநிறமுடைய பெண்களை கொச்சைப்படுத்தப்பட்டதற்காக கொதிக்கவில்லை.

பதிலாக தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க்குடிப்பெருமை மீதான தாக்குதல் என்று தாங்கமுடியவில்லை இவர்களால். அங்கவை-சங்கவைக்குப் பதிலாக குட்டி ரேவதி, லீனா மணிமேகலை என்று பெயர் வைத்திருந்தால் பாமரன்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் ரஜினி, சுஜாதா, சங்கர், மன்னிக்கவும் ஷங்கர், சாலமன் பாப்பையா போன்ற வியாபாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள். பாமரன் போன்றவர்கள் எழுதியும், பேசியும் வருபவை மாற்றுச் சிந்தனைகள் என்ற போர்வையில் கலாச்சார போலீஸ்களின் பாசிசக் குரலையே.

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி பற்றி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். முத்துகுமரன் குழுவின் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டு விட்டது. “மக்கள் விரும்பினால் சமச்சீர் கல்விமுறை வரும்” என்றார் திருச்சியில் பேசிய குழுவின் தலைவர் முத்துக்குமரன். மக்களின் விருப்பத்தை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை.

அரசு மெட்ரிக் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் மதிப்பெண் பட்டியலில் 1100க்குப் பதிலாக 500க்கு அளிக்கப்படும் என்ற ‘புரட்சி’கரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி வெறும் மதிப்பெண் பட்டியலுடன் நின்று விடும் அபாயம் இருக்கிறது.

10-ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்க, ஆதரவாக வந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைய ஏதுமில்லை. மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்பாடம் சுமையாக இருப்பதாகச் சொல்லி குறைக்க வைக்கிறார்கள். (தமிழ் என்று ‘இந்துத்துவா’ தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம் என்பது வேறு விஷயம்.) நாம் இதரப் பாடங்களில் சுமை குறைக்கப்பட வேண்டும் என்கிறோம். அரசு மதிப்பெண் சுமையைக் குறைத்து 1100ஐ 500க்கு மாற்றித்தர சித்தமாக உள்ளது. இதேபோன்று இனி மெட்ரிக் மற்றும் அரசுப்பள்ளிகளில் ஒரே வண்ணச் சீருடை, ஒரே நேரத்தில் தேர்வு, பெயரில் உள்ள மெட்ரிக் என்ற வார்த்தை நீக்கம் போன்ற ‘அதிரடி’ திட்டங்களையும் செயல்படுத்தலாம்.

சர்வ சிக்ஷ அபியான் (SSA) திட்டத்தில் எந்த அளவிற்கு முன்னேற்றம் என்பது அதன் மூலம் பலனடைந்தவர்களுக்கே வெளிச்சம். இன்னமும் சேர்க்கை விண்ணப்பத்தில் “பெரியம்மை தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளதா?”, என்று கேட்பதைப் போல “பள்ளியில் சேர்க்கப்படவேண்டிய பள்ளி வயதுக் குழந்தைகள் சேர்க்கப்படாமல் இல்லை” என்று கண்ணைமூடிக் கொண்டு எழுதி வைத்திருக்கிறார்கள் கல்வி அலுவலகங்களில். SSA திட்டத்தைப் பற்றி உணர்ச்சி மேலிட, பக்திப்பெருக்கோடு எம்.எல்.ஏ. ரவிக்குமார் காலச்சுவடு பிப்ரவரி 2008 இதழில் ‘விஜயகுமார் சார், உங்களை வணங்குகிறேன்!’ (கமல் சார், ரஜினிசார் என்பது போல) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஆந்திரமாநிலம் ரிஷி வாலியிலிருந்து கொண்டு வரப்பட்ட செயல்வழிக் கற்றல் (ABL) அம்மாநிலத்திலேயே நடைமுறையில் இல்லை. இதில் ஈடுபடும் அதிகாரிகள், ஆசிரியர்கள் வீட்டுக் குழந்தைகள் இப் பள்ளிகளில் படிப்பதும் இல்லை. அரசு சிறப்பானது என்று சொல்கிற திட்டத்தை ஏன் ஆங்கிலப் பள்ளிகளில் அமல்படுத்தவில்லை? என்பது போன்ற பல்வேறு வினாக்கள் எழுப்பப்படுகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்திருந்தால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது, அரசு நடத்தும் சமத்துவ விழாக்கள் மற்றும் அடிக்கடி எடுக்கப்படும் ‘ஒழிப்பு’ உறுதிமொழிகளைப் போல. எண்ணங் களிலும் செயல்பாட்டிலும் தோழமை உணர்வு வரவேண்டும். மேலும் திட்ட இயக்குநர் விஜயகுமாரை ‘தமிழ்நாட்டு பாவ்லோ ஃபிரேயர்’ ஆக மிகைப்படுத்தி கற்பனை செய்ய வேண்டியதில்லை.

தொடர்ந்து ரவிக்குமார், “தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்து அத்வானி அழுததாக ஒரு செய்தியைப் படித்தேன். அத்வானி மட்டுமல்ல, நரேந்திர மோடி கூட அழுது விடுவார்” என்றும் எழுகிறார். தமிழ்நாட்டில் மோடி ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது போலிருக்கிறது. அந்த இருவருக்கும் ‘பர்ஸானியா’ படத்தைப் போட்டுக் காட்ட ரவிக்குமார் ஏற்பாடு செய்யலாம். பாவம், அழுதவர்களை கொஞ்சமாவது மகிழ்ச்சிப்படுத்தலாம் அல்லவா?

சமத்துவமில்லாத பொங்கல்

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் கொண்டாட உத்தரவு வருகிறது. கிராமங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் மிகவும் கவனமாக தனித்தனி பானைகளில் பொங்கலிட்டு டி.வி.களில் பேட்டியும் கொடுக்கிறார்கள். எல்லா சாதியினரும் அவரவர் வீட்டு அரிசியை ஒன்றாகப் பொங்கி சாப்பிடுவார்களா? தலித் வீட்டு பொங்கலை பிற சாதியினர் ஏற்றுக் கொள்வார்களா? மத நீக்கம் செய்யப்பட்ட பண்டிகைகள் சாத்தியமா? என்று தெரியவில்லை. இங்கு பொங்கல் உள்பட அனைத்துப் பண்டிகைகளும் மத அடையாளங்களுடன் தான் நிகழ்த்தப்படுகிறது. வீடுகளில் நடைபெறும் இந்நிகழ்வு களை அரசுக் கொண்டாட்டமாக மாற்றத் தேவையில்லை.

இதே போல் கல்வியில் மத நீக்கம் நடைபெறவேயில்லை. மொழிப் பாடங்கள் மற்றும் வரலாற்றில் (அறிவியலையும் சேர்த்து) மதக் கூறுகள் ஆழப்படிந்த இந்துத்துவா, தமிழையும், வரலாற்றையும் குழந்தை களிடம் சொல்லிக் கொடுத்து வருகிறோம். சர°வதி படம், சரஸ்வதி பூஜை (கலைமகள் ஆராதனை விழாவாம்) கொண்டாடாத பள்ளிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டம் தொடங்கி, அனைத்து விழாக் களும் மத அடையாளத்துடன் தான் நடத்தப் படுகின்றன. மதம்/சாதி நீக்கம் சாத்தியப்படாத வரையில் சமத்துவத்திற்கு வாய்ப்பில்லை.

நரேந்திர மோடியை வாழ்த்தும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

குஜராத் 2002-ல் இனப்படுகொலை நடத்தி, குஜராத்தில் கோர வெறித்தாண்டவமாடிய ‘மரண வியாபாரி’ நரேந்திரமோடி நமது போலியான ஜனநாயக அமைப்பைப் பயன்படுத்தி மீண்டும் முதல்வராயிருக்கிறார். வாழ்த்து சொல்லும் சம்பிர தாயம் முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுமானால் தேவைப்பட்டிருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவருக்கு என்ன அவசியம் வந்தது?

மேலும் மோடி மதவெறியுடன் கூடவே, ‘கர்மயோக்’ என்ற குஜராத் அரசு செலவில் வெளியிடப்பட்ட நூலில், “மலமள்ளுவது புனிதமான பணி அதைச் செய்பவர்கள் ‘யோக நிலை’ அடைவார்கள் என்றும் எழுதி தலித்துகளை கேவலப்படுத்தியுள்ளார். தமக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று நினைக்கிறாரா? கிருஷ்ணசாமி. இந்நிலையில்தான் தலித் ஒற்றுமை அவசியமாக இருக்கிறது.

“பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நீங்கள் ஈட்டிய வெற்றி ஈடு இணையற்றது. நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள். சி.எம். என்றால் காமன் மேன் என அளித்த விளக்கம் அற்புதம். வருங்காலத்திலும் சாமானியர்களின் முதல்வராகத் திகழ்ந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்க வேண்டும். உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைக் காட்டிலும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களே உங்களுக்குப் பெரிதும் கை கொடுத்துள்ளன. அந்தத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது பகுதிக்கு என்ற பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கும் சமமாக அமைய வேண்டும். காலம் காலமாக சமுதாய ரீதியாக ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தனி கரிசனமும் கவனமும் செலுத்த வேண்டும்.” தினமணி (திருச்சி), 27 டிசம்பர், 2007.

பல்லாயிரம் முஸ்லீம்களை கொன்று குவித்தும் லட்சக்கணக்கில் மக்களை அகதிகளாக்கியும் கிடைத்த வெற்றி ஈடு இணையற்றதுதான். இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காக குஜராத் ‘மாதிரி’யை ஒரிசா போன்ற பிற மாநிலங்களுக்கும் செயல்படுத்தத் துவங்கியுள்ளது சங் பரிவார் கும்பல். குஜராத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை காவிமயப்படுத்துவது மோடிக்கு அவர்கள் மீதுள்ள கரிசனம் இன்றி வேறென்ன? ரஜினியின் உண்ணாவிரதத்திற்கு சென்று அருகே அமர்ந்து கொண்டது போல மதுரையில் நடத்தும் ‘சமநீதி சமூக மாநாட்டிற்கும்’ மோடியை அழைத்து கவுரப்படுத்தியிருக்கலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் மோடியின் ‘கர்மயோக்’ நூலுக்கு எதிர்ப்பு அறிக்கை (30.11.2007) வெளியிடப்பட்டது. மேலும் நரேந்திர மோடியின் தமிழக வருகையை எதிர்த்து பாசிச எதிர்ப்பு முன்னணி (AFF) ஜனவரி 14, 2008-ல் நடத்திய கருப்புக் கொடி முற்றுகைப் போராட்டத்தில் இணைந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அடித்தள மக்களுக்கு எதிரான போராட்ட வடிவங்கள்

பிறரை வருத்தாமல் தன்னையே வருத்திக் கொள்ளும் உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களையே காந்தி விரும்பினார். எதிர்க்கலாச் சாரவாதியான பெரியாருக்கு உண்ணாவிரதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இன்று நடக்கின்ற போராட்டங்கள் அடித்தள மக்களின் வாழ்வை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது. மண்டல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது ‘ஷூக்களுக்கு பாலிஷ் போடும் போராட்டம் நடைபெற்றது. தமிழக மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் தெருக் கூட்டுதல், எருமை, கழுதைகள் மேய்த்தல்... இன்னபிற கலக(!?) போராட்ட வடிவங்கள் அரங்கேறின. இவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசாத, எழுதாத அரசியல் தலைவர்களோ, பத்திரிக்கைகளோ இல்லை (பா.ம.க. தவிர). அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இல்லாவிட்டால் அவர்களும் இதில் இணைந்திருப்பார்கள்.

ஒரு இதழ் இவர்களின் போராட்ட வடிவங்களை பாராட்டி தனிக் கட்டுரையே வெளியிட்டது. இந்த மாதிரியான போராட்டங்கள் நடத்துவோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? (வன்கொடுமைச் சட்டம் நீதிமன்றத்தில் என்ன பாடுபடுகிறது என்பது ராஜேஷ் சுக்லாவின் கட்டுரையில் தெரிகிறது). வைக்கோலையும் குப்பைக் கூளங்களையும் போட்டு கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்தும்போது அதை அணைக்க காவல்துறை படும்பாட்டை தொலைக்காட்சிகளில் அடிக்கடி காணமுடிகிறது. சிலசமயம் படுகாயம் கூட ஏற்படுகிறது. ஆனால் மேற்கண்ட போராட்டங்களின் மீது காவல்துறையோ, பொதுமக்களோ எவ்வித வருத்தமும் அடைவதில்லை போராட்டக் காரர்கள் இனிவரும் காலங்களில் மலமள்ளும் போராட்டம், சாக்கடையை சுத்தம் செய்யும் போராட்டம் போன்றவற்றையும் நடத்தலாம். அரசும் இவர்களது சேவயைப் பயன்படுத்திக்கொண்டு கஷ்டப்படும் தொழிலாளிக்கு ஒரு நாளாவது ஓய்வு அளிக்கலாம்.

குமுதமும் ஞாநியும்

ஞாநி முன்பு வெளியிட்ட “தீம்தரிகிட” இதழ் ஒவ்வொன்றிலும் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். “தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமையுடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம். படைப்பாளியின் உரிமையை தன் உரிமையாக அறிவித்து வரும் குமுதம் குழும இதழ்களைத் தவிர.” இதைப் படித்ததும் எழுத்துரிமைப் போராளி பிம்பம் வந்து தொலைக்கிறது. தற்போது குமுதத்தில் ஞாநியின் ‘ஓ... பக்கங்கள்’ பெருத்த விளம்பரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. குமுதம் தன்னுடைய வாசகங்களை மாற்றிக் கொண்டதாக யாரும் நினைக்க வேண்டாம்; அப்படியேதான் இருக்கிறது. மேலே உள்ள ஞாநியின் வாசகங்களைப் பார்க்கும் போது ஒன்று சொல்ல தோன்றுகிறது. “கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”. (நன்றி-குமுதம்). இதற்கு பதில் ஞாநியிடம் இருக்கிறதோ இல்லையோ காலச்சுவடு கண்ணனிடம் கண்டிப்பாக இருக்கும்.




ஒரு தாதா கவிதை செய்வது எப்படி?

ஒரு தாதா கவிதை செய்வது எப்படி?

ஆங்கிலம் வழி தமிழில்: கண்ணன். எம்


தேவைப்படும் பொருட்கள்:

ஒரு செய்தித்தாள், ஏதோவொரு கத்திரிக்கோல்.

நீங்கள் செய்ய நினைக்கும் கவிதையின் நீளம் கொண்ட ஒரு கட்டுரையை, செய்தியை செய்தித் தாளிலிருந்து வெட்டி எடுங்கள். வெட்டி எடுக்கப்பட்ட கட்டுரையின், செய்தியின் வார்த்தைகளை ஒவ்வொன்றாக, மிக கவனமாக வெட்டி எடுங்கள். வெட்டி எடுத்த வார்த்தைகள் அனைத்தையும் ஒரு பையில் இட்டு குலுக்குங்கள். குலுக்கிய பின் பையின் உள்ளிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக வெளியே எடுங்கள். அவற்றை மிகுந்த கவனத்துடன் பையிலிருந்து எடுத்த அதே வரிசையில் ஒரு தாளில் பிரதியெடுங்கள்.

