திங்கள், 22 நவம்பர், 2010

தமிழில் சிறு பத்திரிக்கைகளுக்கான காலம் முடிந்து போய்விட்டதா?- மு.சிவகுருநாதன்

("சஞ்சாரம்" இதழை வெளியிடும் முன்பு நாம் அனுப்பிய துண்டறிக்கை.இது சஞ்சாரம் முதல் இதழ் உள்அட்டையில் வெளியானது.)

தமிழில்சிறு பத்திரிக்கைகளுக்கான காலம் முடிந்து போய்விட்டதாக ஓய்வு பெற்ற எழுத்தாளர்கள் அறிவிக்கிறார்கள். சிறு பத்திரிக்கை என்று
தொடங்கப்பட்டவையயல்லாம் பெரும் பத்திரிக்கையை நோக்கிய பாய்ச்சலில் இடைநிலை இதழ்களாக உருமாறி வருகின்றன. சிறு பத்திரிக்கை இயக்கத்திலிருந்து பெரும் பத்திரிக்கைக்குத் தாவுவதும் பெரும் பத்திரிக்கைகள் சிறு பத்திரிக்கை வாசகர்களைக் குறி வைத்து இதழ் நடத்துவதும் இங்கு சாத்தியமாகி உள்ளது.

மய்யநீரோட்ட இலக்கிய, அரசியல், கலை வடிவங்களுக்கு மாற்றுக்களைக் வெளிக் கொணர்ந்த சிறு பத்திரிக்கை இயக்கம் இன்று தொய்வடைந்துள்ளது. சிறு
பத்திரிக்கைக்கான தேவையும், காலந்தோறும் புதிய பல நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும் வேளையில் காத்திரமான விமர்சனங்களையோ, படைப்புக்களையோ இடைநிலை இதழ்களில் காண முடிவதில்லை. வாரம், வாரமிருமுறை இதழ்களுக்குப் போட்டியாக இடைநிலை இதழ்கள் எவ்வித கொள்கைகளும் இன்றி பக்கங்களை நிரப்பி வியாபாரத்தைப் பெருக்குகின்றன. சிறு பத்திரிக்கை மற்றும் பெரும் பத்திரிக்கைக்கான இடைவெளி முற்றிலுமாக அழிந்து இரண்டு தளங்களிலும் இயங்குபவர்கள் வியாபார நோக்கங்களுக்காக இணைந்து உலா வருவதை தற்போது அவதானிக்க முடிகிறது.

சென்ற நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட
எழுச்சியும் தாக்கமும் தற்போதைய காலங்களில் முற்றிலும் சுணக்கம் கொண்ட
செயல்பாடுகளும் முடங்கிப் போன பலரது நிலையும் நம்மை கவலை கொள்ள வைக்கின்றன.

தேஹ்ரிஅணை, சர்தார் சரோவர் அணை போன்றவற்றை அடுத்து சேது சமுத்திரத் திட்டத்தை சுற்று சூழலியர்களிடமிருந்து இந்துத்துவவாதிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரத்தில் கூட அக்பர் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கேள்வி கேட்க முடிகிறது. ஆனால் ராமனுக்கான ஆதாரம் கேட்டால் தலைக்கு விலை அறிவிக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் இத்துத்துவாவிடம் இணக்கம் கொண்டிருக்கும் சூழலாக இது இருக்கிறது.

பாலியல் கல்வியை எதிர்க்கும்இந்துத்துவா கட்சிக்கு இது பற்றி விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதவாதத்தை எதிர்க்க இன்றுள்ள ஒரே நம்பிக்கை இடதுசாரிகள் மட்டுமே. 123 அணுசக்தி ஒப்பந்தத்தில் இடதுசாரிகள் காட்டிய வேகத்தை போலல்லாது ‘ராமர் பாலம்’ பிரச்சனையில் இடதுசாரிகளின் நிலைப்பாடு மிகவும் கவலைஅளிப்பதாகவே இருக்கிறது.

டீக்கடைகளில் தலித்துகளுக்கு இன்னும் தனிக்குவளைதான்.
ஆனால் தலித் இயக்கங்களும் தலைவர்களும் தனித்தமிழ் பெயர் சூட்டல்,
விடுதலைப்புலிகள் ஆதரவு என்று கலாச்சார வாதிகளாக மாறி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள தலித்துகள் பற்றி எவ்வித
அக்கறையும் இல்லை. உத்திரப் பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியின் வெற்றி பிராமணர்களின் வெற்றியாக கணிக்கப்பட்டு, தமிழகத்திலும் அது தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. தலித் -பிராமணர் கூட்டணி இயல்பானது என்று பிரச்சாரம்செய்யப்படுகிறது. அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரது செயல்பாடுகள் மலிவான முறையில் கொச்சைப்படுத்தப்படுகிறது.

தலித் அரசியலின் கூர்மை மழுங்கடிக்கப்பட்டு தலித்துகள் கையில் அதிகாரம் என்பது தலைவர்களின் அதிகார போதை -துய்ப்பு என்பதாக புதிய பரிணாமம் கண்டுள்ளது. தலித்துகளில் ஓரங்கட்டப்பட்ட அருந்ததியர்கள் தனியே போராட வேண்டிய சூழல் இருக்கிறது. சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறை பல்வேறு தளங்களில் நிகழ்ந்து கொண்டு வருகிறது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக இந்துத்துவ சக்திகள் பிற்பட்டோரை தூண்டிவிடும் போக்கு உள்ளது.

தமிழ்சினிமா எப்போதும் போல் குப்பைகளை உற்பத்தி செய்து கொண்டுள்ளது.
தமிழ்ப்பெயர் என்ற ஒரே காரணத்திற்காக இவற்றிக்கு மக்கள் வரிப்பணம் வாரி
இறைக்கப்படுகிறது. திராவிட இயக்க சென்சார் போர்டுகளின் உதவியுடன் பெரியார் படம் வெளியிடப்பட்டு அதில் முடிந்தவரை பெரியாரை
கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். அவரைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள்
அவரின் கொள்கைகளை கொஞ்சம் கூட நினைப்பது இல்லை.

அரசியலைப்போலவே இலக்கியத்திலும் வாரிசுகளின் அடாவடித்தனங்களை சகிக்க முடியவில்லை. ‘இலக்கியமேஸ்திரிகள்’ எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள் வாசகன் - படைப்பாளி உறவு மீண்டும் அதிகாரத்தை நோக்கியதாக கட்டமைக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் ஒரு சிறு பத்திரிக்கையின் பணி என்னவாக இருக்கமுடியும்?

01. அனைத்துத் தளங்களிலும் மாற்றுக்களைத் தேடுதல்.

02. சிறு பத்திரிக்கைச் சூழலில் இப்போது இருக்கின்ற இடைவெளியை நிரப்புதல்.

03. தமிழ்ச்சூழலில் மீண்டும் விவாதத்திற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துதல்.

04. எங்கோ ஓர் மூலையில் இயங்கும் ஒத்த கருத்து உடையவர்களை இணைத்துக்கொண்டு செயல்படுதல்.

05.நிலவுகின்ற சமூக அமைப்பை கேள்விக்குட்படுத்துவதோடு மறைக்கப்பட்ட /
ஒதுக்கப்பட்ட வரலாறுகள் மற்றும் எழுத்துக்களை வெளிக்கொண்டு வருதல்.

06. பெண்களின் எழுத்தை அதன் இயல்பான வீச்சோடு தணிக்கைகள் இன்றி வெளிப்படுத்துதல்.

07. புலம் பெயர் எழுத்துக்களில் உள்ள மேட்டிமைத்தனங்களை நீக்கி அடித்தட்டு மக்கள் எழுத்தைப் பதிவு செய்தல்.

