கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 நவம்பர், 2010

அக(கா)லமாகும் வதந்திகள் -செல்மா பிரியதர்ஸன்

சாலையோரங்களில்
மரங்களை நட்டவன் கருணைமிக்கவன்
எனினும்
அந்திநேரங்களில் அடையவரும் பறவைகள்
வாகனப் பேரிரைச்சல்களைப்
பொருட்படுத்துவதில்லை
மரங்களை நட்டது
அசோகர்தான் என்று நம்புவது
சிறுவர்களின் வரலாற்றுப் பிரம்மைதான்
கோடை உலுப்பிய
புளியம் பழங்களைப் பொறுக்கிய
மூதாட்டிகளில் ஒருத்தி
சக்கரங்களில் நசுங்கிப் பிசாசாகத் தொங்குவதும்
சாலை வளைவுகளில்
தொடர்பலிகள் கேட்பதும்
பழங்கால வதந்திகள் என்று ஒதுக்குவதற்கில்லை
அரசாங்கம் என்பதும் சேவகம் செய்வது
அது சாலைகளை அகலமாக்கும்
அப்போது வெட்டிச் சரியும் மரங்கள்
பெருங் குரலெடுத்துச் சரியும் ஓசை
சாபமாக வானின் மீது படியும்
எனச் சொல்பவன் பயங்கரவாதி
வளர்ச்சிக்கு எதிரான அவன்
எங்காவது தொலைந்து போகலாம்
இப்போதும் வீழ்ந்த மரங்களிலிருந்து
கூடுகளைப் பத்திரப்படுத்திக் கொண்டு போகிறவர்கள்
சிறுவர்கள்தான்
ஒப்பந்தக்காரர்களின் கன்டெய்னர்கள்
சாலைகளை இறக்கிவைத்துவிட்டு
கிராமங்களின் நிழல்களை
தூக்கிச் செல்கின்றன
சாலையோர கல்லறைகளில் பிடுங்கி எறியப்பட்ட
கபால எலும்புகளைப் பதியனிட
மாற்றிடம் வேண்டி
பொக்லைன்களிடம் மன்றாடுவது வேடிக்கைதான்
அடையாத அந்திகளில்
சிறுவர்கள் சேகரித்த கூடுகளை
இரகசியமாய் திறந்து பார்த்துக் கொள்கையில்
திசை குழம்பிய பறவைகளின் உள்ளுறைந்த கூச்சல்
பெரும்பாலானோர் தங்களது இருப்பிடங்களை
கடந்தும் சென்றுகொண்டிருக்க
சிலர் சித்த பிரம்மையாகிவிட்டார்கள்
நீண்ட கன்டெய்ணர்களுக்காக
அகலமாக்கப்பட்ட சாலையின் முடிவில்
தெரியும் கட்டிடம் கூட
நமது பாராளுமன்றம் இல்லை என்று சொன்னால்
இனி அவர்களுக்குப் புரியப்போவதில்லை.

ச.ப்ரியா கவிதைகள்

வெயில்கால இரவு

யானையின் தும்பிக்கை
லாவகத்துடன்
கபளீகரம் நிகழ்த்தும்
பொக்ளியர் இயந்திரத்தின் இரைச்சல்
பீறிட்டழும் மரங்களின் மரணஓலம்
வேர் நரம்புகளை
பிடுங்கியெறிந்து
நிரத்திய மண்பரப்பு
ஆலை கட்டிடங்களுக்கு அடியில்
பறவைகளின் கிறீச்சிடல்கள்
தொலைந்து போனதொரு வெளியில்
பரவியிருக்கிறது
சைரனின் சங்கொலி அலறல்
சாயக் கழிவு
கலந்த குளத்துநீரில்
நமக்கான சூரியனின் பிம்பம்
மங்கிய ஓளிர்தலில்
இன்னமும்
என் அறையில்
பசுமையும் நீர்செழிப்புமான
பச்சை நிறக்காடுகளை
ஒளிபரப்பிக் கொண்டேதானிருக்கின்றன
டிஸ்கவ்ரியும்
நேஷ்னல் ஜியோக்ரபிக் சேனலும்.

வெயில்கால இரவு

தூரத்து மலையில்
நீண்டு நெளிந்து
பற்றியெறியும்
நெருப்பின் வேட்கை
வனம் விழுங்கிவிட்ட பிறகும்
நீள்கிறது
அஸ்தமன இருளின்
மலைமுகட்டில்
ஒரு இரவுச் சூரியனை
உயிர்ப்பித்துவிடும்படியாய்!

உமா மகேஸ்வரி கவிதைகள்

சித்திர அரூபம்

எல்லாமும் நகர்கின்றன
விரைந்து.
நிற்பதேயில்லை அவை
திரும்பியும் பார்ப்பதில்லை.
அவற்றை
மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்
மீண்டும்
எந்தச் சக்தியும்.
பறந்து மறைகின்றன
அவை.
இந்த அரூபச் சித்திரத்தின்
வளைவுகளோடு
இழைதல்
உன்னை மீறியதா?
சுழலும் இதே
திகிலின்பத்தில்
சுண்டப்பட்டு தொலைந்து
சிதறுவதும்?