இப்போது உங்கள் முன் உங்களைப்போலவே உங்கள் கவிதை.

அதன் முன் சுயம் ததும்பும்
படைப்பாளியாக நீங்கள்.

வக்கிரம் நிறைந்த மந்தைக்கு இதை
ரசிக்கத் தெரியாது.

- டிரிஸ்டன் ஸாரா

(Tristan Tzara (1986 - 1963)


நான் திரும்பச் சொல்கிறேன்:
அனைத்தையும் விட்டு விடுங்கள்.
‘தாதா’ வை விட்டுவிடுங்கள்
மனைவியை விட்டு விடுங்கள்; காதலியையும் கூட,
உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் விட்டுவிடுங்கள்
உங்கள் குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு விடுங்கள்
உங்களுடைய நிழலிருந்து விடுபடுங்கள்
தேவைப்பட்டால், உங்களுடைய சுகமான
வாழ்க்கையையும் ஒளிமயமான வாழ்க்கையையும் விட்டுவிடுங்கள்
நெடுஞ்சாலையில் நில்லுங்கள்

- ஆந்த்ரே ப்ரத்தோன்
(Andre Breton (1986-1966)

ஆங்கிலம் வழி தமிழில்: கண்ணன்.


கருப்பு ஓவியன் கோயா

அம்மண மஜா (Naked maja) மற்றும் ஆடையணிந்த மஜா (Clothed maja) என்னும் பிரசித்தி பெற்ற இரட்டை ஓவியங்கள் மேற்கத்திய ஓவியங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும். உலகின் தலைசிறந்த ஓவிய மேதைகளில் ஒருவரும் சமகால சமூக, அரசியல் நடப்புகள் மீதான விமர்சனங்களை தனது படைப்புகளில் மிகுந்த செய்நேர்த்தி யோடும் கடும் அழுத்தத்தோடும் பதிவு செய்தவருமான ஸ்பானிய ஓவியர் கோயா (Goya)வின் புகழைத் தேக்கியிருக்கும் படைப்புகளில் ஒன்றுதான் அந்த இரட்டை மஜாக்கள். கட்டில் மீது படுக்கை வசமாக ஒன்றும், நிறுத்து வசமாக ஒன்றுமாக அடுத்தடுத்து இரட்டைத் தலையணைகள் இட்டு, அதன் மீது சற்றே ஒருக்களித்த நிலையில், மடக்கப்பட்ட கைகளை தலைக்குப் பின்னே கோர்த்தபடி படுத்திருக்கும் அம்மண மஜா; அதே மாதிரியான போசில் இருக்கும் ஆடையணிந்த மஜா. இதில் அந்த நாட்களை அதிர்ச்சியூட்டியது அம்மண மஜா ஓவியம்.

ஸ்பானியக் கலையில் பெண்களின் நிர்வாணம் அரிதாகவே இருந்த காலகட்டம் அது. சமயத்தால் தடை செய்யப்பட்ட அந்தக் கருப்பொருளை சமரசம் செய்துகொள்ளாத நேர்மையுடனும் பாலிச்சை கொண்டிருக்கும்படியாகவும் கோயா வரைந்தது கலை வரலாற்றில் சினமூட்டுவதாக அமைந்தது. அம்மண மஜாவை கோயா மிகுந்த தத்ரூபத்துடன் வரைந்திருந்தார். முந்தைய மேற்கத்திய ஓவியங்களிலும் இத்தகைய தத்ரூபத்தைக் காணமுடியுமெனினும் மஜாவின் சரும நிறமும், முப்பரிமாணங்களும், ஒளி-நிழல்-நிழலீடுகளும் இன்றைய புகைப்படங்கள் அளவுக்கு துல்லியமாக கைவரப்பெற்றிருந்தன. மேலும், பழைய நிர்வாண ஓவியங்களில் அழகுபடுத்தலுக்காக அக்குள்களும், யோனியும் மழிக்கப்பட்டிருக்கும். மஜாவிலோ யோனி மழிக்கப்படவில்லை, சரும நிறத்தோடு இயைந்துபோகும் படியாகவும், அடத்தியற்றுமாக இளம் பழுப்பு நிற மென்ரோமங்கள் அழகுணர்ச்சியோடு தீட்டப்பட்டிருந்தன. ஆனால், அக்குள் பகுதி மழிக்கப்பட்டதாக இருக்கிறது. எனவே, இது திட்டமிட்ட செயல் எனப் புரிந்துகொள்ள முடியும். கவனக் குவிப்பும், பாலிச்சைத் தூண்டலும் கோயாவின் நோக்கமாக இருக்கலாம். முந்தைய அழகியல் கண்ணோட்டங்களுக்கு எதிரான மாற்றுக் கண்ணோட்டமாகவும் இருக்கலாம்.

இவ்வோவியம் அம்மண மஜா (Naked maja) என்றுதான் குறிப்பிடப்படுகிறதே அன்றி நிர்வாண மஜா (Nude Maja) என்று குறிப்பிடப்படுவதில்லை. அம்மணம் என்பது வெகுளிமையான குழந்தைகளின் ஆடையற்ற நிலையைச் சுட்டுவதற்கு மட்டுமே பொருந்தும். நிர்வாணம் என்பது பெரியவர்களின், அறிதலுடன் கூடிய ஆடையற்ற நிலை. இதில் வெகுளிமையைக் குறிக்கும் அம்மணம், மஜாவின் நிர்வாணத்துக்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதும், ஆனால் அதற்கு மாறாகவே அவ்வோவியம் பாலிச்சையைத் தன்னுணர்வாகக் கொண்டிருப்பதுமான முரண்பாடுகள் பற்றியும் நாம் சிந்திக்கலாம்.

அம்மண மஜா கூடுதல் பாலிச்சையானது (Sexuality) எனில் ஆடையணிந்த மஜா அதிகம் சிற்றின்பகரமானது (erotic). அம்மண மஜாவைப் பார்த்துவிட்டு இதைப் பார்ப்பது ஒப்பீட்டு அனுபவத்துக்கு வழி வகுக்கும். அந்த ஆடைகளுக்குள்ளான, நாம் முன்பு பார்த்திருக்கக்கூடிய நிர்வாணத்தை நினைவுகளில் கிளர்த்தும். அதே சமயம் நீங்கள் அம்மண மஜாவைப் பார்த்திருந்திராவிட்டாலும் கூட ஆடையணிந்த மஜாவில் கதகதப்பான சிற்றின்ப உணர்வைக் காணலாம்.
இம்ப்ரஷனிஸத்தின் முன்னோடியான எட்வர்ட் மானே (Edouard Manet)யின் பேரற்புதமானதும், உலகளவில் உள்ள செவ்வியல் உச்சபட்ச படைப்பு (Classic master piece)களில் ஒன்றாக தற்போது அங்கீகரிக்கப்படுவதுமான ஒலிம்பியா (Olympia) என்னும் 1863ம் வருடத்து ஓவியம் அம்மண மஜாவின் தாக்கத்தால் உருவானதே.

உலகெங்கும் காலந்தோறும் பெண்ணுடல் என்பது ஓவியர்கள் மற்றம் சிற்பிகளின் பேரார்வத்துக்குரிய கருப்பொருளாகவே இருந்து வருகிறது. வளைவு நெளிவுகளும், மேடு பள்ளங்களும், மென்மையும், எழிலும் கொண்ட பெண்ணுடலானது அழகின் ஆராதகர்களான ஓவிய, சிற்பக் கலைஞர்களைத் தணியாத வேட்கையுடன் கவர்வதில் வியப்பொன்று மில்லை. கருப்பு ஓவியங்கள் எனப்படும் பீதியூட்டுகிற குரூப ஓவியங்களில் தனித்த பேரெடுத்த கோயாவினுள் அழகின் ஆராதிப்பும் இருந்தது என்பதுதான் ஆச்சரியம். அல்லது இதன் மறுதலையாக, அழகின் ஆராதிப்பு கொண்டிருந்த கோயாவுக்குள் எப்படி இந்த குரூப வெளிப்பாடுகள் என்று வியக்க வேண்டியிருக்கும்.
அவரது உச்ச படைப்புகளான (Masterpiece) போர்டி யாக்ஸின் பால்காரி (The milkmaid of Bordeaux), டோனா இஸபெல்டி போர்ஸெல் (Dona Isabel de porcel), டான் மேனுவல் ஓசாரியோ டி மேன்ரிக் ஸுனிகா (Don Manuel Osorio de Manrigue Zuniga), மே இரண்டு (Dos de Mayo), குடை (The Parasol) போன்ற அழகு பொலியும் ஓவியங்களைப் பார்ப்பவர்களுக்கு வன்முறையும் குரூரங்களும் கோரங்களும் குரூபமும் கொண்ட அவரது மறுபக்க ஓவியங்கள் அதிர்ச்சியூட்டுவனவாகவும் இருக்கலாம்.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கத்திய ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போக்கு புதுச் செவ்வியல் (New-classicism). இது ரோம் மற்றும் க்ரீஸில் உள்ள செவ்வியல் கலைகளின் தாக்கத்தினால் உருவானது. ஓவியம், சிற்பம் மற்றும் கட்டிக் கலைகள், இலக்கியம், இசை ஆகியவற்றில் கிரேக்க, லத்தீன் செவ்வியல் பாணியின் புத்தெழுச்சியை சாரமாகக் கொண்ட புதுச்செவ்வியல் காலகட்டத்தவர்தான் கோயாவும்.

1746 மார்ச் 30ம் தேதி வடக்கத்திய ஸ்பெயினில் அரகோன் மண்டலத்தில், ஸரகோஸாவுக்கு அருகிலுள்ள Fuendetodos என்னும் ஒரு தொலைதூர குக்கிராமத்தில் கோயா பிறந்தார்.அவரது தந்தை தங்க மெருகிடும் கைவினைஞர். தனது இளம் வயதுகளை குக்கிராமத்தில் கழித்த கோயாவின் குடும்பம் பின்னர் ஸரகோஸா நகரத்துக்குக் குடிபெயர்ந்தது. அங்கிருந்த ஓவிய ஆசிரியர் ஜோஸ் லூஸன் (Jose Luzan) என்பவரது ஓவியக்கூடத்தில் 13 வயதில் பயிற்சி மாணவராக சேர்ந்தார். பின்பு தனது தனித்திறனால் மேட்ரிட் (Madrid) டில் அகாடெமிக் பயிற்சி பெற்றார். 1770ல் 24ம் வயதில் அதை உதறித்தள்ளி இத்தாலிக்குத் திரும்பிய அவர், ஸோப்ராடியல் அரண்மனையில் தனது முதல் முக்கிய ஒப்பந்தப் பணியாக ஆறு ஓவியங்களைச் செய்தார். ஏற்கனவே, எல் பிலர் (El Pillar) பேராலயத்தின் சுவர் ஓவியத்துக்கான போட்டியிலும் அவர் வெற்றிருந்தார்.

1773 ஜூலையில் ஜோஸெஃபா பாயேவு (Josefa Bayeu)வுடன் நடந்த திருமணம், அவளது ஓவிய சகோதரர்களான ஃப்ரான்சிஸ்கோ மற்றும் ரமோன் பாயேவுடனான தொடர்புகளுக்கு வழிவகுத்து அவரது ஓவியப் பணிகளுக்கு குறிப்பிடத்தக்க பயனளிப்பதாக அமைந்தது.

சரகோஸாவின் வெற்றிகரமான ஓவியராகத் திகழ்ந்த அவர் அரசரின் முதல் ஓவியரான மெங்°ஸின் அழைப்பில் ராயல் அலங்காரத் திரைச்சீலைத் தொழிற்சாலை (Royal Tapestry Factory)யில் ஃப்ரான்சிஸ்கோ பாயேவுவின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணி புரியலானார். இடைவிட்டு இடைவிட்டு இருபது ஆண்டு காலம் அங்கே பணிபுரிந்தார். பெரிய அளவில் எண்ணெய் ஓவியமாகத் தீட்டப்படும் அவரது ஓவியங்கள் பின்பு நெசவாளர்களால் கம்பளியில் துல்லியமாகப் பிரதியெடுக்கப்பட்டன. 28ம் வயதில் அவர் தனது ஆசிரியர் லூஸனைக் காட்டிலும் அதிக சம்பாத்தியம் கொண்டவராக ஆகியிருந்தார்.
கோயாவின் ஆற்றல் மிக்க ஓவியத்துவ ஆளுமை விரைவிலேயே அவரது சித்திரங்களில் சமகால ஸ்பானிய வாழ்வு மற்றும் தொன்று தொட்டு நிலவும் பழக்கங்களின் நவீனமுறுதல் குறித்த அவரது சொந்த தரிசனங்களோடு வெளிப்படலாயிற்று. அஸ்ட்டூரியஸ் இளவரசர் மற்றும் இளவரசிக்காக அவர் செய்த ஓவியங்கள் அரண்மனையை அலங்கரித்தன. புத்துணர்வு வீரியமும் யதார்த்தவியலும் கொண்ட கோயாவின் ஓவியங்கள் ஸ்பானிக் கலையின் ஊக்க மூட்டும் காவலர்களாக விளங்கிய இளவரசருக்கும், இளவரசிக்கும் சிறந்த உணர்வெழுச்சியைக் கிளர்த்துவதாக இருந்தன.