08. அரவாணிகள் பற்றிய எழுத்துக்கள் மூலம் அவர்களது வலியை/வேதனைகளைப் பதிவு செய்வதோடு அவர்களது படைப்பாளுமையை இனம் காணல்.

09. கதை, கவிதை, சினிமா, ஓவியம், சிற்பம், இசை போன்றவற்றோடு களஆய்வு, வாய்மொழி வரலாறு போன்றவற்றையும் தொகுத்தல்.

10. யதார்த்த வகை எழுத்துக்களின் போதாமைகளை தவிர்க்க நான் லீனியர் எழுத்துக்களை பயன்படுத்தல்.

11. வெகுஜன மக்கள் திரளின் சினிமா, இசை, அரசியல் இன்னபிற சொல்லாடல்களின்பால் கவனம் குவித்தல்.

12. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்றவற்றால் கேலிக்குள்ளாகும் ஜனநாயகம்/சமூகம் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தல்.

சார்புஇல்லாத தனித்த செயல்பாடு என்று ஒன்று இருக்க முடியாது. நுண்ணரசியல் சார்பு மற்றும் முன்னுரிமை வேலைத்திட்டங்களின்படி எங்களது செயல்பாடு அமையும். நிறப்பிரிகை, கிழக்கு, அனிச்ச வழியில் சஞ்சாரமும் தலித்துகள், பெண்கள், அரவாணிகள், சிறுபான்மையினர், விளிம்பு நிலையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அனைவரின் ஊடாக அகமும் புறமும் பயணிக்கும். எங்களது கருத்துக்களோடும் செயல்பாட்டோடும் இசையும் தோழர்கள் அனைவரது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம். தங்களின்
கருத்துக்களையும் படைப்புகளையும் எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

அக(கா)லமாகும் வதந்திகள் -செல்மா பிரியதர்ஸன்

சாலையோரங்களில்
மரங்களை நட்டவன் கருணைமிக்கவன்
எனினும்
அந்திநேரங்களில் அடையவரும் பறவைகள்
வாகனப் பேரிரைச்சல்களைப்
பொருட்படுத்துவதில்லை
மரங்களை நட்டது
அசோகர்தான் என்று நம்புவது
சிறுவர்களின் வரலாற்றுப் பிரம்மைதான்
கோடை உலுப்பிய
புளியம் பழங்களைப் பொறுக்கிய
மூதாட்டிகளில் ஒருத்தி
சக்கரங்களில் நசுங்கிப் பிசாசாகத் தொங்குவதும்
சாலை வளைவுகளில்
தொடர்பலிகள் கேட்பதும்
பழங்கால வதந்திகள் என்று ஒதுக்குவதற்கில்லை
அரசாங்கம் என்பதும் சேவகம் செய்வது
அது சாலைகளை அகலமாக்கும்
அப்போது வெட்டிச் சரியும் மரங்கள்
பெருங் குரலெடுத்துச் சரியும் ஓசை
சாபமாக வானின் மீது படியும்
எனச் சொல்பவன் பயங்கரவாதி
வளர்ச்சிக்கு எதிரான அவன்
எங்காவது தொலைந்து போகலாம்
இப்போதும் வீழ்ந்த மரங்களிலிருந்து
கூடுகளைப் பத்திரப்படுத்திக் கொண்டு போகிறவர்கள்
சிறுவர்கள்தான்
ஒப்பந்தக்காரர்களின் கன்டெய்னர்கள்
சாலைகளை இறக்கிவைத்துவிட்டு
கிராமங்களின் நிழல்களை
தூக்கிச் செல்கின்றன
சாலையோர கல்லறைகளில் பிடுங்கி எறியப்பட்ட
கபால எலும்புகளைப் பதியனிட
மாற்றிடம் வேண்டி
பொக்லைன்களிடம் மன்றாடுவது வேடிக்கைதான்
அடையாத அந்திகளில்
சிறுவர்கள் சேகரித்த கூடுகளை
இரகசியமாய் திறந்து பார்த்துக் கொள்கையில்
திசை குழம்பிய பறவைகளின் உள்ளுறைந்த கூச்சல்
பெரும்பாலானோர் தங்களது இருப்பிடங்களை
கடந்தும் சென்றுகொண்டிருக்க
சிலர் சித்த பிரம்மையாகிவிட்டார்கள்
நீண்ட கன்டெய்ணர்களுக்காக
அகலமாக்கப்பட்ட சாலையின் முடிவில்
தெரியும் கட்டிடம் கூட
நமது பாராளுமன்றம் இல்லை என்று சொன்னால்
இனி அவர்களுக்குப் புரியப்போவதில்லை.

ச.ப்ரியா கவிதைகள்

வெயில்கால இரவு

யானையின் தும்பிக்கை
லாவகத்துடன்
கபளீகரம் நிகழ்த்தும்
பொக்ளியர் இயந்திரத்தின் இரைச்சல்
பீறிட்டழும் மரங்களின் மரணஓலம்
வேர் நரம்புகளை
பிடுங்கியெறிந்து
நிரத்திய மண்பரப்பு
ஆலை கட்டிடங்களுக்கு அடியில்
பறவைகளின் கிறீச்சிடல்கள்
தொலைந்து போனதொரு வெளியில்
பரவியிருக்கிறது
சைரனின் சங்கொலி அலறல்
சாயக் கழிவு
கலந்த குளத்துநீரில்
நமக்கான சூரியனின் பிம்பம்
மங்கிய ஓளிர்தலில்
இன்னமும்
என் அறையில்
பசுமையும் நீர்செழிப்புமான
பச்சை நிறக்காடுகளை
ஒளிபரப்பிக் கொண்டேதானிருக்கின்றன
டிஸ்கவ்ரியும்
நேஷ்னல் ஜியோக்ரபிக் சேனலும்.

வெயில்கால இரவு

தூரத்து மலையில்
நீண்டு நெளிந்து
பற்றியெறியும்
நெருப்பின் வேட்கை
வனம் விழுங்கிவிட்ட பிறகும்
நீள்கிறது
அஸ்தமன இருளின்
மலைமுகட்டில்
ஒரு இரவுச் சூரியனை
உயிர்ப்பித்துவிடும்படியாய்!

உமா மகேஸ்வரி கவிதைகள்

சித்திர அரூபம்

எல்லாமும் நகர்கின்றன
விரைந்து.
நிற்பதேயில்லை அவை
திரும்பியும் பார்ப்பதில்லை.
அவற்றை
மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்
மீண்டும்
எந்தச் சக்தியும்.
பறந்து மறைகின்றன
அவை.
இந்த அரூபச் சித்திரத்தின்
வளைவுகளோடு
இழைதல்
உன்னை மீறியதா?
சுழலும் இதே
திகிலின்பத்தில்
சுண்டப்பட்டு தொலைந்து
சிதறுவதும்?

நுழைதலற்ற கதவுகள்

கார்த்திகை மழைநாளின்
கரிய இரவுகள்
நடக்கின்றன
ரகசியக் காலடிகளோடு,
கண்காணிப்புகளைத் தவிர்த்து.
இன்று உதயத்தின் விழிமூட
கிழக்குக் காற்றின்
நச்சரிப்புக்களைப்
பொருட்படுத்தாமல்
நீல வானில்
ஒரு அடர்திரை
இழுக்கப்படுகிறது.
புல்வெளிகளின் முணுமுணுப்பு
மூடிய கதவுகளோடு வீடுகள்.
இந்தப் பாலைத் தெருவில்
தனித்த பயணியின் பாதத்தடங்கள்
கடக்கின்றன
என் திறந்த வீட்டின் கதவுகளுக்குள்
நுழையாமல் தாண்டி.