நுழைதலற்ற கதவுகள்

கார்த்திகை மழைநாளின்
கரிய இரவுகள்
நடக்கின்றன
ரகசியக் காலடிகளோடு,
கண்காணிப்புகளைத் தவிர்த்து.
இன்று உதயத்தின் விழிமூட
கிழக்குக் காற்றின்
நச்சரிப்புக்களைப்
பொருட்படுத்தாமல்
நீல வானில்
ஒரு அடர்திரை
இழுக்கப்படுகிறது.
புல்வெளிகளின் முணுமுணுப்பு
மூடிய கதவுகளோடு வீடுகள்.
இந்தப் பாலைத் தெருவில்
தனித்த பயணியின் பாதத்தடங்கள்
கடக்கின்றன
என் திறந்த வீட்டின் கதவுகளுக்குள்
நுழையாமல் தாண்டி.

அழையாமை

செல்போன் ஒலியென
நடுங்குகிறது பாதி விழிப்பு.
கோதிக் கொண்டிருக்கிறது காற்று
கந்தலான இரவுகளை.
சுருண்ட ஓடுகளோடு
குறுகிக் கிடக்கும் காலம்
செத்த ஆமையாக.

தூர மயான நெருப்பு
கேலிக்குளிர் வீசுகிறது
என் நாட்களின் மீது
அடிக்கடி.
உலர்ந்த முத்தங்களில்
இருந்து வடியும் சீழ்.

உணர்ந்தேயிராத
தாய்மை இதழ் தேடி
கனகாம்பரத்தைத்
தொடுக்கையில்
உறுத்தும் பாதச் சிறகு.
விரிந்த விரல்களின் சல்லடையில்
யாருடையதோ கண்ணீர்.
பொருக்குக் காய்ந்த
உணர்வுகளுக்குள்
புனல் சிறகசைக்க
போதுவதேயில்லை
ஒற்றை அழைப்பு.

கைக்குட்டைக் கனவுகள் -பிரேம பிரபா

தத்தம் கனவுகளை
யாருமறியாமல்
எடுத்துப் போகிறவர்கள்
பாக்யவான்கள்.
துவைத்து உலர்த்திய
கைக்குட்டையெனினும்
இழையின் ஓரங்களில்
மடிப்பின் பிளவுகளில்
கனவுகள் ஒளிந்திருக்கும்
சாத்தியக் கூறுகளுண்டு.
முகத்தருகே
கைக்குட்டையைக்
கொண்டு போக
உங்களை முத்தமிட்ட கனவுகள்
கண்களை மூடியபடி
தவிப்புடன் இருக்கும்
மீண்டுமோர் முத்தத்திற்காக.
சுவாசம் திணறும்
வாசனைத் திரவியங்களால்
போதையேறி
தள்ளாடிவிழும் கனவுகளை
உங்கள் வீட்டிலோ
அலுவலகத்திலோயிருந்தால்
அப்புறப்படுத்திவிடுங்கள்
துளியேனும் தாமதிக்காமல்.
முடிவாக ஒன்று
இனிமேலாவது
உங்கள் கைக்குட்டைகளை
நீங்களே பராமரியுங்கள்.
குறைந்த பட்சம்
கனவுகளின் ரகசியங்களை
பாதுகாக்கும் பொருட்டாவது.

இருத்தல் நிமித்தங்கள்... :-பு.க.சாலினி

வெளிறிய வானில் வெண்மேகத் திட்டுகள்
களிபாளம் விட்ட மனதில் படரும் சஞ்சலப் படிவுகள்
மனித முகங்களின் மனப்போக்குவரத்தில்
மறைந்து சிதையும் தீற்றல் புள்ளிகள்
மின்னல் வேலியில் சருகுகள்
விள்ளல் முகம் நோக்கிய உறவுகள்
உன்மத்த உலகினையும் ஊழல் உப்பரிகைகளையும்
சிறை கொண்டன கேந்திரங்கள்.
அன்பின் வறுமை தெளிவின் வெறுமை
அன்றாடப் பூபாளம் நாட்காட்டியுடன்
மன்றாடும் நீலாம்பரி விழித்துளிகள்
மனிதச் சக்கைகளின் அகங்களில்
சரள சம்பிரதாயச் சரடுகள்
மரத் தக்கைகளுடன் சுவர்களில் புரளும் இதயச் சுவடுகள்
கண்களின் எதிர்பார்ப்பு விரிசல்கள்
கனவுக் கண்ணாடிஉடைசல்கள்.
கவலை எச்சக் கிழிசல்கள் கவியான ஆசைப் பிழியல்கள்
ஏகாந்தத்துடன் தனிமை உறவாடல்
எதிர்க்காற்றில் கருத்துக் களவாடல்
ஏசும் கண்களின் கடமை மீறல்
எக்களிக்கும் உயர்வின் உரிமை கோரல்
பட்ட மரத்தின் கிளை நுணுக்கங்களாய்
விட்டுத் தெறிக்கும் உணர்வுத் துணுக்குகள்
அத்தனைக்கும் மொத்தமாய்
தென்றலும் தேம்பியவாறு உறையும் மன இடுக்குகளில்
ஒளிப்பிழம்படிக்கும் நேரங்களில் நேசம் வார்க்கும்
அமுதமான அமைதி அமைக்கும்
ஆறுதல் அள்ளித் தெளிக்கும்
துன்பச் சுவடுகள் துடித்தழியும்.
இவையாவும்
இருட்டிய இருத்தலின்
ஒர் அமானுசிய அறையின்
சன்னல் கம்பிகளால் மட்டுமே.