அரச குடும்பத்தினர் குளிர்காலத்தில் தங்கியிருக்கும் மாட்ரிட்டின் புறப்பகுதியில் உள்ள பேர்டோ அரண்மனையில் இளவரசியின் உணவுக் கூடத்தை அலங்கரிப்பதற்காக கோயா வரைந்த சித்திரங்களில் ஒன்றுதான் அவரது அருமையான ஓவியங்களில் ஒன்றான ‘குடை’ ஓவியம். நுண்ணிய அரை நிறமிகள் (half-tone), ப்ரகாசமான வண்ணம், மற்றும் ஆச்சாரமற்ற, மின்னாற்றல் கொண்ட தொகுப்பமைவு (Composition ஆகியவற்றுடன் கூடிய ஓவியம் அது.
1780ல் ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான போரினால் திரைச்சீலைத் தொழிற்சாலைப் பணியிலிருந்து கோயா விலக்கப்பட்டார். ஃப்ரான்சிஸ் பாயேவுவின் ஒத்தாசையினால் மேட்ரிட்டின் ராயல் அகாடமியில் அங்கத்தினரானார். அங்கிருப்பவர்களின் அனுமதியினால் மேன்மையான தொகுப்புகளைச் செய்யும் வழிவகை ஏற்பட்டு வெலாஸ்க்விஸ் (Velazquez)ன் ஓவியங்களை மறுஆக்கம் செய்தார். அந்தத் தருணத்தில்தான் (1778-1780) அவரது முதல் முக்கியமான செதுக்கோவியம் (Etching), குரல்வளையை நெறித்துக் கொல்லும் தண்டனைக்குரிய மனிதன்’ (The Garotted Man) செய்யப்பட்டது.
கோயாவின் தனித்த அடையாளங்களான ‘கருப்பு ஓவிய’ங்களின் துவக்கம் மேற்கூறிய எட்சிங்கிலிருந்தே துவங்குவதாகக் கொள்ளலாம். அதுவரையில் வழமையாக ஓவியர்கள் எடுத்துக் கொள்வது போன்ற கருப்பொருள்களையே எடுத்துக்கொண்டிருந்த கோயா, இதில் தான் வழமைக்கு மாறுபட்ட, துக்கமூட்டும் கருப்பொருளை முதல் முறையாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருசிறு மரத்திண்டின் மீது அமர்ந்து தரையில் கால் நீட்டியிருக்கும் தண்டனைக் குரியவன், அத்திண்டோடு இணைந்த செங்குத்துக் கட்டையின் மீது சாய்ந்திருக்கிறான். மடியில் இருக்கும் கோர்த்த கைகளுக்குள் சிலுவை. அருகிலேயே தாங்கியின் மீது பெரிய மெழுகுவர்த்தி ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. கட்டைக்குப் பின்னால், சுவரில் இடப்பட்ட துளையிலிருந்து வந்திருக்கும் கயிற்றில் அவன் கழுத்து இறுக்கப்பட்டிருக்கிறான். கொல்லப்பட்டபோது அவன் துடிதுடித்து கைகால்களை உதறவில்லையா? மடி மீது கோர்த்த கைகளுக்குள் சிலுவையையும்விடாமல் பிடித்துக்கொண்டு அமைதி யாக, ஆடாமல், அசையாமல் பிரேதக்களை படிந்த அவனது முகத்தின் மீது அந்த மெழுகுவர்த்தி ஏன் இப்படி இரக்கமற்ற ஒளி வீசுகிறது?


சபலங்கள் (Caprices) எனத் தலைப்பிடப்பட்ட எண்பது செதுக்கோவியத் தொகுப்பைப் பின்னர் 1797-1799ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் கோயா செய்தார். சமூக, அரசியல் அங்கதங்களோடு கூடிய அப்படைப்புகள் அவரது கூரிய விமர்சனங்களுக்கும், நுண்ணிய தொழில்நுட்பத்திறனுக்கும், நேர்த்திமிகு கலை மேதைமைக்கும் சான்றுகள். அதிலிருந்து நான்கு ஓவியங்களை மட்டும் இப்போது காணலாம்.

1. அங்கே அவர்கள் பிய்த்தெடுக்கப்படுவதற்காகப் போகிறார்கள்.
(There they go plucked)


விபச்சார விடுதியொன்றில் இரு விபச்சாரிகள் தங்களின் இழிவான வாடிக்கையாளர்களை விரட்டியடிக்கும் காட்சி, கோயா தனது விமர்சனத்தை விரிவுபடுத்தி, குறியீட்டுத் தன்மையில் இதை சித்தரித் திருக்கிறார். விபச்சாரிகளின் கைகளில் நீண்ட ஒட்டடைக்கழி. ஒருத்தி அடிக்க ஓங்கிய நிலையில், இன்னொருத்தி குப்பையைப் போல தள்ளிவிடும் நிலையில் வாடிக்கையாளர்களின் உருமாற்றம்தான் wighlight. அவர்கள் மனித முகத்துடன் கூடிய, இறகு பிடுங்கப்பட்ட கோழிகளாக இருக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக இருவர் அறைக்குள் வெளியேறிக் கொண்டிருக்க, இன்னொருவர் திறந்த கதவின் நிலைப்படியிலிருந்து தாவிக் குதிக்கும் தறுவாயில் இறகு பிடுங்கப்பட்ட இறக்கைகளை விரித்திருக்கிறார்கள்.
பின்புலத்தில் உள்ள, கடுமையான முகபாவம் கொண்ட கிழட்டுப் பணிப்பெண்களுக்கு மேலே இறகு பிடுங்கப்படாத இரண்டு மனிதக் கோழிகள் தப்பித்துப் பறந்து கொண்டிருக்கின்றன. இங்கே இறகு பிடுங்கப்படுதல் என்பது வாடிக்கையாளர்களின் உடைமைகளைப் பறிப்பதற்குக் குறியீடாகிறது. அவர்களது வழுக்கைத் தலைகள் பால்வினை நோய்களுக்கான முன்அறிகுறி. போலவே, ஒடிந்து கட்டுப்போடப்பட்டிருக்கும் கால்கள் ஆண்மையின்மையை உருவகப்படுத்துகின்றன.

2. காற்றடிப்பு (Blow):

அச்சமூட்டும் இந்த தெளிவானவரைவு சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஆண்கள் கொள்ளும் தகாத புணர்ச்சியை நீடித்த பயமூட்டும் துர்சொப்பனங்கள் போல வரைந்ததாகும். அரையாடை அணிந்த ஆண் சூனியக்காரக்கிழவன் நிர்வாணமாக்கப்பட்ட குழந்தை ஒன்றின் கை கால்களை சேர்த்துப் பிடித்துக்கொண்டு, ஆசன வாயிலிருந்து வெளியேறும் அபாண வாயுவினால் தணல் அடுப்புக்கு காற்று வீசச் செய்து கொண்டிருக்கிறான். முன்புலத்தில் உள்ள நிர்வாணக் கிழவனும், பின்புலத்து இருளில் முகம் மட்டும் துலங்கும், பிசாசுகள் போலக் காட்சியளிக்கும் இரு உருவங்களும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இச்சித்தரிப்பின் நடுவே உள்ள சிறு இடைவெளியின் மத்தியில் ஒரு கிழவன் சிறு குழந்தையின் ஆண்குறியை சும்பனம் செய்துகொண்டிருக்கிறான். குழந்தையின் முகமோ மற்ற உடல் பாகங்களோ காட்டப்படுவதில்லை. அதற்கு இடமும் இல்லை. தேவையும் இல்லை. இவர்களுக்கு மேலே இருளுக்குள் மங்கலான சித்தரிப்பில் ஒருவன் இரு சிசுக்களை கைக்கொன்றாக ஏந்தியிருக்கிறான். அதன் பின்னால் அரை அரூபத் தோற்றத்தில் ஒருவனது உருவம் கைகளை சிறகுகள் போல் விரித்து பறக்கும் பாவனையில், காமத் திளைப்பின் பரவசத்துக்கான உருவகிப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

3. இப்போது அவர்கள் நேர்த்தியாக அமர்ந்திருக்கிறார்கள்
(Now they are sitting pretty):

நகைச்சுவை மிளிரும் இவ்வோவியம், தன் தோற்றம் பற்றிய கர்வம் கொண்டவர்களின் அறிவீனத்தை இயல்புக்கு மீறிய முறையில் நையாண்டி செய்வதாகும். புதுப்பாணி (Fashion)க்கு பலியான இரு இளம் பெண்கள் தங்களின் முட்டாள்தனத்தையும் கள்ளங்கபடமற்ற தன்மையையும் காட்சிப்படுத்தும் விதமாக தங்களின் பாவாடையை மிகவும் குட்டையாக, ஆனால் இடுப்பில் கட்டாமல் மேலுயர்த்தி, இடைவெளியை தலையில் முக்காடிட்டு அணிந்திருக்கிறார்கள். ஒருத்தி நின்ற படியும், ஒருத்தி அமர்ந்தபடியுமாக இருக்கும் அவர்கள் உள்ளாடைகள் ஏதும் அணிந்திராததால் முக்கால் தொடை வரையிலான அரை நிர்வாணம் நகைப்புக்கும் ஆபாசத்துக்கும் உரியதாகிறது.

4. Thou who canst not:

இரண்டு சாமான்ய மனிதர்கள் தங்களது முதுகில் கழுதைகளைச் சுமந்து திணறியபடி குனிந்து நிற்கும் இந்த ஓவியம் பிடிவாதமான மதியீனத்துக்குக் குறியீடாகவும், மேல்தட்டினரும் கிறிஸ்துவ மத குருமார் (Clerics)களும் மக்கள் மீது செலுத்துகிற ஆதிக்கத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் உள்ளது. சராசரியர்களான அந்த மக்கள் மீது கழுதைகள் சேணமிட்டு அமர்ந்திருப்பது, தங்களின் தாங்கொணாத் துயரங்களை குருட்டுத் தனமாக ஏற்றுக்கொள்ளும் சமூக அடக்கிவைத்தலை விமர்சிப்பதாக அமைகிறது. குதிரைச் சவாரி செய்பவர்கள் அதை வேகமாக ஓடச் செய்வதற்காக தங்கள் காலணிகளின் பின் பகுதியில் பொருத்தியிருக்கும் குதிமுள் ஒரு கழுதையின் குளம்பில் கட்டப் பட்டிருப்பது இந்த விமர்சனத்தை இன்னும் கூர்மைப்படுத்துகிறது.

சாதிப்பிரச்சனைகளில் நீதிமன்றத் தீர்ப்புகள்: ராஜேஷ் சுக்லா-தமிழில்: அ.மார்க்ஸ்



நீதிமன்றத் தீர்ப்புகளை யாரும் நீதிபதிகளின் உள் நோக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கக் கூடாது. விமர்சித்தால் “நீதிமன்ற அவமதிப்பு”க்குள்ளாக நேரிடும். இத்தகைய பாதுகாப்பு வளையத்துக்குள் கீழ் உள்ள நீதிமன்றங்களின் உயர்சாதிச் சார்பு குறித்துச் சிலவற்றை இங்கே விவாதிக்க வேண்டியது அவசியம்.

இன்றைய நீதிமுறைக்கும் சாதி அமைப்பிற்குமுள்ள உறவை விளங்கிக் கொள்ள புகழ்பெற்ற வழக்குரைஞர் ஃபாலி எப். நாரிமன் கூறிய கூற்று ஒன்று உதவக்கூடும். அவர் சொன்னார் “முன்னாள் சட்ட அமைச்சரும் ஒரு தலித்துமாகிய பி.சிவசங்கர் ஒருமுறை கூறினார்: ஒரே நாளில் இரு நீதிபதிகள் பதவி ஏற்றால் அவர்களில் மேல்சாதிக்காரரை முதலில் பதவிப்பிரமாணம் எடுக்க வைப்பது என்பதை சில மாவட்டங்களில் கொள்கையாகவே வைத்துள்ளனர். அப்போதுதான் பதவி உயர்வு வரும் போது அவருடன் பதவி ஏற்ற குறைந்த சாதிக்காரரைக் காட்டிலும் அவருக்கு முன்னுரிமைகிட்டும்”.

சில வழக்குகளும் தீர்ப்புகளும்:

மே 2005ல் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) யின் தலைவர் வி.பி.ஷெட்டி என்பவர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (1939) கீழ் கைது செய்யப்பட்டார். அவ்வங்கியின் பொது மேலாளரான பாஸ்கர் ராம்டெக் என்ற தலித் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் இக்கைது நடந்தது. “பொது மக்களின் பார்வைக்குட்பட்ட ஓரிடத்தில்” பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்துதல் என்கிற நிபந்தனை இவ் வழக்கில் பொருந்தி வரவில்லை என மும்பை உயர்நீதிமன்றம் கூறியது. ஒரு தனி அறையில் சம்பவம் நடந்ததாகக் கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது. ஏதோ ஷெட்டியின் வீட்டு வரவேற் பறையில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது சம்பவம் நடந்தது என்பது போல தீர்ப்பை வாசிக்கும் ஒருவருக்குத் தோன்றக் கூடும். உண்மை என்னவெனில் உலக வர்த்தக மையத்தில் உள்ள IDBI வளாகத்தில் இருக்கும் தலைவரின் அறையிலேயே இச்சம்பவம் நடந்தது.

பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்தவருக்கான நிரப்பப்படாத காலியிடங்களைப் பின்னோக்கி நிரப்புவது தொடர்பாகப் பேசப்போன சந்தர்ப்பத்தில்தான் சம்பவம் நடைபெற்றது. வன்கொடுமைச் சட்டத்திற்குப் பதிலாக “சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம் (PCRA) 1969”ல் வழக்கைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியது. காவல் துறையும் அவ்வாறே செய்தது. இவ்விரு சட்டங்களின் அடிப்படையிலும் நீதிமன்றங்கள் எவ்வாறு தீர்ப்புகள் வழங்கியுள்ளது என்று அறிவது பலனுடையதாக இருக்கும்.

1996ல் PCRA சட்டத்தின் கீழ் கிருஷ்ணன் நாயர் என்பவர் மீது வழக்கொன்று தொடரப்பட்டது. தலைச்சேரித் தொகுதிக்கு நடைபெற்ற கேரளச் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒன்றின்போது குட்டப்பன் என்பவர் பற்றி உதிர்த்த “சாதியக்” கருத்துக்களுக்காக அவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. இடது ஜனநாயக முன்னணி’ மாநாடொன்றில் கிருஷ்ணன்
நாயர் பேசும் போது “அந்த அரிஜன் குட்டப்பன் மேசை மேலே ஏறி குதிக்கிறான்” என இகழ்ந்து பேசினார். கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் அவர் பேசியதை சாட்சிகள் நீதிமன்றத்தில் கூறினார். “தீண்டாமை நோக்கில் இந்த அவமானம் மேற்கொள்ளப்பட்டது அல்லது அவமதிக்க முயற்சி செய்யப்பட்டது” என்கிற அடிப்படையில் புகார் செய்யப்பட்டுள்ளது என கூறமுடியாது என்பதால் PCRA சட்டத்தின்கீழ் இக்குற்றம் நடந்ததென்று சொல்ல இயலாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சரி, வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இக்குற்றம் வருமா என்றால், மேற்படி சம்பவம் பொதுமக்களின் பார்வையில் நடைபெற்றதுதான் என்றாலும் தீண்டாமை அடிப்படையில் அவமதிக்கப்படுதல் என்கிற குற்றம் இங்கே முழுமையடையவில்லை. ஏனெனில் கிருஷ்ணன் நாயனார் அவ்வாறு பேசும்போது குட்டப்பன் எதிரில் இல்லை என்றது நீதிமன்றம். மலசலம், குப்பை, செத்த உடலின் பகுதிகள், இவை போன்ற எதையேனும் பட்டியல் சாதியினரின் வீட்டுக்குள் அல்லது அருகில் வீசி எறிவது போன்ற நடவடிக்கைகளில் வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர் சம்பவத்தின் போது எதிரே இருக்கவேண்டும் என்பது தேவையில்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

புல்சிங் வழக்கில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீண்டாமை நோக்கில் அவமதிக்கும் உத்தேசத்துடன் சம்பவம் நிகழ்ந்ததா என்கிற பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டது. ‘லோதி தாக்கூர்’ என்னும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபு புல்சிங், ‘சமர்’ என்னும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல்லாவின் வீட்டை இடித்ததோடு பல்லாவின் மனைவியையும் 5 நாட்கள் கடத்திச்சென்று விட்டான். டிராக்டரை ஏற்றிக் கொன்றுவிடுவேன் எனச் சொல்லி பல்லாவை மிரட்டவும் செய்தான். இது குறித்து போலீசில் புகார் செய்ததற்காக பல்லாவை நோக்கி, “ஏய் சமரா, என்னைப்பற்றி புகாரா செய்தாய்? என்னை அவமதித்ததற்காக உன்னிடம் 5000 ரூபாய் வாங்கியே தீருவேன்” என்றான்.