அழையாமை

செல்போன் ஒலியென
நடுங்குகிறது பாதி விழிப்பு.
கோதிக் கொண்டிருக்கிறது காற்று
கந்தலான இரவுகளை.
சுருண்ட ஓடுகளோடு
குறுகிக் கிடக்கும் காலம்
செத்த ஆமையாக.

தூர மயான நெருப்பு
கேலிக்குளிர் வீசுகிறது
என் நாட்களின் மீது
அடிக்கடி.
உலர்ந்த முத்தங்களில்
இருந்து வடியும் சீழ்.

உணர்ந்தேயிராத
தாய்மை இதழ் தேடி
கனகாம்பரத்தைத்
தொடுக்கையில்
உறுத்தும் பாதச் சிறகு.
விரிந்த விரல்களின் சல்லடையில்
யாருடையதோ கண்ணீர்.
பொருக்குக் காய்ந்த
உணர்வுகளுக்குள்
புனல் சிறகசைக்க
போதுவதேயில்லை
ஒற்றை அழைப்பு.

கைக்குட்டைக் கனவுகள் -பிரேம பிரபா

தத்தம் கனவுகளை
யாருமறியாமல்
எடுத்துப் போகிறவர்கள்
பாக்யவான்கள்.
துவைத்து உலர்த்திய
கைக்குட்டையெனினும்
இழையின் ஓரங்களில்
மடிப்பின் பிளவுகளில்
கனவுகள் ஒளிந்திருக்கும்
சாத்தியக் கூறுகளுண்டு.
முகத்தருகே
கைக்குட்டையைக்
கொண்டு போக
உங்களை முத்தமிட்ட கனவுகள்
கண்களை மூடியபடி
தவிப்புடன் இருக்கும்
மீண்டுமோர் முத்தத்திற்காக.
சுவாசம் திணறும்
வாசனைத் திரவியங்களால்
போதையேறி
தள்ளாடிவிழும் கனவுகளை
உங்கள் வீட்டிலோ
அலுவலகத்திலோயிருந்தால்
அப்புறப்படுத்திவிடுங்கள்
துளியேனும் தாமதிக்காமல்.
முடிவாக ஒன்று
இனிமேலாவது
உங்கள் கைக்குட்டைகளை
நீங்களே பராமரியுங்கள்.
குறைந்த பட்சம்
கனவுகளின் ரகசியங்களை
பாதுகாக்கும் பொருட்டாவது.

இருத்தல் நிமித்தங்கள்... :-பு.க.சாலினி

வெளிறிய வானில் வெண்மேகத் திட்டுகள்
களிபாளம் விட்ட மனதில் படரும் சஞ்சலப் படிவுகள்
மனித முகங்களின் மனப்போக்குவரத்தில்
மறைந்து சிதையும் தீற்றல் புள்ளிகள்
மின்னல் வேலியில் சருகுகள்
விள்ளல் முகம் நோக்கிய உறவுகள்
உன்மத்த உலகினையும் ஊழல் உப்பரிகைகளையும்
சிறை கொண்டன கேந்திரங்கள்.
அன்பின் வறுமை தெளிவின் வெறுமை
அன்றாடப் பூபாளம் நாட்காட்டியுடன்
மன்றாடும் நீலாம்பரி விழித்துளிகள்
மனிதச் சக்கைகளின் அகங்களில்
சரள சம்பிரதாயச் சரடுகள்
மரத் தக்கைகளுடன் சுவர்களில் புரளும் இதயச் சுவடுகள்
கண்களின் எதிர்பார்ப்பு விரிசல்கள்
கனவுக் கண்ணாடிஉடைசல்கள்.
கவலை எச்சக் கிழிசல்கள் கவியான ஆசைப் பிழியல்கள்
ஏகாந்தத்துடன் தனிமை உறவாடல்
எதிர்க்காற்றில் கருத்துக் களவாடல்
ஏசும் கண்களின் கடமை மீறல்
எக்களிக்கும் உயர்வின் உரிமை கோரல்
பட்ட மரத்தின் கிளை நுணுக்கங்களாய்
விட்டுத் தெறிக்கும் உணர்வுத் துணுக்குகள்
அத்தனைக்கும் மொத்தமாய்
தென்றலும் தேம்பியவாறு உறையும் மன இடுக்குகளில்
ஒளிப்பிழம்படிக்கும் நேரங்களில் நேசம் வார்க்கும்
அமுதமான அமைதி அமைக்கும்
ஆறுதல் அள்ளித் தெளிக்கும்
துன்பச் சுவடுகள் துடித்தழியும்.
இவையாவும்
இருட்டிய இருத்தலின்
ஒர் அமானுசிய அறையின்
சன்னல் கம்பிகளால் மட்டுமே.

ராணிதிலக் கவிதைகள்

தோல்வி

இன்று காலையில், என் கண்கள்,
அந்தச் சூரியனை வேட்டையாடின.
என் காதுகளின் மடிப்பில்,
அமர்ந்தபடி,
குயில்கள் பாடுவதும் தப்புவதே இல்லை.
அந்தப் பவழ மல்லியின் நறுமணம்
என் மூக்கை நோக்கியே மலர்ந்து கவிழ்கிறது.
என் விரல்கள் தீண்ட,
வெம்மையில், அக்கனி மேலும் பழுக்கிறது.
இக் கருத்த பாதை,
என் கால்களிலிருந்து விடுபட்டு ஓடுகிறது. அந்தியையும்
சாய்த்து, வீடு திரும்புகிறேன். அறையின்
இருள், நிழலெனத் தோன்றுகிறது
இன்றைய சாயுங்காலத்திலிருந்து,
வழக்கம் போலவே,
எப்போதும் போல்,
நிழல்களிடம் தோற்பவன் ஆகிறேன்.

இல்லை

என் முன்னால்
மழை பெய்கிறது
பெய்யும் மழைக்குப்
பின்புறம் இருக்கும் மலைக்கும் இது தெரியும்.
அது வலுத்துப் பெய்யும்போது
நீர்த்துளிகளையோ,
மலையையோ,
நாம் காண முடிவதில்லை.
அதன் கனக்கும் ஓசையில்,
நம்மின், மலையின் இறுக்கம் தளர்கிறது.
அப்போது
மலையுடன் நாமும் சேர்ந்து
கரைகிறோம் சட்டென, எதிர்
பார்க்காத மழை நிற்கிறது. நின்றபின்,
பார்க்கும்வேளை,
அங்கே மலை இல்லை.
மலையிலிருந்து காண,
அங்கே நான் இல்லவே இல்லை.

மைத்ரேயி கவிதைகள்

1. ஒரு நீண்ட பயணத்தின் போது அறிந்தேன்.
நினைவுகளில் என் வாழ்வு மூழ்கிக் கொண்டிருந்ததை
ஏழு ஜென்மத்தின் காலங்களை விழுங்கிக் கொண்ட
அந்தப் பயணம், அந்த மனிதர்கள், அந்தப் பார்வைகள்...
சொப்பனத்தில் வருவது போன்ற கரங்களுடைய
அவன் மற்றும் அவனது எழுத்து
அதில் ஒர் கணம் நான் பிறந்து வாழலாம்
அவன் எனக்காக ஏழு ஜென்மம் எடுப்பான்
நான் இன்புறுவேன் நான் அதில் வாழ்ந்து விடுவேன்
எனது இதயத்தை எனது உணர்ச்சியை
எனது அன்பை
குன்றின் மணிகளாகக் கோர்த்து
அவன் அணியக் கொடுத்தேன் வரலாற்றிற்காக
கடலெல்லாம் நிலமாக மாறும்
நிலம் எல்லாம் நீலம் பாய்க்கும்
நான் அதில் மூழ்கி விடுவேன்.
காய்ந்த சருகான காலம் அந்த வருகை
அவனது பொய்கள் அவன் செய்கை அந்தப் பார்வை
அந்த முகம் இருளை வரவழைக்கும்.
சூன்யம் நிiந்த அவனது வாழ்வு
சுற்றுச்சூழல் நண்பர்கள் அனைவரும்
தோன்றுவர் வீணடிக்க காலத்தை
நினைவு எனக்குள் தோன்ற
படைத்திருப்பேன் கவிதையாக அவனை.