ராணிதிலக் கவிதைகள்

தோல்வி

இன்று காலையில், என் கண்கள்,
அந்தச் சூரியனை வேட்டையாடின.
என் காதுகளின் மடிப்பில்,
அமர்ந்தபடி,
குயில்கள் பாடுவதும் தப்புவதே இல்லை.
அந்தப் பவழ மல்லியின் நறுமணம்
என் மூக்கை நோக்கியே மலர்ந்து கவிழ்கிறது.
என் விரல்கள் தீண்ட,
வெம்மையில், அக்கனி மேலும் பழுக்கிறது.
இக் கருத்த பாதை,
என் கால்களிலிருந்து விடுபட்டு ஓடுகிறது. அந்தியையும்
சாய்த்து, வீடு திரும்புகிறேன். அறையின்
இருள், நிழலெனத் தோன்றுகிறது
இன்றைய சாயுங்காலத்திலிருந்து,
வழக்கம் போலவே,
எப்போதும் போல்,
நிழல்களிடம் தோற்பவன் ஆகிறேன்.

இல்லை

என் முன்னால்
மழை பெய்கிறது
பெய்யும் மழைக்குப்
பின்புறம் இருக்கும் மலைக்கும் இது தெரியும்.
அது வலுத்துப் பெய்யும்போது
நீர்த்துளிகளையோ,
மலையையோ,
நாம் காண முடிவதில்லை.
அதன் கனக்கும் ஓசையில்,
நம்மின், மலையின் இறுக்கம் தளர்கிறது.
அப்போது
மலையுடன் நாமும் சேர்ந்து
கரைகிறோம் சட்டென, எதிர்
பார்க்காத மழை நிற்கிறது. நின்றபின்,
பார்க்கும்வேளை,
அங்கே மலை இல்லை.
மலையிலிருந்து காண,
அங்கே நான் இல்லவே இல்லை.

வி.டி.ஜெயதேவன் கவிதைகள் -தமிழில்: யூமா வாசுகி

வகுப்பறை

இந்த நான்கு சுவர்களுக்குள்,
சன்னல் கதவுகள் அடைக்கப்பட்ட
சிறை அறைகளுக்குள் வரிசையாகப் போடப்பட்ட
பெஞ்சுகளுக்குக் கீழே
பிறர் அறியாமல்
சிறிய கால்களை
ரகசியமாக ஆட்டியாட்டிக்கொண்டு
எல்லாவற்றையும் ரசிக்கிறோம்
என்று சிரித்தும்
எல்லாம் புரிகிறது என்று
இடையிடையே தலையாட்டியும்
பாடங்களின் சிறையிலடைக்கப்பட்ட
இளம் வண்ணத்துப் பூச்சிகள்.
அடி வேரறுத்து
சிமெண்ட் சட்டியில் வரையறுக்கப்பட்ட கால
பராமரிப்பில்
பறித்து நடப்பட்ட மரங்கள்
வலையில் வீழ்ந்த கிளிகள்
எந்த தெய்வத்தைக் கண்டாலும்
மத்தகம் குனிந்து கால் மடக்கி
தும்பிக்கை உயர்த்தி வணக்கம் சொல்கின்ற
காடு மறந்துபோன
குட்டிப் பேரானைகள்

பகல் கனவு

வகுப்பறையில்
வாயைத் திறக்காதே என்று எரிகின்ற
கண்கள் முன்னால் எப்படியோ
கொண்டுவந்து உட்கார வைத்து அம்மா போனதும்
மனதின் சமையலறையில்
பதுங்கி நடந்து,
வாசலில் அலைந்து...
அதோ,
திருட்டுப் பூனை,
அம்மா விறகு எடுக்க
போன சமயம் பார்த்து
மீன் திருட வருகிறது.
கன்றுக்குட்டி
வேலியில் பாய்கிறது
சீதாப்பழ மரத்தின்
இலையடர் பசுமையில்
பச்சிலைக் குருவி கூக்குரலிடுகிறது...
மலைப்பாம்பு ஊர்ந்து ஊர்ந்து

தமிழில்: யூமா வாசுகி