புல்சிங் மீது இன்னொரு வழக்கும் உண்டு. சமர் சாதியைச் சேர்ந்த பர்சாதி என்பவருடன் அவருக்கு ஒரு நிலத்தகராறு இருந்தது. இது தொடர்பாக ஒரு நிகழ்வில் பர்சாதியை நோக்கி, “ஏய் சமர்...! இங்கிருந்து ஓடு. இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொல்வேன்,” என்றான். சாலை வழியே தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பர்சாதியின் மனைவியை நிறுத்தி, “ஏய் சமரிச்சி, இதென்ன உங்கப்பன் வீட்டு ரோடா, இந்த வழியே நீ போனால் உன்னை உதைப்பேன்’ என்றும் கூறினான்.

PCRA சட்டத்தின் 7(d) பிரிவின் கீழ் இவ்விரு சம்பவங்களின் அடிப்படையிலும் இரு தனித்தனி வழக்குகள் புல்சிங்கின் மீது பதிவு செய்யப்பட்டன. இப்பிரிவின் கீழ் புல்சிங்கின் குற்றங்கள் அமைகின்றனவா என்பதை அறிய உயர்நீதிமன்றம் இரு அளவு கோல்களை உருவாக்கியது.

(i) பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சார்ந்தவராக இல்லாத போதிலும் கூட இந்த அவமானம் நேர்ந்திருக்குமா? ஆம் எனில் 7(d) பிரிவு இதற்குப் பொருந்தாது. மாறாக பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே இந்த அவமானம் நேர்ந்திருக்கும் பட்சத்தில், அதாவது அவர் உயர்சாதியாக இருந்திருந்தால் இந்த அவமானம் நேர்ந்திராது என்றால் புல்சிங் செய்தது தீண்டாமை எனக் கருதலாம் எனக் கூறிய நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்குமிடையே வேறு பிரச்சினைகள் இருக்குமானால் சாதி ரீதியாக திட்டினாலும் கூட அது “தீண்டாமை”யைக் கடைபிடித்ததாகாது என்று வரையறுத்தது. 7(d) பிரிவில் இல்லாத “மட்டுமே” என்கிற சொல்லை நீதிமன்றம் இங்கே தன் வசதிக்கேற்ப சேர்த்துக் கொண்டது.

(ii) இரண்டாவது கேள்வி: உயர்சாதிக்காரர்களுக்கும் தாழ்ந்த சாதிக்காரர்களுக்கும் இடையிலான பிரச்சினை தனிப்பட்ட காரணங்களினால் இருக்கிற தென்றால் செய்யப்பட்ட அவமானம் “தீண்டாமை” அடிப்படையிலாகாது. சண்டை, தகராறு எதுவும் இல்லாத நிலையில் செய்யப்பட்ட அவமானமே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் வரும் என்றது நீதிமன்றம்.

PCRA சட்டத்தின் மூலவடிவம், “தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் - 1955’, என்பது 1976ல் தான் அதற்கு ஞஊசுஹ சட்டம் எனப்பெயரிடப்பட்டது. தீண்டாமை பேசுவது, கடைபிடிப்பது ஆகியவற்றைத் தண்டிப்பதற் காகவே இச்சட்டம் உருவாக்கப்பட்டது. தீண்டா மையை ஒழிப்பது என்கிற அரசியல் சட்ட குறிக் கோளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே இது. ஒரு சட்டத்திற்கு இவ்வாறு பல விளக்கங்கள் சாத்தியமானால், சட்டம் என்ன குறிக்கோளுக்காக இயற்றப்பட்டதோ அதை நோக்கியதாக உள்ள விளக்கத்திற்கே முன்னுரிமையளிக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக தனது அளவுகோல்களை நிர்ணயித்துக் கொண்டது நீதிமன்றம். சாதீய ரீதியான இழிவுகள் தொடர்புள்ள எந்தச் சண்டை, தகராறுகளுக்கும் சாதீயக் காரணங்களே காரணமாக உள்ளன என்பதே எதார்த்தம். அவை என்னவோ இரு “சமமானவர்களுக் கிடையே” நடைபெறும். தனிப்பட்ட சண்டை அல்ல. “ஒரு சமரை ‘சமர்’ என அழைப்பது அவரை அவ மதிப்பதாக இருக்கலாம். ஆனால் அது தீண்டாமை அடிப்படையிலான அவமதிப்பாக இருக்க வேண்டியதில்லை”, எனவும் நீதிமன்றம் கூறத்துணிந்தது.

மேற்கண்ட இரு அளவுகோல்களின் அடிப்படையில் பல்லா, பர்சாதி என்கிற இரு சமர்களும் புல்சிங்குடன் தனிப்பட்ட விரோதம் கொண்டிருந்த தால் மேற்படி குற்றங்கள் இரண்டுமே “சாதாரண அவமதிப்புகள்” (Insults simpliciter) தானே ஒழிய தீண்டாமை அடிப்படையிலானதல்ல எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம். பல்லா, பர்சாதி, பார்சாதியின் மனைவி ஆகியோர் பட்டியல் சாதியில் பிறந்தவர்கள் என்பது வழக்குடன் தொடர்பில்லா ஒரு சம்பவம். பல்லா எந்த சாதியில் பிறந்திருந்த போதிலும் அந்த அவமானம் அன்று நிகழ்ந்திருக்கும். PCRA சட்டத்தின் 12ம் பிரிவின்படி குற்றச்சம்பவம் தீண்டாமை அடிப்படையிலானது என்பதை நீதி மன்றம் முன் ஊகித்துக் கொள்ளவேண்டும். (Presume). ஆனால் உயர்நீதி மன்றமோ பிரிவு 12ன் படியான முன் ஊகிப்பு என்னவாக இருந்த போதிலும் இவ்விரு வழக்குகளையும் பொருத்தமட்டில் 7(d) பிரிவின் கீழ் எந்தக் குற்றமும் நடைபெறவில்லை என அதிரடியாகக் கூறியதோடு புல்சிங்கை இரு வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்தது.

1997ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு: ஹரிதாஸ் என்பவர் பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்தி மிரட்டியதாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். பாதிக்கப்பட்டவர் இது குறித்த புகாரைச் சற்று தாமதமாகவே கொடுத்திருந்தார். இந்தத் தாமதமத்திற்கு கூட ஹரிதாஸ் தான் காரணம் எனவும், புகார் கொடுத்தவர் சொல்லியிருந்தார். புகாரில் வெளிப்படும் வெறுப்பிற்கும், தாமதம் குறித்துச் சொல்லப்படும் காரணத்திற்கும் இருவருக்கும் (அதாவது குற்றம் சாட்டப்பட்ட ஹரிதாசுக்கும் பாதிக்கப்பட்ட தலித்துக்கும்) இடையே இருந்த விரோதச் சூழலே காரணம் எனக் கூறிய நீதிமன்றம் ஹரிதாஸை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

இரட்டை டம்ளர் வழக்கம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியதீர்ப்பொன்று:

தேநீர்க் கடைகள், ஓட்டல்கள், தர்மசாலைகள், முதலியவற்றில் தீண்டாமை காரணமாக இத்தகைய வழக்கம் கடை பிடிக்கப்படுவது PCRA சட்டத்தின்படி குற்றம். 12 மணி நேரம் தாமதமாகப் புகார் கொடுக்கப்பட்டது எனக் காரணம் கூறி நீதிமன்றம் ஒரு ஓட்டல் உரிமையாளரின் மீதான இத்தகைய இரட்டை டம்ளர்கள் வழக்கொன்றைத் தள்ளுபடி செய்தது. டம்ளர்கள் தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன எனப் புகார் தெளிவாக எழுதப்படவில்லை என்பதும் பிராசிகியூஷன் தரப்பு சாட்சிகள் உறவினர்களாக இருந்தனர் என்பதும் வழக்கைத் தள்ளுபடி செய்தவற்கான மேலும் இரு காரணங்களாகச் சொல்லப்பட்டன.

தீண்டாமை ஒழிக்கப்பட்டதன் விளைவாகப் பெறப்பட்ட உரிமைகளை ஒரு பட்டியல் சாதியினருக்கு மறுப்பது PCRA சட்டத்தின் 17ம் பிரிவின் கீழ் ஒரு குற்றம் அதே போல யாரேனும் ஒருவரையோ இல்லை ஒரு சிலரையோ சைகைகளாளோ, வார்த்தைகளாளோ தீண்டாமை கடைப்பிடிக்குமாறு தூண்டுவதும், பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்துவதும், அவமானப்படுத்த முனைவதும் கூட PCRA சட்டத்தின் கீழ் குற்றங்களே.

துனிசந்த் என்னும் ஒரு நபர், தலித்துகள் உள்பட அந்தக் கிராமத்திலுள்ள அனைவரையும் தன் மகளின் திருமண விருந்திற்கு அழைத்திருந்தார். நங்கு, சனா என்கிற இரு பட்டியல் சாதியினர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த உயர்சாதியினர் ஏழுபேர் தாங்கள் அங்கே சாப்பிட மாட்டோம் என்றனர். நங்கு, சனா இருவரும் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது. துனிசந்தும், நேரடி சாட்சிகளும் அளித்த சாட்சியங்கள் “பொதுத் தன்மையில்” (General nature) இருந்தது எனவும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரும், கூறியது என எந்தக் குறிப்பிட்ட சொற்களும் கூறப்படவில்லை எனவும் கூறிய உச்சநீதி மன்றம் PCRA 7ம் பிரிவின் கீழான குற்றமல்ல இது எனக்கூறி குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது.

இதுவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் PCRA சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பட்டியல் சாதியினருக்கு எதிராகவும், உயர்ந்த சாதியினருக்கு ஆதரவாகவும் உயர்நீதி மன்றங்களும் உச்சநீதிமன்றமும் செயல்பட்ட சில நிகழ்வுகளைப் பட்டியலிட்டோம். இனி ‘சதி’ (உடன்கட்டை) தொடர்பான வழக்கொன்றில் குற்றம் புரிந்த உயர் சாதியினரை காப்பாற்றிய கதையைப் பார்ப்போம்:

1987 செப்டம்பர் 4ம் தேதியன்று ராஜஸ்தானிலுள்ள தியோராலா என்னுமிடத்தில் ரஜபுத்திரர்கள் நடத்திய உடன்கட்டை, அன்று இந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வு. ரூப் கன்வர் என்கிற 18 வயதுப் பெண் இறந்து போன தன் கணவனின் (மால்சிங்) சடலத்துடன், ஆடை ஆபரணங்கள் எல்லாம் அணிவிக்கப்பட்டு உறவினர்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கணவனின் சிதை மீது ஏற்றி “சதிமாதாகி ஜே” என்ற முழக்கங்களுடன் குடும்பத்தாராலேயே எரித்துக் கொல்லப்பட்டாள். சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அது நடைபெற்றது.

பெண்கள் இயக்கங்கள் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக 1987 அக்டோபர் 9 அன்று “ராஜஸ்தான் சதி (தடுப்பு) அவசரச்சட்டம் - 1987” இயற்றப்பட்டது. சதி நிகழ்வைக் கொண்டாடுவதற்கும் இது தடை விதித்தது. ‘சதி தர்ம சுரக்ஷண சமிதி” என்னும் அமைப்பு தன் பெயரிலிருந்த ‘சதி’ என்னும்சொல்லை நீக்கிவிட்டு ‘தர்ம சுரக்ஷண சமிதி’ என்ற பெயரில் உருவிய வாளுடன் ரூப்கன்வரைப் புகழ்ந்ததும், சதியை ஆதரித்தும், முழக்கங்கள் இட்ட வண்ணம் பெரும் பேரணி ஒன்றை நடத்தியது. ஆல்வார், சிகார் போன்ற இடங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. புதிய அவசரச்சட்டத்தின்படி 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. (பின்பு இந்த அவசரச் சட்டம் ‘ராஜஸ்தான் சதி தடுப்புத் சட்டம் - 1987’ என்ற பெயரில் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது).

1996 அக்டோபர் 11 அன்று நீம்காதாணா மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ரூப்கன்வரை எரித்துக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட 32 பேரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தார். எரித்துக் கொன்றதற்கு நேரடி சாட்சியங்கள் கிடையாது எனவும் ரூப்கன்வர் சிதை மீது அமர்ந்திருந்தபோது அவர் உயிருடன் இருந்தார் என்பதை நிறுவ பிராசிகியூஷன் தவறிவிட்டது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

2004 ஜனவரி 31 அன்று சதியைக் கொண்டாடியதற்காகத் தொடுக்கப்பட்ட நான்கு கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். (முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் ராஜேந்திரசிங் ராதோர், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் தின் மருமகனும் ‘பாரதீய யுவ மோர்ச்சா’ தலைவருமான பிரதாப்சிங் கச்சாரியா, ராஜ்புத் மஹா சபைத் தலைவர் நரேந்திரசிங் ரஜாவத், முன்னாள் ஐஹளு அதிகாரி ஓம்கார் சிங், வழக்கறிஞர் ராம்சிங் மனோகர் முதலானோர் சதி கொண்டாட்ட வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களில் சிலர்)

புதிய சட்டப்படி கணவனின் இறந்த உடல் அல்லது கணவருடைய ஏதேனும் ஒரு பொருளுடன் அவரது விதவையை உயிருடன் எரிப்பதோ புதைப்பதோ குற்றம். எரிக்கப்படுபவரின் சம்மதத்துடன் அது நிறைவேற்றப்பட்டதா என்பது கேள்வியல்ல. இது தொடர்பான சடங்குகள் நிகழ்த்துவது, ஊர்வலங்கள் செல்வது முதலின தண்டனைக்குரிய “கொண்டாட்டங்கள்” ஆக வரையறுக்கப்படும். கோயில்கட்டுவது, நிதி திரட்டுவது முதலியனவும் இதில் அடங்கும்.