2. இமைகளை மூடி விழித்திருக்கிறேன்
காலையில் புலரும் முன்
இருண்ட ஒளியைப் பரப்புகிறது வெளி என்னுள்
எனது நீண்ட மெல்லிய பயணம்
அழகிய சிற்பங்களை சுமந்த கற்களின் உயரம்
இறந்த மரங்களில் உறவாடிய உயிர்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது இவையனைத்தும்
அறுபது மணி நேர ஒலியைக் கேட்காததால்
எண்ண ஒட்டங்களை என்ன செய்வது
கண்களுக்குப் புரியவில்லை
கைகள் பதிவு செய்கின்றன
மரத்தின் இதழில் உயிர் பெறுகின்றன
எனது கவிதைகள்
இதயம் உருகியது நீராக அழுகையில்
நீரின் குமிழியில் அவனின் பிம்பம்
விரல் நுனியில் எடுத்துப் பருகினேன்
மணித்துளிகளாய் கரைந்து கொண்டிருக்கிறான்
ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன பயணங்கள்
எங்கள் தொடர்ச்சியில் இறக்கும் வருடங்கள்
ஒன்று இல்லாமல் போகும்.

வி.டி.ஜெயதேவன் கவிதைகள் -தமிழில்: யூமா வாசுகி

வகுப்பறை

இந்த நான்கு சுவர்களுக்குள்,
சன்னல் கதவுகள் அடைக்கப்பட்ட
சிறை அறைகளுக்குள் வரிசையாகப் போடப்பட்ட
பெஞ்சுகளுக்குக் கீழே
பிறர் அறியாமல்
சிறிய கால்களை
ரகசியமாக ஆட்டியாட்டிக்கொண்டு
எல்லாவற்றையும் ரசிக்கிறோம்
என்று சிரித்தும்
எல்லாம் புரிகிறது என்று
இடையிடையே தலையாட்டியும்
பாடங்களின் சிறையிலடைக்கப்பட்ட
இளம் வண்ணத்துப் பூச்சிகள்.
அடி வேரறுத்து
சிமெண்ட் சட்டியில் வரையறுக்கப்பட்ட கால
பராமரிப்பில்
பறித்து நடப்பட்ட மரங்கள்
வலையில் வீழ்ந்த கிளிகள்
எந்த தெய்வத்தைக் கண்டாலும்
மத்தகம் குனிந்து கால் மடக்கி
தும்பிக்கை உயர்த்தி வணக்கம் சொல்கின்ற
காடு மறந்துபோன
குட்டிப் பேரானைகள்

பகல் கனவு

வகுப்பறையில்
வாயைத் திறக்காதே என்று எரிகின்ற
கண்கள் முன்னால் எப்படியோ
கொண்டுவந்து உட்கார வைத்து அம்மா போனதும்
மனதின் சமையலறையில்
பதுங்கி நடந்து,
வாசலில் அலைந்து...
அதோ,
திருட்டுப் பூனை,
அம்மா விறகு எடுக்க
போன சமயம் பார்த்து
மீன் திருட வருகிறது.
கன்றுக்குட்டி
வேலியில் பாய்கிறது
சீதாப்பழ மரத்தின்
இலையடர் பசுமையில்
பச்சிலைக் குருவி கூக்குரலிடுகிறது...
மலைப்பாம்பு ஊர்ந்து ஊர்ந்து

தமிழில்: யூமா வாசுகி

பொதுப்புத்தி -கலாப்ரியா

பொதுப் புத்திக்காரனாய்
ஞாபகமறதியுடன்
போராடிக் கொண்டிருந்தேன்

பித்தளைப் பாத்திரத்தில்
பெயர் பொறிக்க வந்த
போது பழக்கம்

வீட்டின் பெயரை
கல் வில்லையில்
செதுக்கித் தந்து
காசு வாங்கிய கையோடு
வேற்றூர் சென்று விட்டவன்
பெயர் என்ன

அணை கட்டும் போது
இறந்த தொழிலாளிகளின்
அனைத்துப் பெயர்களையும்
பொறிக்க ஆரம்பித்த
தந்தையே காலமாக
முடித்துக் கொடுத்தவன் அவனாம்

பசு வலி கண்டரற்ற
வெளியேறும் பனிக்குடத்துள்
தெரியும் கன்றின் தலை போல்
கல்லுக்குள் அசாதாரணச் சிலை
காணும் சிறப்புப் புத்திக்காரன்தான்

துலங்கி வந்து கொண்டிருக்கும்
சிலைகளேனோ கடைசியில்
கொருவாய் விழுந்து போகுமென
நொம்பலப்பட்டுச் சொல்லிக்
கொண்டிருந்தான்

எந்தச் “சிற்பியின் நரகத்”தில்
எந்த மொழிக் காரர்களுக்காய்
என்ன வடித்துக் கொண்டிருக்கிறானோ
எழுதப் படிக்கத் தெரியாத அவன்.

ஸ்நேகிதன் கவிதைகள்

123 விளையாட்டு

நிபந்தனைகளற்ற இவ்வாட்டத்தில்
நாங்கள் 123 மட்டும் சொல்வோம்
நீங்கள் ஓட வேண்டும்
மரணத்தைத் துரத்த ஓடும் புல்லுண்ணியைப் போல
ஏறக்குறைய
உங்கள் சூழலும் அதுதான்
கொரில்லாவாய்ப் பதுங்கிப் பாய்ந்து
தொண்டைக் குழிகளைக் குதறவோ
சங்கிலிகளால் பிணைத்து
நகரவியலா உங்கள் சுயம் ரசிக்கவோ
உமிழ்ந்தே பழக்கப்பட்ட எங்கள் துப்பாக்கிகள்
உடல்களில் ரவைகளை நுழைக்கவோ
உங்கள் சனங்களின் குறிகளை
உங்களைக் கொண்டே அறுக்கப் பணித்தோ
எதுவும் நடக்கலாம்
நீங்கள் ஓடியாக வேண்டும்
நாங்கள் 123 மட்டும் சொல்வோம்

விதிமுறைகள் குறித்து
மாற்றுக் கருத்தேதுமிருந்தால்
வெள்ளை யோனிகளிலிருந்து
வழிந்த திரவம் தோய்ந்த
துணிகளைக் தருகிறோம்
வேண்டுமானால்
வாயில் கட்டிக் கொண்டு
போராடுங்கள்...
போராடுங்கள்...