சதி குறித்து சட்டத்தில் கூறப்பட்டுள்ள மேற்படி வரையறையைப் புறந்தள்ளிய நீதிமன்றம் சதி என்றால், “உறுதியான குணம், கற்பு, கணவனுக்கு அர்ப்பணிப்பு, முழு வாழ்விலும் ஒரு ஆடவனுடன் மட்டுமே உறவு வைத்திருத்தல்” என்று பொருள்படும் எனப் புது விளக்கம் அளித்தது. இந்த வகையில் சீதை, அனுசுயா முதலியவர்கள் எல்லாம் ‘சதிகள்’ எனவும் அவர்கள் பெயரை முழங்குவது சதியைக் கொண்டாடுவது ஆகாது எனவும் விளக்கமளித்தார் நீதிபதி. குறிப்பான ஒரு சம்பவத்தைப் புகழ்ந்து கொண்டாடினால் மட்டுமே அது குற்றமாகும் என்றும் கூறப்பட்டது. ரூப்கன்வர் எரிக்கப்பட்டது ‘சதி’ நடவடிக்கை என்பதே (நீதிமன்றத்தில்) நிறுவப்படாததால் அந்த நிகழ்வைக் கொண்டாடியது சதி கொண்டாட்டமாகாது எனவும் நீதிமன்றம் கூறியது.

பன்வாரி தேவி வழக்கு:

ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்கிற கிராமப்பணியாளர் ஒருவரை 1992 செப்டம்பர் 22 அன்று ராம்கரன் குஜார் தலைமையில் வந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று பாலியல் வன்முறைக்குட்படுத்தியது. 1985 முதல் அரசின் வளர்ச்சித் திட்டம் ஒன்றில் பணியாற்றி வந்த பன்வாரிதேவி குழந்தைத் திருமணத்திற்கு எதிராக வெற்றிகரமான இயக்கம் நடத்தியவர். ராம் கரன் குஜாரின் ஒரு வயது மகளின் ‘திருமணம்’ உள்பட பல குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். 1995 நவம்பர் 15 அன்று ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் நடுத்தர வயதினர், பொறுப்பான குடிமக்கள் எனக் கூறப்பட்டது. பொதுவாகப் பதின் வயதிலுள்ளவர்கள் தான் பாலியல் வன்முறைக் குற்றங்களை இழைப்பர் என்று கூறியதோடு நிற்காத நீதிமன்றம், “குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லோரும் உயர்சாதி ஆண்கள், பன்வாரியோ, தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள். எனவே, பாலியல் வன்முறை சாத்தியமில்லை” எனக் கூறியது.

நன்றி: EPW அக்.21, 2006



‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ

அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ
தமிழாக்கம்: ராமாநுஜம்


(இந்திய காலனிய எதிர்ப்பில் ஒரு சாரார் 'பாரத மாதா' என்ற உருவகத்தை உருவாக்கியது போலவே, அமெரிக்காவுக்கு 'அங்கிள் சாம்' என்ற உருவகமும், பிரிட்டிஷாருக்கு 'ஜான் புல்' என்ற உருவகமும் உருவாக்கப்பட்டது. இந்த உருவகங்கள் எந்தத் தனிநபரையும் குறிப்பதில்லை. உலகில் பல நாடுகளுக்கு இத்தகைய உருவகங்கள் உண்டு. இந்த உருவகங்கள் தோற்றம் கொண்ட கதைகளும், அதன் அரசியலும் மிக மிக சுவாரசியமானவை.

அங்கிள் சாமுக்கு மண்ட்டோ எழுதிய ஒன்பது கடிதங்கள் சிறு வெளியீடாக 2001ல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. முதல் கடிதம் 1951-ல் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது கடிதம் எந்த ஆண்டு என்று தெரியவில்லை. மூன்றாவது கடிதத்திலிருந்து 1954 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதங்களில் மண்ட்டோவின் கதைகள், கட்டுரைகளில் காண முடியாத வேறுபட்ட பல தன்மைகளை இதில் காண முடிகிறது. இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. இந்த விளையாட்டை மண்ட்டோ மிகத் திறம்பட விளையாடி உள்ளார். இந்தக் கடிதங்கள் அவர் உயிரோடு இருக்கும் போது பிரசுரம் செய்யப்பட்டதா என்று தீர்மானமாகத் தெரியவில்லை. இந்த இதழில் முதல் மூன்று கடிதங்கள் மட்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. - தமிழாக்கக் குறிப்பு)

1

31 லஷ்மி மேன்ஷன், 16, டிசம்பர் 1951
ஹால்ரோடு,
லாகூர்.

அன்புள்ள அங்கிள்,

வணக்கம்.

நீங்களோ அல்லது ஏழு சுதந்திரங்களும் பெற்று இருக்கும் உங்கள் நாட்டில் எவருமே அறிந்திராத உங்களுடைய பாகிஸ்தான் சகோதரனின் மகனிடமிருந்து உங்களுக்கு இந்தக் கடிதம் வருகிறது.

என்னுடைய நாடு, இந்தியாவிலிருந்து ஏன் துண்டிக்கப்பட்டது என்றும், ஏன் உயிர்பெற்றது என்றும், ஏன் சுதந்திரம் அடைந்தது என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே உங்களுக்கு எழுதும் உரிமையை நான் எடுத்துக் கொள்கிறேன். என் நாட்டைப் போலவே நானும் சுதந்திரம் பெற்றுவிட்டேன் - மிகச் சரியாக அதே பாணியில், அங்கிள், இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை. எல்லாம் அறிந்த உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். உங்களுக்கு நான் இதை விளக்கத் தேவை இல்லை.

என் பெயர் சாதத் ஹசன் மண்ட்டோ. இப்போது இந்தியாவிலிருக்கும் ஓர் இடத்தில்தான் நான் பிறந்தேன். என் தாய் அங்குதான் புதைக்கப்பட்டு இருக்கிறாள். என் தந்தை அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறார். எனக்குப் பிறந்த முதல் குழந்தையும் அந்தத் துண்டு நிலத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த நிலம் இனியும் என்னுடைய நாடு அல்ல. இப்போது என்னுடைய நாடு பாகிஸ்தான். இதை நான் பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தபோது ஐந்தாறு தடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

நான் அகில இந்தியாவிற்கும் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருந்தேன். இப்போது பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருக்கிறேன். என்னுடைய கதைகள் பல தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. மக்கள் என்னை மதிக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவில் நான் மூன்றுமுறை விசாரிக்கப்பட்டேன். பாகிஸ்தானில் இதுவரை ஒரே ஒரு முறைதான். என்ன இருந்தாலும் பாகிஸ்தான் சிறு குழந்தைதானே!

பிரிட்டிஷ் அரசாங்கம் என்னுடைய எழுத்துகள் ஆபாசமானது என்று கருதியது. என் சொந்த அரசாங்கமும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை விட்டுவிட்டது. ஆனால் என்னுடைய அரசாங்கம் அப்படிச் செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கீழ் நீதிமன்றம் எனக்கு, மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. மேல் நீதிமன்றத்தில் நான் முறையிட்டதால் விடுவிக்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய அரசாங்கம் நீதி நிலை நாட்டப்படவில்லை என்று நம்புவதால் என்னை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், நான் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என்னுடைய நாடு உங்களுடைய நாடாக இல்லாததைக் கண்டு நான் வருந்துகிறேன். உயர்நீதிமன்றம் என்னைத் தண்டிக்குமானால், என் நாட்டில் எந்த செய்தித்தாளும் என் புகைப்படத்தையோ, வழக்கு பற்றிய குறிப்புகளையோ வெளியிடாது.

என் நாடு ஏழ்மையானது. இங்கு பளபளக்கும் காகிதங்களோ, சிறந்த அச்சு இயந்திரங்களோ கிடையாது. இந்த ஏழ்மைக்கு உயிருடன் இருக்கும் நானே சாட்சி. அங்கிள், நீங்கள் நம்ப மாட்டீர்கள். இருபத்திரண்டு புத்தகங்களுக்கு ஆசிரியனாக இருந்தும் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போகக்கூட என்னிடம் வசதிகள் ஏதும் கிடையாது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என்னிடம் பேக்கார்ட்டே, டாஜோ கிடையாது. ஏன், ஏற்னெவே உபயோகப்படுத்தப்பட்ட கார்கூட என்னிடம் கிடையாது.

நான் எங்காவது போக வேண்டும் என்றால் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஒரு பத்திக்கு ஏழு ரூபாய் வீதம் செய்தித்தாளில் என்னுடைய எழுத்து வெளிவந்து, இருபது முதல் இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் டோங்காவை எடுத்துக் கொண்டு உள்ளூர் விஸ்கியை வாங்கக் கிளம்பி விடுவேன். இந்த விஸ்கி மட்டும் உங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்குமானால், அந்த சாராயத் தொழிற்சாலையை அணுகுண்டு போட்டு அழித்திருப்பீர்கள். அதனுடைய தரம் அப்படிப்பட்டது. அதைக் குடிப்பவன் ஓராண்டுக்குள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படும் உத்தரவாதம் கண்டிப்பாக உண்டு. நான் தடம் புரண்டு போகிறேன். நான் செய்ய விரும்புவது, என்னுடைய சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெலுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கத்தான். அவருடைய God’s Little acre' என்ற நாவலுக்காக வழக்குப் போட்டதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதாவது நான் இங்கு சந்தித்த அதே குற்றச்சாட்டு: ஆபாச இலக்கியம்.

அங்கிள், என்னை நம்புங்கள். ஏழு சுதந்திரங்களையும் உடைய உங்களுடைய நாட்டில் அவருடைய நாவல் ஆபாசமானது என்று வழக்கு தொடரப்பட்டதைக் கேள்விப்பட்ட போது, நான் அதிர்ச்சியுற்றுப் போனேன். உங்களுடைய நாட்டில் அனைத்துமே அதனுடைய மறைப்புகள் அகற்றப்பட்டு, காட்சிப் பொருளாக வைக்கப்படுவதுதானே சகஜமானது. அது பழமாகட்டும். பெண்ணாகட்டும், இயந்திரமாகட்டும், மிருகங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், நாட்குறிப்புகளாகட்டும், நிர்வாணப் பொருட்களின் பேரரசர் நீங்கள் என்பதால் ஏன் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல் மீது வழக்குப் போட்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு ஓட்டு ஓட்டவில்லை என்றால் கால்டுவெல் வழக்குப் பற்றி கேள்விப்பட்ட அந்த கணத்திலே நான் அடைந்த அதிர்ச்சியில் எங்களுடைய உள்நாட்டு மதுவை மிக அதிக அளவில் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஒரு வழியில், என் போன்றவர்களை ஒழித்துக்கட்டும் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அங்கிள், நான் அடித்தொண்டையிலிருந்து கத்தியிருந்தால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்க முடியாது. இயற்கையாகவே நான் மிகவும் கடமை உணர்வு கொண்டவன். என்னுடைய நாட்டை நான் நேசிக்கிறேன். கடவுளின் அருளால் இன்னும் சில நாட்களில் நான் இறந்துவிடுவேன். நான் என்னையே கொலை செய்து கொள்ளாவிட்டாலும், இன்று கோதுமை மாவு விற்கும் விலையில் வெக்கங்கெட்டவன் மட்டுமே அவனுக்கு இந்தப் பூமியில் விதிக்கப்பட்ட நாட்களை முழுமையாக வாழ முடியும்.

ஆக நான் கால்டுவெல் தீர்ப்பைப் படித்துவிட்டு, பெருமளவு உள்ளூர் சாராயத்தைக் குடித்து என் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தேன். அங்கிள், உங்களுடைய நாட்டில் எல்லாவற்றிலும் ஒருவித செயற்கை அலங்காரத்தன்மை உண்டு. ஆனால் என்னுடைய சகோதரன் கால்டுவெல்லை விடுவித்த நீதிபதியிடம் நிச்சயமாக எவ்வித செயற்கை அலங்காரத்தையும் காண முடியவில்லை. ஒரு வேளை அந்த நீதிபதி - என்னை மன்னிக்கணும், எனக்கு அவருடைய பெயர் தெரியாது; உயிரோடு இருந்தால் என் மதிப்பிற்குரிய வணக்கங்களை அவருக்குத் தெரியப்படுத்தவும்.

தீர்ப்பில் அவருடைய கடைசி வரிகள், அவருடைய அறிவார்ந்த தளத்தின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுகிறார்: "இது போன்ற புத்தகங்களை ஒடுக்குவதின் மூலம் அந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும், அது மக்கள் மத்தியில் அவசியமில்லாமல் ஆவலை உருவாக்கி, தேவையில்லாமல் காம உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதையே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நினைக்கிறேன். அமெரிக்க சமூகத்தில் ஒரு சாரார் பற்றிய உண்மையையே அவர் வெளிப்படுத்துகிறார் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். உண்மை என்பது எப்போதும் இலக்கியங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து."

என்னை தண்டித்த நீதிமன்றத்திலும் நான் இதையேதான் சொன்னேன் என்றாலும் அது எனக்கு மூன்று மாத கால கடுங்காவல் சிறை தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. என்னுடைய நீதிபதி உண்மையும் இலக்கியமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். பெரும்பாலானோரும் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் மூன்று மாத கால கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தயாராக உள்ளேன். ஆனால், நான் முந்நூறு ரூபாய் அபராதத்தைக் கட்டக்கூடிய நிலையில் இல்லை. அங்கிள், உங்களுக்குத் தெரியாது. நான் வறுமையில் இருப்பவன். கடின உழைப்பிற்கு பழக்கப்பட்டவன். பணத்திற்குப் பழக்கப்பட்டவன் இல்லை. எனக்கு முப்பத்தொன்பது வயசுதான் ஆகிறது. என் வாழ்க்கை முழுக்க நான் கடினமாக உழைத்துள்ளேன். இதை மட்டும் நினைத்துப் பாருங்கள். பிரபலமான எழுத்தாளனாக இருந்தும் என்னிடம் பேக்கார்ட் கார் கிடையாது.

என் நாடு ஏழ்மையில் இருப்பதால் நான் ஏழையாக இருக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்று எப்படியோ சமாளிக்க முடிகிறது. ஆனால் என்னுடைய பல சகோதரர்கள் இவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் கிடையாது.

என் நாடு ஏழ்மையான நாடாக இருக்கட்டும். ஆனால் அது ஏன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது? அங்கிள், நான் நிச்சயமாகச் சொல்கிறேன் இதற்குக் காரணம் நீங்களும் உங்களுடைய சகோதரன் ஜான்புல்-ம் தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. காரணம் அது உங்களுடைய காதுகளுக்கு இனிமையான இசையாக இருக்காது. நான் உங்களை மதிக்கும் இளையவனாக இருப்பதால் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அப்படி இருக்கவே விரும்புகிறேன். என் நாடு இத்தனை பேக்கார்ட், பைக் மற்றும் மாக்ஸ் ஃபேக்டர் ஒப்பனையைக் கொண்டிருந்தாலும் ஏன் ஏழ்மையில் உள்ளது என்று நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுக் கேட்கலாம். அங்கிள், இது உண்மைதான். ஆனால் ஏன் என்ற காரணத்தை நான் சொல்லப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய இதயத்தைத் திறந்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். (உங்களுடைய அதி புத்திசாலி மருத்துவர்களால் உங்களுடைய இதயம் வெளியே எடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்)

பேக்கார்ட் மற்றும் பைக்கில் பயணிக்கும் என்னுடைய நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் உண்மையில் என்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களில்லை. எங்கு என்னைப் போன்ற ஏழைகளும், என்னை விட ஏழைகளும் வாழ்கிறார்களோ அதுவே என்னுடைய நாடு. இவையெல்லாம் கசப்பான விஷயங்கள். ஆனால் இங்கு சர்க்கரைத் தட்டுப்பாடு உள்ளது. இல்லையென்றால் என்னுடைய வார்த்தைகள் மீது தேவைப்படும் அளவிற்குப் பூசியிருப்பேன். அதனால் என்ன? சமீபத்தில் நான் ஈவ்லின் வாக்கின் புத்தகம் ‘த லவ்ட் ஒன்ஸ்’ படித்தேன். அவர் உங்கள் நண்பரின் நாட்டைச் சேர்ந்தவர்தான். என்னை நம்புங்கள், உடனடியாக இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அந்தப் புத்தகத்தால் பாதிக்கப்பட்டேன்.

உலகத்தில் உங்களுடைய பகுதியில் பல மேதாவிகளைக் காண முடியும் என்று எப்போதும் பூரண நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்த பின் வாழ்க்கை முழுதும் அவருடைய விசிறியாகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம். எத்தகைய செயல்! நான் சொல்கிறேன் உண்மையிலேயே அங்கு மிகவும் துடிப்புள்ள மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.

உங்களுடைய கலிபோர்னியாவில் இறந்தவர்களை அழகுபடுத்த முடியும் என்றும், அந்தக் காரியத்தைச் செய்வதற்குப் பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் ஈவ்லின் வாக் தெரியப்படுத்துகிறார். நமது அன்புக்குரியவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு கோரமாக இருந்தாலும் இறந்த பின் அவர் ஆசைப்பட்ட அழகை அவருக்குக் கொடுக்க முடியும். சில படிவங்களில் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். முடிக்கப்பட்ட பொருளின் தரம், சிறப்பானதாக இருக்கும் என்பது மட்டும் உத்தரவாதம்; தேவைப்படும் பணத்தை நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்கும்வரை. இறந்து போனவரை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் அழகுபடுத்த முடியும். இந்த நளினமான காரியத்தைச் செய்வதற்குப் பல நிபுணர்கள் உண்டு.

நம் அன்புக்குரியவரின் மோவாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய முகத்தில் அழகான புன்னகையை நட்டு வைக்க முடியும். அவருடைய கண் இமைகளைத் திறந்து வைப்பதோடு, நெற்றியைப் பார்ப்பதற்குப் பளபளவென்றும் மாற்றி அமைக்க முடியும். அதாவது இறந்தவர் கல்லறைக்குள் வைக்கப்பட்ட பின், அவருடைய கணக்கைத் தீர்ப்பதற்கு வரும் இரண்டு தேவ தூதர்கள் குழம்பிப் போகும் அளவிற்கு இவையெல்லாம் அவ்வளவு அற்புதமாக செய்து முடிக்கப்படும்.

அங்கிள், கடவுள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களுடைய மக்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. உயிரோடு இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகு படுத்தப்படுவதையும் ஒருவர் கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு அது பற்றி நிறைய பேச்சுகள் உண்டு. ஆனால் அது போலவே இறந்தவரையும் அழகு படுத்த முடியும் என்பதை இங்கு ஒருத்தரும் கேள்விப்பட்டதே கிடையாது. சமீபத்தில் உங்கள் நாட்டுப் பிரஜை ஒருவர் இங்கு வந்தார். சில நண்பர்கள் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது நான் சகோதரன் ஈவ்லின் வாக்கின் புத்தகத்தைப் படித்திருந்தேன்.

உங்கள் நாட்டைச் சேர்ந்தவருக்கு, அவர் புரிந்து கொள்ள முடியாத இரு வரி உருதுக் கவிதையைப் படித்துக் காண்பித்தேன். எப்படி இருந்தாலும் உண்மை என்னவென்றால், அங்கிள் நம்முடைய முகம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு அதைச் சிதைத்து விட்டோம். ஆனால் உயிரோடு இருந்ததைக் காட்டிலும் இறந்தபின் அழகுபடுத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இந்தப் பூமியில் வாழ்வதற்கு உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. மற்ற நாங்கள் எல்லோரும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களுடைய ஆகப் பெரிய உருதுக் கவிஞன் காலிப் நூறு வருடங்களுக்கு முன் எழுதினான்:

மரணத்திற்குப் பின் அவமானப்படுவது என் விதியாக இருந்தால்
என் முடிவைத் தண்ணீரில் மூழ்கி எதிர்கொண்டிருப்பேன்
அது என் சவ அடக்கத்தைத் தவிர்த்திருப்பதோடு
என் இறுதி ஓய்விடத்தில் தலை மீது கல்லேதும் விழுந்திருக்காது.

உயிரோடு இருக்கும்போது அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு காலிப் அச்சம் கொண்டது கிடையாது. தொடக்கத்திலிருந்து இறுதிவரை எப்போதும் அவன் அப்படிதான் இருந்தான். ஆனால் மரணத்திற்குப் பின் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு அச்சம் கொண்டான். அவன் மிகவும் பண்பட்டவன். தன்னுடைய மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்று மட்டும் அவன் அச்சம் கொண்டிருக்கவில்லை, அவன் சென்ற பிறகு என்ன நடக்கும் என்று மிகத் தெளிவாகவும் உணர்ந்திருந்தான். அதனாலேயே அவன் தன்னுடைய மரணம் தண்ணீரில் மூழ்கி ஏற்பட்டால் சவ அடக்கமோ கல்லறையோ அவசியமில்லாமல் போகும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

அவன் உங்களுடைய நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு அவா கொள்கிறேன். அவனது கல்லறைக்கு அவனை மிகப் பிரமாண்டமான ஊர்வலத்தில் எடுத்துச் சென்று, அவன் ஓய்வெடுக்கும் இடத்தில் வான் உயர கட்டிடத்தைக் கட்டியிருப்பீர்கள் அல்லது அவன் விருப்பம் சாத்தியப்பட்டிருந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் அவனது உடல் வைக்கப்பட்டு மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் சென்று வருவது போல, அவனைப் பார்க்கப் போயிருப்பார்கள்.

உங்களுடைய நாட்டில் இறந்த மனிதர்களை அழகுபடுத்தும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் இறந்த மிருகங்களுக்கும் அது சாத்தியமாகும் என்று சகோதரர் ஈவ்லின் வாக் எழுதுகிறார். ஒரு நாய் ஒரு விபத்தில் தன்னுடைய வாலை இழந்துவிட்டால் அதற்குப் புதியதாக ஒரு வாலைப் பொருத்திவிடலாம்.

உயிரோடு இருக்கும்போது அதுக்கு எத்தகைய உடல்ரீதியான குறை இருந்தாலும், மரணத்திற்குப் பின் அதையெல்லாம் சரி செய்து விடலாம். பிறகு அது சடங்குகளோடு புதைக்கப்பட்டு மலர்வளையங்கள் அதன் கல்லறை மீது வைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் நம் அன்பிற்குரியது இறந்த தினத்தன்று அதனுடைய எஜமானனுக்கு இதுபோல் பொறிக்கப்பட்ட அட்டை ஒன்று அனுப்பப்படும்: “சொர்க்கத்தில் உங்களுடைய டாமி (அல்லது ஜெஃபி) அதனுடைய வாலை (அல்லது காதை) ஆட்டிக்கொண்டே உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது’’

இவையெல்லாம் எதை உணர்த்துகிறது என்றால் எங்களைக்காட்டிலும் உங்களுடைய நாட்டில் நாய்கள் எவ்வளவோ நல்ல நிலையில் உள்ளது. இங்கு இன்று நீங்கள் இறந்தால் நாளை மறக்கப்பட்டு விடுவீர்கள். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்து போனால், உயிரோடு இருப்பவர்களுக்கு அது ஏற்படுத்திய பேரிழப்பால் இப்படித்தான் கதறுவார்கள்: “இந்தப் பாவப்பட்டவன் ஏன் இறந்தான்? அவனுக்குப் பதிலாக நானல்லவா இறந்திருக்க வேண்டும்’’. அங்கிள் உண்மை என்னவென்றால், எங்களுக்கு வாழவும் தெரியாது. சாகவும் தெரியாது. நான் இதையும் கேள்விப்பட்டேன்.

உங்களுடைய நாட்டுப் பிரஜை ஒருவர் அவர் இறந்த பின் எத்தகைய சவஅடக்கம் அவருக்குக் கொடுக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரியாததால், அவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு சவ அடக்கம் எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்று நிகழ்த்திக் கொண்டாடினாராம். அவர் விருப்பப்பட்டால் ஒழிய எதுவுமே நடக்காத, செல்வம் கொழித்த, பகட்டான அவருடைய வாழ்க்கைக்கு இது தகுதியுடையதுதான். அவருடைய சவ அடக்கத்தில், காரியங்கள் சரியாகச் செய்யப்படாமல் போகும் சாத்தியங்களை அவர் ஒழித்துக் கட்ட விரும்பினார். உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய இறுதிச் சடங்குகளை அவரே நேராக நின்று பார்த்தது அவரளவில் நியாயமானதுதான். ஏனெனில் மரணத்திற்குப் பின் நடப்பவை எல்லாம் இங்கும் இல்லாதது; அங்கும் இல்லாதது.

நான் சற்று முன்தான் ‘Life’ (நவம்பர்-5 1951 சர்வதேச வெளியீடு) இதழைப் பார்த்தேன். அமெரிக்க வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். இரண்டு பக்கங்கள் விரிந்திருந்த அந்த விவரணை உங்கள் நாட்டின் ஆகச்சிறந்த கொள்ளைக்காரனின் இறுதிச் சடங்கை விவரித்திருந்தது. நான் வில்லிமொரீட்டியின் (அவனின் ஆன்மா சாந்தி அடையட்டும்) படத்தைப் பார்த்தேன்.

சமீபத்தில் $55,000க்கு விற்கப்பட்ட அவருடைய மிகப் பிரம்மாண்டமான வீட்டையும் பார்த்தேன். இந்த உலகத்தின் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்க அவன் வைத்திருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் பார்த்தேன். கண்கள் மூடியிருக்க இறந்து போனதுபோல் அவன் படுக்கையில் கிடந்த படத்தையும் பார்த்தேன். $5000 விலை நகைப்பெட்டியும், அவருடைய சவ அடக்கத்திற்கு எழுபத்தைந்து கார்கள் ஊர்வலமாக வந்த படங்களும் அதில் இருந்தது. கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன், அது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் வாயில் மண் விழட்டும். ஒருவேளை நீங்கள் இறக்க நேர்ந்தால், வில்லி மோரீட்டியை விட பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் உங்களுக்கும் நடத்தப்பட வேண்டும்.

பயணம் செய்வதற்கு ஒரு மிதி வண்டி கூட இல்லாத ஏழ்மையில் இருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளனின் உண்மையான வேண்டுதல் இதுதான். உங்களுடைய நாட்டில் உள்ள தொலைநோக்குப் பார்வை கொண்டுள்ளவர்கள் போல், நீங்களும் உயிரோடு இருக்கும்போதே உங்களுடைய இறுதிப் பயணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். இதை நீங்கள் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. எதையுமே தவறாகவே செய்யும் பழக்கமுடையவர்கள் இதிலும் தவறு செய்யக்கூடும். நீங்கள் இறந்தபின் உங்களுடைய உடல் தகுதியான அளவிற்கு அழகுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படாமல் போகலாம்.

இந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே கூட உங்களுடைய இறுதி ஊர்வலத்திற்கு நீங்களே சாட்சியாக இருந்திருக்கக் கூடும். நீங்கள் எல்லாம் தெரிந்தவர் என்பதால் மட்டுமல்ல, நீங்கள் என்னுடைய தந்தையின் சகோதரர் என்பதாலும் தான் நான் இதையெல்லாம் சொல்கிறேன்.

என் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல்லுக்கும், அவரை ஆபாச வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரியப்படுத்தவும். நான் என்னை அறியாமல் ஏதாவது தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களின் ஏழைச் சகோதரனின் மகன்
சாதத் ஹசன் மண்ட்டோ
பாகிஸ்தானில் குடியிருப்பவன்
(இந்தக் கடிதத்திற்குப் போதுமான அளவு தபால்தலை இல்லாததால் தபாலில் சேர்க்க முடியவில்லை.)

2

31 லஷ்மி மேன்ஷன்,
ஹால்ரோடு,
லாகூர்.

என் மதிப்பிற்குரிய அங்கிள்,

வணக்கம்.

நான் சமீபமாக உங்களுக்கு ஏதும் எழுதவில்லை. உங்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றாலும் உங்கள் தூதரகத்திலிருந்து ஒரு நாகரிகமான மனிதர் - அவருடைய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, சில நாட்களுக்கு முன் உள்ளூர்க்காரர் ஒருவரோடு என்னைப் பார்க்க வந்தார். அந்த நாகரிகமான மனிதரோடு நடந்த உரையாடலின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.

நாங்கள் ஆங்கிலத்தில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் ஆங்கிலம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கை முழுக்க என்னால் புரிந்து கொள்ள முடியாத, அமெரிக்க மொழி அல்ல அது.

நாங்கள் முக்கால் மணிநேரம் பேசினோம். ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு பாகிஸ்தானியையோ, ஒரு இந்தியனையோ சந்திக்கும்போது சந்தோஷப்படுவது போலவே என்னைச் சந்தித்ததிலும் சந்தோஷப்பட்டார். அவரைச் சந்தித்ததில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தேன். உண்மை என்னவென்றால், வெள்ளைக்கார அமெரிக்கர்களைச் சந்திப்பதில் நான் எப்போதுமே மகிழ்ச்சி அடைந்தது கிடையாது.

தயவு தாட்சண்யம் அற்ற என்னுடைய வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். போன யுத்த சமயத்தில், நான் பம்பாயில் இருந்தபோது ரயில் நிலையமான பம்பாய் சென்ட்ரலில் நான் என்னையே கண்டேன். அந்த நாட்களில் நகரம் முழுக்க எங்கு பார்த்தாலும் அமெரிக்கர்கள்தான். பாவப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களை எவரும் சீண்டவில்லை. பம்பாயைச் சேர்ந்த ஆங்கில-இந்தியப் பெண்மணிகள், யூதப் பெண்கள், பார்ஸி பெண்கள் நாகரிகம் என்பதால் கண்ட இடத்தில் படுத்தவர்கள் இப்போது ஒரு அமெரிக்கனோடு கைகோர்த்து நடப்பதைப் பார்க்க முடிந்தது.

அங்கிள், நான் சொல்வதை நம்புங்கள். உங்களுடைய படைவீரர்களில் ஒருவர் ஒரு ஆங்கில-இந்தியப் பெண்ணுடனோ, யூதப் பெண்ணுடனோ, பார்ஸி பெண்ணுடனோ, கைகோர்த்து பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கடந்து செல்ல நேர்ந்தால், அவர்கள் பொறாமையால் வெந்து எரிவதைப் பார்க்க முடிந்தது.