கடல்கள்

மூதாதைகள் பயிற்றுவித்த ரகஸ்யம் சொல்லி
பசியாறிப் போகும் கடற்பறவைகளும்
முதுகில் மேயும் கலங்களின் புள்ளிகளும் நிறைந்த
காட்சிகள் நிறம் மாறும் கடல்கள்
ஆதியில் நிச்சலனத்தில் புதைந்திருந்தது
மௌனத்தின் கொடூர சுயம் சகிக்கவியலாது
வேட்கை கொண்ட தேடலின் உந்துதலில்
துடுப்புகள் வலிக்க வலிக்க
கயிறுகள் அவிழ்ந்து
ஓங்காரத்துடன் துவங்கியது
கரைகள் மீதான தேடல்கள்
சலித்து விடாத மீறல்கள்
பிறகொரு நாளில்
ஆழிருட்டுக்குள் புதைந்து போய் விட்ட
பேரமைதியின் மையம் தொட
ஒன்று கூடி தீர்மானித்த கோப்பைகள்
இன்றிரவுக்குள் கடல் குடிக்க வந்தன

பின் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
கடலுக்குள் கோப்பைககளும்
கோப்பைகளுக்குள் கடலும்

காலத்தின் சிலுவை

காலம் தன் தெருக்களில் என்னை
சாட்டையாலடித்தபடி இழுத்து வருகிறது
கந்தலாடையுடன்
படர்ந்த மணற்பரப்பில் குருதியிறைத்தபடி
கடந்த காலங்களின்
சிலுவையின் கணம் அழுத்த அழுத்தச் சரிகையில்
மண்குடுவையிலிருந்த தண்ணீரை
நாவுகளுக்கு வார்க்கிறாய்
காவற்காரனின் சவுக்கடிகளை ஏற்றுக் கொண்டவளாய்
நான் சிலுவையில் சார்த்தப்படுகிறேன்
பெருவிரல் நுனியிலிருந்து
மெள்ளத் தளர்ந்து
கண்களில் நிற்கிறது என் ஆத்மரசம்

நீ தண்ணீர் வார்க்கிறாய்

விடைபெறுதலுக்கான கையசைப்புகள்
அடக்கித் தோற்று பீறிடும் கண்ணீர்

மெல்லப் புதைகிறது இமைகள்
யுகாதி யுகங்களுக்கான பேரன்பை நிறைத்துக் கொண்டு

விழிப்பின் இரகசியம் -விழி.பா.இதயவேந்தன்

உறங்காமல் எப்போதும்
விழித்திருக்க நினைக்கிறேன் நான்.
நான் என்பது
பெயர் தாங்கியப் பலகை என்பதல்ல.
என் உயிர்கள் அடங்கிய
உடல், வீடு, உறவு...
என எல்லாம் தான்
என்னாலும்
என்னைச் சுற்றியும் வலைப்பின்னல்களாய்
வலம் வருகிறது பார்வையின் துகள்கள்.
விழிப்பின் இரகசியம்
அறிந்திருக்கவேண்டும் எவரும்
அறிஞர்கள், ஆன்மீகவாதிகளின்
விழிப்பு என்பது
அர்த்தங்கள் எல்லாம் வெவ்வேறானவை
கடும் சூழலில்
முட்டிமோதும் பிரச்சினைகளில்
இறுகிப்போய் கருகாமல்
வெளிச்சம் தேடி உடலென்பது
உறக்கம் கொள்ள மறுக்கிறது.
உறங்காமல் கிடப்பதைவிட
உறக்கத்திலும் தேவை விழிப்பு.

என்னை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள் -கர்ட் வொன்னெகட்: தமிழில்:சா.தேவதாஸ்

1973இல் அமெரிக்காவின் வடக்கு டகோடாவிலுள்ள ஒரு பள்ளியில், கர்ட் வொன்னெகட்டின் நாவல் “Slaughterhouse five” தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அப்பள்ளியின் நிர்வாகக்குழுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதினங்களில் வரும் பாத்திரங்கள் நடந்து கொள்வதையும், பேசும் விதத்தையும் விளக்குகின்றார் கர்ட் வொன்னெகட் (Kurt Vonnegut). அதிகாரத்தின் ஒடுக்குமுறையினையும், எழுத்தாளரின் சுதந்திரத்தையும் எடுத்துக்காட்டுவதற்கு இக்கடிதம் நல்லதொரு உதாரணமாகும்.

வொன்னெகட் மட்டுமல்லாமல், பெர்னார்ட் மலமூட், ஜேம்ஸ்டிக்கி, ஜோஸப் ஹெல்லர் போன்றோரின் நூல்களும் தொடர்ந்து பள்ளி நூலகங்களிலிருந்து தூக்கி எறியப்படுவதின் பின்புலத்தில், இக்கடிதத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

They Shoot writers, Don’t They? Ed.by George Theiner Faber and Faber,
நூலிலிருந்து தமிழ் வடிவம்: சா.தேவதாஸ்


வடக்கு டகோடாவின் ட்ரேக்கிலுள்ள ஒரு பள்ளியில் அதன் வாயிற்காவலரால் என் நாவல் “Slaughterhouse five” நிஜமாகவே தீயிட்டுக் கொடுத்தப்பட்டது. அப்பள்ளி நிர்வாகக் குழுவின் அறிவுரைப்படி இது நிகழ்ந்தது. இந்நூலின் ஆரோக்கியமற்ற தன்மை குறித்து அக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. விக்டோரியா மகாராணியின் தரநிர்ணயப்படி கூட, ஒட்டுமொத்த நாவலில் இடம்பெறும் ஆட்சேபணைக்குரிய ஒரே வரி இதுதான் “Get out of the road, you domb mother fucker”. அமெரிக்காவின் மாபெரும் தோல்வியாக அமைந்த, 1944ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த Battle of the bulge-ன் போது, அமெரிக்கப் புரோகிதரின் நிராயுதபாணியிலான உதவியாளரை நோக்கி, அமெரிக்கப் படைவீரன் ஒருவனால் பேசப்படும் வாசகம் இது. இந்த உதவியாளன் எதிரியால் சுடப்பட இருக்கிறான்.

எனவே, 16.11.1973இல் வடக்கு டகோட்டாவின் ட்ரேக்கின் சார்ல°ஸ்மக்கார்த்திக்குப் பின்வருமாறு எழுதினேன்.

‘அன்பான ,

“ட்ரேக் பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் ஆக இருக்கும் உங்களுக்கு இக்கடிதத்தினை எழுதுகின்றேன். இப்போது புகழ்பெற்றுள்ள உங்கள் பள்ளிக் கொதிகலனில் அழித்தொழிக்கப்பட்டுள்ள புத்தகங்களின் ஆசிரியர்களுள் ஒருவன் நான்.

“உங்கள் நிர்வாகக்குழுவின் உறுப்பினர்களுள் சிலர், என் புத்தகம் தீங்கானது என்று குறிப்பிட்டுள்ளனர். இது என்னை அசாதாரணவகையில் அவமானப்படுத்துகிறது. உங்களைப் போன்றவர்களுக்கு புத்தகங்களும், எழுத்தாளர்களும் மிகவும் நிஜமற்றவர்களாக இருப்பதாக ட்ரேக்கின் செய்தி சுட்டிக்காட்டுகிறது. எந்த அளவுக்கு நான் நிஜமானவன் என்பதை நீங்கள் அறியும் பொருட்டு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

“ட்ரேக்கிலிருந்து வரும் அருவருப்பூட்டும் செய்தியை ஈர்க்கும் விதத்தில் நானும் என் வெளியீட்டாளரும் எதனையும் செய்திருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். இந்தச் செய்தியால் எங்கள் புத்தகங்களை எல்லாம் விற்றுவிடமுடியும் என்று மார்தட்டிய படி நாங்கள் ஒருவரையொருவர் தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. தொலைக்காட்சியில் தோன்றுவதற்கு மறுதலித்திருக்கிறோம். தலையங்கப் பக்கங்களில் ஆவேசமான கடிதங்கள் எழுதியிருக்கவில்லை. நீண்ட பேட்டிகள் தந்திருக்கவில்லை. நாங்கள் கோபங் கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டிருக்கிறோம் மற்றும் வருத்தப்படுகிறோம். இக்கடித நகல்கள் வேறுயாருக்கும் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

இப்போது உங்கள் கைகளில் இருப்பது ஒரே பிரதிதான். தம் பிள்ளைகளின் பார்வையிலும், உலகத்தவரின் பார்வையிலும், என் புகழினைப் பாழாக்கும் வகையில் நிறையவே செய்துள்ள, ட்ரேக்கின் மக்களுக்கான மிகவும் அந்தரங்கமான கடிதமாகும் இது. இக்கடிதத்தினை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாகும் தைரியமும் கண்ணியமும் உங்களுக்குண்டா அல்லது இதுவும் உங்கள் கொதிகலனின் பிழம்புகளால் தீக்கிரையாக்கப்படுமா?