இந்த உலகத்தில் உண்மையிலேயே நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான மனிதர்கள்தான். எங்களுடைய படை வீரர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவில் பாதி அளவைக்கூட பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய அலுவலக உதவியாளனுக்குக் கூட மூச்சு முட்டும்வரை ஒரு வயிற்றை அல்ல, இரண்டு வயிறுகளை நிரப்பிக் கொள்ள முடிகிறது.

அங்கிள், நான் தவறாகப் பேசுவதற்கு மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையிலேயே இது மாபெரும் ஏமாற்றும் வேலை இல்லையா? இதற்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? இதையெல்லாம் சொல்வதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், உங்கள் நடத்தைகள் எல்லாம் வேறு எதற்காகவும் அல்லாமல் ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது: பகட்டாய் வெளிப்படுத்துவது. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் தவறு செய்வது மனித இயல்புதானே! நீங்களும் மனிதர்தான் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால் அதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது.

நான் தடம் புரண்டு போகிறேன். பம்பாய் சென்ட்ரலில் உங்களுடைய படை வீரர்கள் பலரைப் பார்த்தது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் என்றாலும் சில கருப்பர்களையும் எதிர்கொண்டேன். உண்மையைச் சொல்லத்தான் வேண்டும் என்றால், அந்தக் கருப்புப் படை வீரர்கள் வெள்ளைக்காரர்களைக் காட்டிலும் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.

உங்களுடைய மக்கள் பெரும்பாலானோர் ஏன் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வெள்ளையர்கள் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் நீக்ரோ என்றழைக்கப்படும் கருப்பர்கள் கூட அதை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணாடி ஏன் தேவைப்படுகிறது? எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. இப்படியும் இருக்கலாம். இவையெல்லாம் உங்களுடைய பெரிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். நீங்கள் ஐந்து சுதந்திரங்களைப் பெற்றுள்ளதால் உங்களால் சுலபமான நிரந்தரமான தூக்கத்திற்கு ஆளாகப்படுகிறவர்கள் - நீங்கள் அப்படி செய்வது உண்டுதானே, உங்களை உங்களுடைய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்கப்படுவதை நீங்கள் விரும்பியிருக்கலாம்.

பம்பாய் சென்ட்ரலில் நான் ஒரு நீக்ரோ படை வீரரைப் பார்த்தேன். அவருடைய புஜங்களின் உறுதியைப் பார்த்த அந்த கணத்திலேயே என் உயரத்தில் பாதியாக நான் சுருங்கிப்போனேன். எப்படியோ என் தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவரை நோக்கி நடந்தேன். அவர் முதுகைச் சுவரில் சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மூட்டை முடிச்சுகள் அவருக்கு அருகில் இருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.

என்னுடைய காலணிகளைத் தரையில் தேய்த்து நான் சத்தம் எழுப்ப, அவர் கண்களைத் திறந்து பார்த்தார். நான் அவரிடம் ஆங்கிலத்தில், ‘நான் இவ்வழியே போய்க் கொண்டிருக்க, உங்கள் ஆளுமையில் மெய் மறந்து நின்றுவிட்டேன்’ என்றேன். பிறகு அவரை நோக்கி நட்புக்கரம் நீட்டினேன்.

கண்ணாடி அணிந்து கொண்டிருந்த அந்தப் படை வீரர், தன்னுடைய திடகாத்திரமான கையால் என் கையைப் பிடிக்க, என் கை எலும்புகள் சுக்குநூறாவதற்கு முன்பே என் கையை விடுவிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய கருத்த உதடுகளில் பெரிய புன்னகை தோன்றியது, அவர் என்னிடம், ‘நீங்கள் யார்?’ என்று சுத்தமான அமெரிக்க உச்சரிப்பில் கேட்டார்.

என் கையைத் தடவிக் கொடுத்தபடியே, ‘நான் இங்குதான் வாழ்கிறேன்’ என்றேன். மேலும், ‘நான் உங்களை இந்த நிலையத்தில் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது’ என்றேன்.

‘இங்கு நிறைய படை வீரர்கள் இருக்கிறார்கள். ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்டார்.

இது சிக்கலான கேள்வி என்றாலும் நான் சிரமப்படாமல் அதற்கு பதில் தந்தேன். ‘நான் கருப்பு நீங்களும் அப்படியே. நான் கருப்பின மக்களை நேசிக்கிறேன்’ என்றேன். மிகப்பெரிய சிரிப்பை வெளிப்படச் செய்தார். அவருடைய கருத்த உதடுகள் அவ்வளவு அழகாக இருந்தது. அதில் முத்தமிடவேண்டும் என்று தோன்றியது. கதை முற்றும்.

அங்கிள், உங்களுடைய பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். ‘பாத்திங் பியூட்டி’ என்ற உங்களுடைய திரைப்படம் ஒன்றை முன்பு ஒரு முறை பார்த்தேன். ‘இத்தனை அழகான கால்களை எங்கிருந்து எப்படி அங்கிள் ஒன்று திரட்டினார்' என்று என் நண்பர்களிடம் பின்னர் கேட்டேன். ஏறக்குறைய இருநூற்றி ஐம்பது கால்கள் அதிலிருந்தது என்று நினைக்கிறேன். அங்கிள் உங்கள் நாட்டில் பெண்கள் கால்கள் அப்படித்தான் இருக்குமா? அப்படி இருந்தால் கடவுள் புண்ணியத்தில் (அதாவது உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால்) குறைந்தபட்சம் அதை பாகிஸ்தானில் கண்காட்சியாக்குவதைத் தடுத்து நிறுத்துங்கள்.

இங்கு பெண்களின் கால்கள் உங்கள் நாட்டுப் பெண்களின் கால்களைவிட அழகாக இருப்பதுகூட சாத்தியம். ஆனால் அதை இங்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாங்கள் எங்களுடைய மனைவிமார்கள் கால்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். மற்ற கால்கள் எல்லாம் எங்கள் பார்வைக்குத் தடை செய்யப்பட்டதாகும். உங்களுக்குத் தெரியும்தானே, நாங்கள் மரபைப் போற்றுபவர்கள்.

நான் மீண்டும் தடம் புரண்டு போகிறேன் என்றாலும் இம்முறை மன்னிப்புக் கோரப்போவதில்லை. ஏனெனில் இத்தகைய எழுத்துகள்தான் உங்களுக்குப் பிடித்திருக்கும். என்னைப் பார்க்க வந்த அந்த நாகரிகமான மனிதர், உங்களுடைய தூதரகத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி விட வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்காக ஒரு கதை எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். எனக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாததால், எனக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவரிடம், ‘சார் நான் உருது எழுத்தாளன். ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியாது’ என்றேன்.

“நான் உருது மொழியில் ஒரு பத்திரிகை கொண்டு வருவதால், எனக்கு உருதுக் கதைதான் வேண்டும்” என்று பதில் தந்தார். இதற்கு மேலும் விசாரிக்க விரும்பாததால், ‘நான் சம்மதிக்கிறேன்’ என்றேன்.

கடவுள்தான் என்னுடைய சாட்சி. உங்கள் உத்தரவின் பேரில்தான் அவர் என்னைப் பார்க்க வந்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை உங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தை, இவருக்கு நீங்கள் படிக்க கொடுத்திருக்கலாம்.

இதையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். எத்தனை காலத்திற்குப் பாகிஸ்தானுக்கு உங்களுடைய கோதுமை தேவைப்படுகிறதோ, அதுவரை நான் உங்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்ள முடியாது. ஒரு பாகிஸ்தானி என்ற முறையில் (என்னுடைய அரசாங்கம் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்ட குடிமகனாக என்னைப் பார்க்கவில்லை என்றாலும்) நான் கடவுளிடம் இதைத்தான் வேண்டிக் கொள்கிறேன்.

உங்களுக்கு உண்ணத் தகுந்த கீரை வகைகளும் வரகு தானியமும் தேவைப்படும் காலம் ஒன்று வரும். அன்று நான் உயிரோடு இருந்தால் நிச்சயமாக அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.

என்னிடம் கதை கேட்ட அந்த நாகரிகமான மனிதர், அதற்கு நான் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.

அங்கிள், பொய் சொல்வது உங்களுக்கு சாத்தியமானது - நிஜமாகவே அப்படிச் சொல்வதோடு, அதை ஒரு கலையாகவே அதை மாற்றிவிட்டீர்கள். ஆனால் எனக்கு அப்படி செய்யத் தெரியாது.

இருந்தாலும் அன்றைய தினம் நான் பொய் சொன்னேன்.

‘என் கதைக்கு ரூபாய் இருநூறு கேட்கிறேன்’ என்றேன்.

உண்மை என்னவென்றால் இங்கு பெரும்பாலான வெளியீட்டாளர்கள் ஒரு கதைக்கு நாற்பது முதல் ஐம்பது ரூபாய் வரை தான் கொடுப்பார்கள். அதனால் என் கதைக்கு 200 ரூபாய் வேண்டுமென்று சொன்னபோது மிகவும் அசிங்கமாகவும், அவமானமாகவும் உணர்ந்தேன். ஆனால் எல்லாம் கடந்துவிட்டது.

அங்கிள், நான் அதிர்ச்சியடைந்த அதே அளவிற்கு நீங்கள் அனுப்பி வைத்த அந்த நாகரிகமான மனிதரும் அதிர்ச்சியடைந்தார். (இது உண்மையா அல்லது நடிப்பா என்று எனக்குத் தெரியாது) ‘வெறும் இருநூறு ரூபாய் தானா... நீங்கள் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயாவது கேட்க வேண்டும்’ என்று சொன்னார்.

ஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கேட்கலாம் என்று அதிகபட்ச கற்பனையில்கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்பதால், அவர் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் நான் சொன்னதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதால், ‘இங்க பாருங்க சார்., இருநூறு ரூபாய்தான் இது சம்பந்தமாக இதற்கு மேலும் எந்தப் பேச்சு வார்த்தைக்கும் நான் தயாரில்லை’ என்று பதில் தந்தேன்.

நான் குடித்திருப்பதாக நினைத்து அவர் திரும்பச் சென்று விட்டார். நான் குடிக்கிறவன் தான். எதைக் குடிக்கிறேன் என்று என்னுடைய முதல் கடிதத்தில் விவரித்துள்ளேன். அங்கிள், இங்கு தயாரிக்கப்படும் அந்த விஷத்தைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாகக் குடித்துக் கொண்டிருந்தும், நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எப்போதாவது இங்கு வர நேர்ந்தால் இந்தக் கேடுகெட்டதை உங்களுக்கும் குடிக்கக் கொடுக்கிறேன். நீங்களும் அதைக் குடித்துவிட்டு உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு என்னைப்போல் உயிரோடு இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் அடுத்தநாள் காலை நான் வராண்டாவில் சவரம் செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய இந்த நாகரிகமான மனிதர் மீண்டும் தோன்றி, "இங்கே பாருங்கள். இருநூறு ரூபாய்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். முந்நூறு ரூபாயாவது வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்.

நான் நல்லது என்று சொல்லி அவர் கொடுத்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டேன். அந்தப் பணத்தை என் சட்டைப்பையில் வைத்தபின் அவரிடம், ‘நான் உங்களிடம் நூறு ரூபாய் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எழுதுவது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அதில் மாற்றங்கள் செய்யும் உரிமையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்' என்றேன்.

இதற்குப் பிறகு அவர் என்னைப் பார்க்க வந்ததே கிடையாது. நீங்கள் அவரைச் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது உங்களிடம் அவருடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்போதோ உங்கள் பாகிஸ்தான் சகோதரரின் மகனுக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்.

அந்த முந்நூறு ரூபாயை நான் ஏற்கனவே செலவு செய்துவிட்டேன். உங்களுக்கு அந்தப் பணம் திரும்ப வேண்டும் என்றால், மாதத்திற்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் திரும்பக் கொடுத்து விடுகிறேன்.

உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

உங்களுக்குக் கீழ்ப்படிந்த
உங்கள் சகோதரனின் மகன்.
சாதத் ஹசன் மண்ட்டோ

3

31, லஷ்மி மேன்ஷன், 15, மார்ச் 1954
ஹால் வீதி, லாகூர்.

அன்புள்ள அங்கிள்,

வணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இதை எழுதுகிறேன். விஷயம் என்னவென்றால் நான் நோயுற்று இருந்தேன். எங்களுடைய கவித்துவ மரபில் நோய்க்கான மருந்து என்பது நீண்ட கழுத்துள்ள குவளையிலிருந்து, உமர்கயாமின் கவிதைகளிலிருந்து நேரடியாகத் தோன்றும் ஒயிலான கவர்ச்சி மங்கைகள், அருமருந்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் உள்ளது. இருந்தாலும் நான் இதையெல்லாம் வெறும் கவிதை என்றே நினைக்கிறேன். குவளையை ஏந்தி வரும் அழகு மங்கைகள் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு தாடி முளைத்த கோரமான வேலையாட்கள் கூட குவளை ஏந்தி வருவது கிடையாது.

இந்த மண்ணிலிருந்து அழகெல்லாம் ஓடோடி விட்டது. பெண்கள் முகத்திரைக்கு வெளியே வந்துவிட்டார்கள் என்றாலும், அவர்களுடைய முகத்தை ஒரே ஒருமுறை பார்த்தால் போதும், முகத்திரைக்குப் பின்னாலேயே அந்த முகங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுடைய மாக்ஸ் ஃபேக்டர் அவர்களுடைய முகங்களை மேலும் கோரமாக்கிவிட்டது. இலவச கோதுமை, இலவச இலக்கியம், இலவச ஆயுதங்கள் என்று நீங்கள் அனுப்பி வைக்கிறீர்கள். மிகத் தூய்மையான இருநூறு அமெரிக்கப் பெண்மணிகளை நீங்கள் ஏன் இங்கு அனுப்பி வைக்கக்கூடாது? குறைந்தபட்சம் குடிப்பதற்கு எப்படி ஊற்றிக் கொடுக்க வேண்டுமோ அப்படியாவது அவர்கள் ஊற்றிக் கொடுக்கட்டும்.