“இளைஞர்களின் மனங்களுக்கு நஞ்சூட்டி, பணம் பண்ணி அனுபவிக்கின்ற எலிபோன்ற நபர்கள் நாங்கள் என்று எங்களைக் கற்பிதம் செய்து கொள்வதை, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிச் செய்திகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம். சிறுவனாக இருந்தபோதே, கனமான கருவிகளைக் கையாண்டு பண்ணை வேலைகள் செய்த, திடசாலியான 51 வயது நபர் நான். என்னுடைய மூன்று பிள்ளைகளையும், மூன்று வளர்ப்புப் பிள்ளைகளையும் சேர்த்து வளர்த்துள்ளேன். அவர்கள் அனைவரும் நன்றாக உருவாகியுள்ளனர். அவர்களில் இருவர் விவசாயிகள். நான் இரண்டாம் உலகப்போரின்போது, தரைப் படையில் போரிட்டு, விருது பெற்றுள்ளவன். நான் பெற்றிருப்பவை கடும் உழைப்பால் ஈட்டியிருப்பவை. எதன்பொருட்டும் கைது செய்யப்பட்டிருக்கவோ, வழக்குத் தொடரப்பட்டிருக்கவோ கிடையாது.

“இளைஞர்கள் என்னைப் பெரிதும் நம்புகிறார்கள்; அயோவா, ஹார்வர்ட் பல்கலைகழகங்கள் மற்றும் நியூயார்க்கின் சிட்டி காலேஜ் ஆகியவற்றில் பணியாற்றிள்ளேன். ஒவ்வொரு வருடமும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் தொடக்க விழாவில் பங்கேற்க, குறைந்த பட்சம் ஒரு டஜன் அழைப்பிதழ்கள் வருகின்றன. வேறெந்த அமெரிக்கப் புதின எழுத்தாளருடையதை விடவும், எனது புத்தகங்கள் அதிகப்படியாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

“என் புத்தகங்களை வாசிக்க நீங்கள் சிரமம் எடுத்துக் கொண்டால், கல்வி கற்றவர்கள் நடந்து கொள்வது போல் நடக்க முயன்றால், அவை ஆபாசமானவை அல்ல என்பதை அறிந்து கொள்வீர்கள்; எவ்விதமான காட்டுத்தனமும் இருக்கிறதென்று வாதித்திட மாட்டீர்கள். மக்கள் மிக அன்பாகவும், அதிகப் பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்றே அவை மன்றாடுகின்றன. சில பாத்திரங்கள் முரட்டுத்தனமாய் பேசுவது உண்மையே. ஏனெனில் நிஜ வாழ்வில் மக்கள் முரட்டுத்தனமாய் பேசுகின்றனர். குறிப்பாக சிப்பாய்களும் கடினவேலை பார்ப்போரும் முரட்டுத்தனமாய் பேசுகின்றனர். மிகவும் பாதுகாப்பாயுள்ள நம் குழந்தைகளுக்குக் கூட இது தெரியும். இவ்வார்த்தைகள் சிறுவர்களை அதிகம் பாதிப்பதில்லை என்பது நமக்கும் தெரியும். நாம் சிறுவர்களாய் இருந்தபோது அவை நம்மைப் பாதிக்கவில்லை. நம்மைப் பாதிப்பவை கெட்ட காரியங்களும் பொய் சொல்வதும்தான்.

“இவ்வளவு எடுத்துரைத்த பின்பும், நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் முனைப்பாக இருப்பீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்: “சரிதான், ஆனால் சிறுவர்கள் என்ன புத்தகங்களை படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது எங்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும்.” ஆனால், கடுமையும், அறியாமையும் அமெரிக்கத் தன்மை அற்றதுமான வழியில் அந்த உரிமையைப் பிரயோகித்து, அந்தப் பொறுப்பினை நிறைவேற்றினால், மக்கள் உங்களை மோசமான பிரஜைகளும் முட்டாள்களும் என்றழைப்பர். உங்கள் குழந்தைகள் கூட அவ்விதம் அழைத்திடும் உரிமை பெற்றிருப்பர்.

“நீங்கள் செய்திருப்பது குறித்து நாடெங்கிலும் எழுந்துள்ள கூச்சல் - குழப்பத்தால், உங்கள் மாணவர் சமூகம் குழப்பமுற்றுள்ளதாகப் பத்திரிக்கைகளில் வாசிக்கிறேன். நல்லது, ட்ரேக் என்பது அமெரிக்க நாகரீகத்தின் ஓரங்கம் என்பதையும், இவ்வளவு அநாகரிகமாக நீங்கள் நடந்து கொண்டுள்ளதை சக அமெரிக்கர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை என்பதையும் நீங்கள் கண்டறிந்துள்ளீர்கள். புத்தகங்கள் என்பவை நல்ல காரணங்களினால் சுதந்திரமானவர்களுக்கு எரியூட்டும் தேசங்களுக்கெதிராக யுத்தங்கள் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன என்பதை இதனின்றும் நீங்கள் அறியக்கூடும். நீங்கள் ஓர் அமெரிக்கர் எனில், உங்களுடைய கருத்துக்கள் மட்டுமல்லாது, அனைத்துக் கருத்துக்களும் சுதந்திரமாகப் பரவிட அனுமதித்தாக வேண்டும்.

“இளைஞர் தம் கல்வி குறித்து உங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கும்போது, நிஜமாகவே உங்களிடத்தே ஞானமும் முதிர்ச்சியும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டிட, நீங்களும் உங்கள் நிர்வாக்குழுவும் தீர்மானகரமாக இருப்பின், புத்தகங்களை நிந்திப்பது மற்றும் எரியூட்டுவது என்றும் மோசமான பாடத்தைச் சுதந்திரமான சமூகத்திலுள்ள இளைஞர்களுக்கு கற்பித்தீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

உங்கள் குழந்தைகள் சிறந்த முடிவுகளை எடுத்து உயிர்த்திருக்க வேண்டுமானால், எல்லாவிதமான அபிப்பிராயங்களும் தகவல்களும் அவர்களுக்குப் பரிச்சயமாயிருக்க வேண்டும் என்றும் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். “திரும்பவும் கூறுகிறேன். என்னை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள், நானொரு நல்ல பிரஜை மற்றும் மிகவும் நிஜமானவன்.”

இது ஏழாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. இது வரையிலும் எந்தப்பதிலும் இல்லை. நியூயார்க் நகரத்திலிருந்து இதனை நான் எழுதும் வேளையில் “Slaughterhouse fivef” பல பள்ளி நூலகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சட்ட ரீதியிலான யுத்தம் இன்னும் குமுறிக்கொண்டிருக்கிறது. முதலாவது சட்டத் திருத்தத்தை மூர்க்கமாக எதிர்க்கின்ற வழக்குரைஞர் களை இப்பள்ளி நிர்வாகம் அமர்த்தியுள்ளது. முதலாவது சட்டத்திருத்தத்தை எதிர்க்கின்ற வழக்கு ரைஞர்களுக்குப் பஞ்சமே கிடையாது - அது என்னவோ, குறுக்குப் புத்தியுள்ளவனின் குத்தகை ஒப்பந்தத்தில் இடம்பெறும் வாசகத்திற்கு மேல் ஒன்றுமில்லை என்பது போல.

 மஞ்சள் காமாலை தடுப்பூசி திணிப்பு அரசு/மருத்துவர்களின் காமாலை பார்வையின் விளைவே -மருத்துவர் வீ.புகழேந்தி

குறிப்பிட்ட ஒரு வியாதியால் ஒரு நாட்டில்/ இடத்தில் அதன் பாதிப்பு/இறப்பு விகிதம் அதிகம் இருக்குமானால், தடுப்பூசியின் காரணமாக, அது உறுதியாக தடுக்கப்படும் என்ற விஷயம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தால், அவ்வியாதியை தடுக்க செலவு குறைந்த மாற்று வழிகள் இல்லை என இருக்கும் சமயத்தில் மட்டுமே தடுப்பூசியை பயன் படுத்தி வியாதி வராமல் காப்பது நன்மை பயக்கும்.

நம் நாட்டில் மஞ்சள்காமாலை தடுப்பூசியை அமுலுக்கு கொண்டுவர, அரசு/மருத்துவர்கள்/மருந்துக் குழுமங்கள் சொல்கின்ற காரணம்.

1. இது ஒரு ஆட்கொல்லி வியாதி.
2. இதன் பாதிப்பு மக்களிடையே மிகவும் அதிகம். 10 சதவீதம் மக்கள் மஞ்சள் காமாலை நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
3. இந்நோய் பாதிப்பின் காரணமாக ஈரல் முழுவதும் பாதிக்கப்பட்டு இறப்பு நிகழ்வது.
4. இந்நோய் காரணமாக ஈரல் புற்றுநோய் பாதிப்பால் பலரும் இறப்பது.
5. இந்த தடுப்பூசி நம்பகமானது, பாதுகாப்பானது... போன்றவை.

இனி இவை உண்மைதானா? மக்கள் நலன்தானா? இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்துவதற்கு காரணம்? போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கலாம்.

People for Economical and Effective Medicare (PEEM) என்னும் இயக்கத்தைச் சேர்ந்த ஹைதராபாத் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு. பா°கர் ராவ் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

ஆட்கொல்லி, கொள்ளை நோயாக இருக்கும் பட்சத்தில் மட்டும் (அல்லது) கொள்ளை நோயாக உருவாகக் கூடிய அபாயமுள்ள வியாதிகளுக்கு எதிராக மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும். இந்தியாவைப் பொறுத்த மட்டில் இது கொள்ளை நோயாகவோ (அ) உருவாகவோ வாய்ப்பு இல்லை என்பதை இருக்கின்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது ஆட்கொல்லி வியாதி என்பதும் உண்மைக்கு புறம்பானது. இவ்வியாதியால் பாதிக்கப் பட்ட பெரும்பாலோர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர். இவ்வியாதி பற்றிய உலகின் மிகச்சிறந்த வல்லுநர் திருமதி Dr. ஷீலா செர்லாக் கூறுவது.

“மஞ்சள் காமாலை ஏற்படுத்தும் இக்கிருமிகள் (Hepatitis ‘B’ Virus) 100 பேர் உடம்பில் உட்புகும் போது 95 பேருக்கு அதன் உடனடி தாக்கம் (Acute Infection) தெரியும். அதில் 94 பேர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர். இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட 1% கீழானவர்களுக்கே இறப்பு நிகழும் போது இதை எப்படி ஆட்கொல்லி வியாதி என அழைக்கமுடியும்.”

இந்தியாவைப் பொறுத்தவரை இவ்வியாதியின் உடனடித்தாக்கத்திற்கு ஆளானவர்கள் குறித்தான புள்ளி விபரங்கள்/ஆய்வுகள் இல்லை. இக்கிருமித் தாக்கத்தின் காரணமாக பாதிப்பு ஏதும் சிறிதளவு இல்லாமலும், ஆனால் அதே சமயம் இக்கிருமியை பிறருக்கு பரப்பக்கூடிய தன்மை கொண்டவர்கள் (Carriers) பற்றிய ஆய்வு/புள்ளி விபரங்கள் மிகவும் சிறிதளவில் உள்ளன. இவ்வாய்வுகளில் நோய் சுமப்பவர்கள் (careers) 1.62 – 4% எனத் தெரிய வந்துள்ளது. அதிலும் 1% இவ்வியாதியின் தீவிர பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆக விஷயம் இப்படி இருக்க ஆந்திர மாநிலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும். (4.5 லட்சம் குழந்தைகள்) - Bill Gates Foundation உதவியுடன் கிடைத்த இத்தடுப்பூசிகள் போடுவது தேவைதானா? கொழுத்த வியாபாரியான பில் கேட்ஸ்கு ஆந்திரக் குழந்தைகள் நலன் மீதுதான் அக்கறையா? அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்படுவது, அவ்வூசிகளின் காரணமாக எழும் பின்விளைவுகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழந்தைகள் மீது இல்லாத கரிசனம், பில்கேட்ஸ்கு ஆந்திரக்குழந்தைகள் மீது மட்டும் எழக் காரணமென்ன? இத்தடுப்பூசியின் காரணமாக எழும் பின்விளைவுகளுக்கு ஆந்திர அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவிலேயே நல்ல, தரமான மஞ்சள்காமாலை தடுப்பூசி குறைந்த விலையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வாங்குவதற்கு பதிலாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் விலை உயர்ந்த மருந்துக் குழுமத்தில் இருந்து வாங்கி ஆந்திர குழந்தைகளுக்கு கொடுப்பது, வெளிநாட்டு மருந்து குழுமத்தின் வணிக நலனை கருத்தில் கொண்டு ஆந்திரக் குழந்தை களை சோதனை விலங்குகளாக மாற்றுவதாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

(வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் தடுப்பூசித் திட்டங்களே இந்திய குழந்தைகளை பரிசோதனை விலங்குகளாக மாற்றும் நோக்கத்துடனேயே உள்ளதை UNICEF அஸ்ஸாமில் செய்த ஆய்வில் 15 குழந்தைகள் (போலியோவில்) இறந்ததையும், கேரளாவில் திருவனந்தபுரத்தில் புற்றுநோய் ஆய்வில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், சமீபமாக ஹைதராபாத்தில் மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெரியவர்களுக்கு கொடுத்து சோதனை செய்ததில் 7 பேர் இறந்ததையும், இதே போல் பெங்களூருவில் மரபணு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தினை (இரண்டிலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்/அமைச்சகம் இருந்து அனுமதி பெறாமலே) பரிசோதித்தது குறித்து வழக்கு (PIL) தொடரப்பட்டிருப்பதையும், Glaxo மருந்து நிறுவனம் கிறித்துவ மடங்களின் உதவியோடு அனாதை குழந்தைகளிடத்து AIDS மருந்தின் பின் விளைவுகளை அனுமதி பெறாமலே சோதித்தும் - மக்கள் மீது இவர்கள் கொண்டுள்ள அக்கறையை தோலுரித்து காட்டியுள்ளது.) மேலும், மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பு 10% மக்களுக்குள்ளது எனும் தவறான புள்ளிவிபரத்தை அரசு/மருத்துவர்கள்/மருந்துக்குழுமங்கள் சொல்ல காரண மென்ன? மக்கள் நலனா? வணிக நலனா?.

Arre Z Zuckerman எனும் புகழ்பெற்ற மருத்துவர் எழுதிய புத்தகத்தில் (பக்கம் 545) மஞ்சள் காமாலையின் (Hepatitis ‘B’ Virus) காரணமாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் (90%) தானாகவே இயல்பு நிலைக்கு திரும்புவர் என்பதும் 1% கீழ் தான் பாதிப்பு மோசமாக இருப்பதும் உள்ளது. இதன் காரணமாக American Public Health Service (USPHS) American Academy of Paediatrics (ARP) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் 1997ல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்க வேண்டும் எனும் ஆணையை திரும்ப பெற்றுள்ளது. அதே வருடம் Communicable Disease Control (தொற்று நோய் தடுப்பு அமைச்சகம்) and Epidemiology of US Federal Government நிறுவனமும் மஞ்சள் காமாலை பாதிக்கப்படாத தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் திரும்ப பெற்றுக்கொண்டது.