நான் நோயுற்றுப் போக, அசாத்திய வேகம் கொண்ட அந்த மதுதான் காரணம் நான் கடவுளைச் சபிக்கிறேன். கலப்படம் ஏதும் இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்வதென்றால் - அது விஷம். எனக்கு ஏனென்று தெரியாததும் இல்லை. புரிந்து கொள்ள முடியாததும் இல்லை. ஆனால் கவிஞன் மீர் எழுதிய வரிகள் என் நிலைப்பாட்டிற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

எவ்வளவு சாதாரணமானவன் இந்த மீர். மருந்து விற்பவனின் மகன்தான் அவனை நோயுறச் செய்தான்மருந்து விற்பவனின் மகன்தான் அவனுக்கு மருந்துகளை வாங்கி வர ஓடினான். எந்த மருந்து விற்பவனின் மகனால் அவன் நோயுற்றிருக்கிறான் என்று மீர் அறிந்திருந்தும், ஏன் அதே மருந்து விற்பவனின் மகனிடம் மருந்தை எதிர்பார்க்கிறான் என்று யாருக்குத் தெரியும். நான் எவனிடமிருந்து என் விஷத்தை வாங்குகிறேனோ அவன் என்னைக் காட்டிலும் மோசமாக நோயுற்றுக் கிடக்கிறான். நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் கடின உழைப்புக்குப் பழக்கப்பட்டுப் போனதுதான். அவன் நிலையில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.

மூன்று மாதங்கள் மருத்துவமனையின் பொது வார்டில் இருந்தபோது அமெரிக்காவிலிருந்து எந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் நோயுற்று இருந்ததையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று டெராமைசின் புட்டிகளை எனக்கு அனுப்பி வைத்து, அதற்காக இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் நற்பெயரைப் பெற்றிருப்பீர்கள்.

அயல்நாடுகளில், எங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் செய்ய நிறைய இருக்கிறது என்றாலும் எங்களுடைய அரசாங்கம் எந்த நிலையிலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஓவியர்கள் மீது கொஞ்சமும் ஈடுபாடு காட்டப் போவதில்லை.

என்னால் நினைவில் கொண்டு வர முடிகிறது. புலம்பிக் கொண்டிருந்த எங்களுடைய முந்தைய அரசாங்கம் ஃபிர்தௌஸி -இ- இஸ்லாம் ஜூலந்தரியை மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று பாடல்களைப் பிரபலப்படுத்தும் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்டது எல்லாம் ஒரு வீடும் ஒரு அச்சு இயந்திரமும்தான். இன்று நீங்கள் செய்தித்தாள்களை விரித்துப் பார்த்தால் என்ன பார்க்க முடிகிறது?

பாகிஸ்தானுக்கு தேசியகீதம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டதால், ஹஸிப் ஜூலந்தரி புலம்பிக் கொண்டிருக்கிறார். உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாட்டிற்குத் தேசியகீதம் எழுதுவதற்கும், ஏன் அதை இசை வடிவில் கொடுப்பதற்கும் உள்ள ஒரே கவிஞர் அவர்தான். பிரிட்டிஷார் போய் விட்டதால் அவர் தன்னுடைய பிரிட்டிஷ் மனைவியை விவகாரத்து செய்துவிட்டார். இப்போது அவர் ஒரு அமெரிக்க மனைவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கிள், கடவுளுக்குப் புண்ணியமாகட்டும். அவருக்கு இந்த விஷயத்தில் ஏதாவது உதவி செய்து, மிக மோசமான முடிவிலிருந்து அவரைக் காப்பாற்றுங்கள்.

உங்களுடைய சகோதரன் மகன்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், இந்த சகோதரன் மகன் போன்ற உண்மையானவனை நீங்கள் அணுகுண்டு வெளிச்சத்தில் கூட காண முடியாது. அதனால் நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நான் வேண்டுவது எல்லாம் இதுபோல் ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட வேண்டும்: ‘அதாவது உங்கள் நாடு (காலம் முடியும் வரை கடவுள் அதைக் காப்பாற்ற வேண்டும்) ஆயுதங்கள் கொடுத்து எங்கள் நாட்டிற்கு (இந்த நாட்டில் உள்ள மதுபான தயாரிப்பாளர்களை அந்தக் கடவுள் ஒழித்துக் கட்டட்டும்) உதவ வேண்டுமானால் சாதத் ஹசன் மண்ட்டோவை உங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்’.

ஒரே இரவில் என்னுடைய மதிப்பு எங்கோ போய்விடும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, நான் ‘ஷாமா’ மற்றும் ‘டைரக்டரி’யில் வரும் குறுக்கெழுத்துப் போட்டியை விளையாடுவதை நிறுத்திவிடுவேன். மிக முக்கியமானவர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவார்கள். உங்களுடைய வழக்கமான பல்லிளிப்பை ‘ஏர் மெயிலி’ல் எனக்கு அனுப்பி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதை என் முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு வருகிறவர்களை ஒழுங்காக அப்போதுதான் வரவேற்க முடியும்.

இது போன்ற பல் இளிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ''நீ கழுதை', ' நீ வழக்கத்திற்கு மாறாக அதி புத்திசாலி', 'எனக்கு மன அமைதியைத் தவிர வேறு எதுவும் இந்தச் சந்திப்பில் கிடைக்கவில்லை', 'நீ அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட்', 'நீ பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி', நீ உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்து', 'நீ கோக்கோ-கோலா' இத்யாதி.. இத்யாதி...

பாகிஸ்தானில் நான் வாழ விரும்ப காரணம், பூமியில் இந்தத் துண்டுப் பகுதியை நான் நேசிக்கிறேன். இதிலிருந்து புறப்படும் தூசியெல்லாம் நிரந்தரமாக என் இதயத்தில் படிந்து விட்டது. இருந்தாலும் என் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்கு உங்கள் நாட்டிற்கு வருவேன். என் இதயத்தைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் உங்கள் நாட்டு நிபுணர்களிடம் கொடுத்து அதையெல்லாம் அமெரிக்காவாக மாற்றிக் கொள்வேன். எனக்கு அமெரிக்க வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது.

உங்கள் டி-சர்ட் வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது. அது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு விளம்பரங்களுக்கும் ரொம்பவும் உபயோகமானது. ஒவ்வொரு நாளும் அன்றைய பிரச்சார வரிகளை அதில் அச்சடித்து ஷ¨ஸானிலிருந்து காபி ஹவுஸ் முதல் சீன உணவகம் வரை போனால் அதில் உள்ள வரிகளை எல்லோரும் படிக்கலாம். டீ-சர்ட் போட்டுக் கொண்டு, நீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பைப்பை என் பற்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, மாலுக்குப் போக எனக்கு பேக்கார்ட்டு வண்டியும் தேவை. என்னைப் பார்த்தவுடன் எல்லா முற்போக்கு மற்றும் முற்போக்கு அல்லாத எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களுடைய நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

ஆனால் பாருங்கள் அங்கிள், காருக்கு பெட்ரோலை நீங்கள்தான் வாங்கித் தர வேண்டும். இருந்தாலும் எனக்கு பேக்கார்ட்டு கிடைத்த அந்த நொடியிலேயே 'ஈரானின் ஒன்பது மணங்கு எண்ணெயும் ராதையும்' என்று கதை எழுதுவதாக உறுதிமொழி தருகிறேன். என்னை நம்புங்கள். அந்தக் கதை பிரசுரமாகும் அந்தக் கணத்திலேயே ஈரான் எண்ணெயோடு உள்ள எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பிறகு உயிரோடு இருக்கிற மௌலானா ஜபார் அலிகான் 'லாய்ட் ஜார்ஜும் எண்ணெயும்' என்ற கவிதையை மாற்றி எழுத வேண்டி வரும்.

நான் உங்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு விஷயம் குட்டிக் குட்டியான அணுகுண்டுகளை நீங்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட நாட்களாக ஒரு நற்காரியம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளேன். அது என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுவது இயற்கையானதுதான்.

நீங்கள் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். ஹிரோஷிமாவை நிர்முலமாக்கினீர்கள். நாகசாகியை தும்பும் தூசுமாக்கினீர்கள். ஒவ்வொன்றும் அதனதன் வடிவில் என்று பல ஆயிரம் குழந்தைகள் ஜப்பானில் பிறப்பதற்குக் காரணமானீர்கள். எனக்கு வேண்டியதெல்லாம், எனக்குச் சில சலவை இயந்திரங்களை அனுப்பி வையுங்கள். இது அப்படித்தான்: இங்கு பல முல்லா வகையறாக்கள் சிறுநீர் கழித்த பிறகு ஒரு கல்லை எடுத்து, ஒரு கையை நாடா அவிழ்க்கப்பட்ட சல்வாருக்குள் விட்டு சிறுநீர் கழித்த பிறகு சொட்டக்கூடிய துளிகளைக் கல்லில் பிடித்து, அவர்கள் நடையைத் தொடருகிறார்கள். இதைப் பொதுவில் எல்லோரும் பார்ப்பது போல் செய்கிறார்கள். நான் விருப்பப்படுவது எல்லாம் அப்படி ஒருவன் தோன்றும் அந்த சமயத்தில் நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த அணுகுண்டை எடுத்து அவன் மீது வீச அந்த முல்லாவும் அவன் பிடித்துக் கொண்டிருக்கும் கல்லும் புகையாக மாற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

எங்களோடு நீங்கள் போட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதை நீங்கள் அப்படியே தொடர வேண்டும். இந்தியாவோடும் இதற்குச் சமமான ஒன்றை நீங்கள் கையெழுத்திட வேண்டும். போன யுத்தத்தில் நீங்கள் உபயோகித்து இப்போது பயனற்று இருக்கும் ஆயுதங்களை எல்லாம் எங்கள் இருவருக்கும் விற்பனை செய்யுங்கள். இந்தக் குப்பைகள் எல்லாம் உங்களிடமிருந்து அகற்றப்படுவதோடு, உங்களுடைய ஆயுதத் தொழிற்சாலைகளும் இனிமேல் வேலையற்று இருக்காது.

பண்டிட் ஜவகர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு சூரிய ஒளியில் வைத்தவுடன் வெடிக்கும் துப்பாக்கி ஒன்றை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நானும் காஷ்மீரைச் சேர்ந்தவன்தான். ஆனால் முசல்மான். அதனால்தான் எனக்கென்று சிறிய அணுகுண்டுகளைக் கேட்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம். எங்களால் அரசியல் சாசனத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் தயவுபண்ணி சில நிபுணர்களை அனுப்பி வையுங்கள். ஒரு தேசம், தேசியகீதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனம் இல்லாமல் இருக்க முடியாது - உங்களுடைய விருப்பமும் அதுவாக இருந்தால் மட்டும்.

இன்னும் ஒரு விஷயம். இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடன் ஒரு கப்பல் முழுக்கத் தீப்பெட்டிகளை எனக்கு அனுப்பி வைக்கவும். இங்கு தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் ஈரானில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளோடு உரசினால்தான் பற்ற வைக்க முடிகிறது. பாதிபெட்டி வரை உபயோகித்த பின், மிச்சத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகள் உதவியில்லாமல் உபயோகிக்க முடியாமல் வீணாகிறது. ஆனால் அது தீக்குச்சி போல் அல்லாமல் பட்டாசுபோல் நடந்து கொள்கிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மேலங்கி அற்புதமானது. அவை இல்லாமல் எங்கள் லண்டா பஜார் வெறிச்சோடிக் கிடக்கும். அங்கிள், நீங்கள் ஏன் எங்களுக்கு டிரவுசர்களையும் அனுப்புவதில்லை. நீங்கள் உங்கள் டிரவுசர்களைக் கழற்றுவதே கிடையாதா? அப்படி ஒருவேளை செய்தால், அதை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள். இதிலும் ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும். எங்களுக்கு டிரவுசர் இல்லாமல் மேலங்கியை மட்டும் அனுப்பி வையுங்கள். டிரவுசரை எல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி வையுங்கள். யுத்தம் என்று வந்தால் உங்களுடைய டிரவுசரும் மேலங்கியும் நீங்கள் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு போரிட்டுக் கொள்ளும்.

சார்லி சாப்ளின் தன்னுடைய அமெரிக்கப் பிரஜா உரிமையைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப்பட்ட விஷயம் என்ன? அந்தக் கோமாளி என்ன செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறான்? நிச்சயமாக அவன் கம்யூனிஸத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க உங்கள் நாட்டில் வாழ்ந்தவன், பேரும் புகழும் பெற்றவன், பணமும் சம்பாதித்தவன், அவன் செய்தது போல் செய்திருப்பானா? எவராலும் கவனிக்கப்படாமல் லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்துத் திரிந்ததை அவன் மறந்துவிட்டான் போலும்!

அவன் ஏன் ருஷ்யாவிற்குப் போகவில்லை? ஆனால் அங்குதான் கோமாளிகளுக்குப் பஞ்சமே இல்லையே. அவன் இங்கிலாந்துக்குத்தான் போக வேண்டும். அப்போதாவது அங்குள்ளவர்கள் அமெரிக்கர் போல் வாழ்க்கையில் வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக் கொள்ளட்டும். தற்போதைய நிலையில் அவர்கள் எப்போதும் துயரம் நிறைந்தவர்களாகவும், தற்பெருமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய போலித்தன்மைகளில் சிலவற்றைக் கிழித்து எறிவதற்கு, இதுதான் சரியான சந்தர்ப்பம்.

ஹெட்டி லாமருக்கு காற்றில் ஒரு சுதந்திரமான முத்தம் கொடுத்து நான் இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.

உங்கள் சகோதரனின் மகன்
சாதத் ஹசன் மண்ட்டோ.

குறிப்புகள்:

1. ஹஸிப் ஜுலந்தரி - சுதந்திரத்திற்கு முன் மிக முக்கியமான உருதுக் கவிஞர். ஷாநாமா -இ-இஸ்லாம் என்ற இஸ்லாமிய வரலாறு பற்றிய காவியப் படைப்பின் மூலம் பிரபலமானவர். ஷாநாமா என்ற காவியத்தைப் படைத்த பாரசீகக் கவிஞன் ஃபிர்தௌசிக்கு சமமாக ஒப்பிடக்கூடியவர். ஹசீஃப் பிரபலமாக ஃபிர்தௌசி -இ- இஸ்லாம் என்று அழைக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் தேசியகீதம் எழுதும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட அவரும் அதைச் செய்து முடித்தார். இருப்பினும் தன்னுடைய திறமைக்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு இருந்தது. அவரை மனிதனாகவோ, கவிஞனாகவோ மண்ட்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.

2. டெல்லியிலிருந்து வெளிவந்த 'ஷாமா', லாகூரில் இருந்து வெளிவந்த 'டைரக்டர்' இரண்டும் பிரபலமான உருதுப் பத்திரிகைகள். அச்சமயத்தில் இப்பத்திரிகைகள் குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தி நிறைய பணத்தைப் பரிசாகக் கொடுத்தது.

3. ஸெலின் காப்பி ஹவுஸ், பாக் டீ ஹவுஸ், செனே உணவகம் எல்லாம் லாகூரில் உள்ள மாலில் உள்ள பிரபலமான உணவகங்கள். எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் அங்கு ஒன்று கூடுவது வழக்கம். பாக் டீ ஹவுஸ் மட்டுமே பெரும் நஷ்டத்தில் இருந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

4. மௌலானா ஜாஃபர் அலிகான்: கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். 'ஜமீன்தார்' என்ற செய்தித்தாளை நிறுவியவர். 1950களில் இறந்து போனார்.