US Federal Government மஞ்சள் காமாலையால் கருவுற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது மட்டும் (Hbs Ag Positive) பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் பரவலாம் என்பதற்காக, அக்குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி கொடுக்கலாம். மீதிக்குழந்தைகளுக்கு இது தேவையில்லை. ஏனெனில் இந்நோய் பெரும்பாலும் பெரியவர்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோயாக உள்ளதால் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியால் பலன் அதிகம் இல்லை.

இனி மஞ்சள் காமாலை (Hepatitis ‘B’) குறித்து உலக வல்லுநர்களின் கூற்றை பார்ப்போம்.

1. சிறு குழந்தைகளுக்கு (1 வயதிற்கு கீழ்) மஞ்சள் காமாலை தொற்றும் வாய்ப்பும் 1-3% (Us Department of Public Health1996)

2. கருவுற்ற பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலொழிய பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதனால் US Federal Authorities அனைத்து குழந்தைகளுக்கும் இது கொடுக்க வேண்டிய தேவையில்லை (1999ம் ஆண்டு அறிக்கை)

3. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட பெரும்பாலும் முடியாத பிறந்த குழந்தைகள்/சிறு குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி தேவையில்லாமலே கொடுக்கப்படுகின்றது. (Pat Griggin Mackie)

4. இந்த தடுப்பூசியால் எவ்வளவு காலம் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், பாதுகாப்பை பெருக்க கூடுதல் ஊசி தேவையா என்பதும் தெளிவாக இல்லை. (National Vaccine Information Center- USA. Harrison’s Principles of Internal Medicine).

5. மஞ்சள் காமாலை நோய் கண்டு, அதிலிருந்து விடுபட்டவர்கள் வாழ்க்கை முழுக்க அந்தநோய் திரும்ப தாக்காத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாக்கப்படுகின்றது. (Robbin’s Pathologic Basis of Disease 1994)

6. சிசு கருப்பையில் இருக்கும் காலத்திலே பாதிப்பு ஏற்பட்டு பிறக்கும் போது HBs Ag Positive இருந்தால் இத்தடுப்பூசியால் எந்த ஒரு பயனும் இல்லை. Zucker Man 1993.

7. ஏற்கனவே ஒருவர் Carrier ஆக இருந்தால் அவருக்கும் இந்த தடுப்பூசியால் ஒரு பயனும் கிடையாது. (National Drug Bulletin 2001).

8. 1987ல் மரபணு மாற்ற தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இத்தடுப்பூசியின் திறன் குறித்து தெளிவான விளக்கம் இல்லை. மேலும் குழந்தை பருவத்தில் கொடுக்கப்படும் இவ்வூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு கொடுக்கும், அவர்கள் பெரியவர் களாக வளர்ந்த பருவத்திலும் பாதுகாப்பை கொடுக்குமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது. குழந்தைகள் மீது பரிசோதிக்கவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. (Morbidity and Mortality Report Jan.1997)

9. 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இத்தடுப்பூசி கொடுத்தால், அவர்களுக்கு நோய் தடுப்பைக் காட்டிலும் இவ்வூசியின் பின் விளைவுகள் காரணமாக இறப்போ/பிற பின் விளைவுகளோ ஏற்படுவது 3 மடங்கு அதிகமாக உள்ளது. (Association of American Physicians and Surgeons, Dr.Jane Orient 08.07.1999)

10. அமெரிக்காவில் கட்டாயப்படுத்தப்படாத ஒரு தடுப்பூசியை, அங்கு விற்க முடியாத/கடினமான, தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை வளரும் நாடுகளின் கையில் திணித்து, பரிசோதனை விலங்குகளாய் மாற்றுவது மட்டு மின்றி/இலாபமும் அரசு/மருத்துவர்கள்/ மருந்துக் குழுமங்களின் துணையோடு சம்பாதிக்க நினைப் பதை என்னவென்று சொல்லுவது. பில்கேட்ஸின் கரிசனம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்தியா போன்ற ஏழை (ஆக்கப்பட்ட) நாடுகளில் தடுப்பூசியின் பின் விளைவுகளை ஆராய தொடர் ஆய்வு (Followup) செய்யப்படாமல் போவதால் இத்தடுப்பூசியினால் ஏற்படும் பிரச்சினைகளும் பின் விளைவுகளும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. எனினும் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களையாவது நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

நியூசிலாந்தில் மஞ்சள்காமாலை தடுப்பூசி திட்டத்திற்கு பின் அங்கே சர்க்கரை நோயால் (Diabetes) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. Newzealand Medical Journal 24.05.1995.

Dr. Philip Incao, Ohio House of Representative Columbus Ohio முன் கொடுத்த வாக்குமூலத்தில் 1987ம் ஆண்டு முதலே பல மருத்துவ உலக ஆய்வுகளில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக நாட்பட்ட (Chronic) தன் நோய் எதிர்க்கும் திறனை தானே அழிக்கும் வியாதிகள் (Auto Immune Disorders) நரம்பு மண்டலங்களை பாதிக்கும் (Neurological) வியாதிகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படும் எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.

மஞ்சள் காமாலை தடுப்பூசியின் மோசமான பின் விளைவுகளை அறிய மே 1999ல் US Senate Congressional Hearing by its Subcommittee ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 81 புகழ்பெற்ற இது குறித்தான மருத்துவ கட்டுரையிலிருந்து Dr. Buston A Wais Bren என்பவர் பட்டியலிட்டு பின்வருவனவற்றை கூறுகிறார். அவை.

1. Convulsion (வலிப்பு நோய்)
2. Bell’s Palsy (முக ஜன்னி)
3. Lumbar Neuro Pathy (இடுப்பு, நரம்பு வலி)
4. Optic Beuritis (கண்பார்வை பாதிப்பு)
5. Transverse Myelitis (தண்டுவட பாதிப்பின் காரணமாக கை, கால் வாதத்தால் பாதிக்கப்படுவது.)
6. Polyneuropathy (பல நரம்புகள் பாதிக்கப்படும்).
7. Myasthenia Gravis (தசைகளை தளர்த்தி பாதிக்கும் நோய்) அமிதாப்பச்சன் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். விஷயம் இப்படி இருக்க தடுப்பூசி விளம்பரம்/பணம் போன்றவற்றிற்கு அவர் ஆசைப்படுவதை என்னவென்று அழைப்பது?
8. Demyelination (நரம்பு உறைகள் பாதிக்கப்படுதல்)
9. Multiple Sclerosis (மூளை,பிற நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஒரு வகை நோய்)
10. Guillion Barre Syndrome (நரம்புகளை பாதிக்கும் நோய்)
11. Encephalitis (மூளைக் காய்ச்சல்)
12. Uvetis (கண்களை பாதிக்கும் நோய்)
13. Rheumatoid Arthritis (மூட்டுகளை பாதிக்கும் நோய்)

இவை அனைத்தும் உலக மருத்துவ ஏடுகளில் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயங்கள். பல இறப்புகளும் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் Nicholas, Lyla Rose, Mathew... போன்ற பல ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர்.

இணைய தளத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் பாதிப்பு 1000 பக்கங்களை எளிதில் தாண்டும்.

இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாதிப்புகள் என்றால், ஏற்றுக்கொள்ளப்படாத பாதிப்புகள்?

ஆக தீவிர மஞ்சள்காமாலை தடுப்பூசித்திட்டத்தை கைவிட்டு தேவைப்படுபவர்களுக்கு மட்டும் அதனைக் கொடுப்பது சிறந்தது. அயோடின் சத்துக் குறைவு உள்ள இடங்களில் மட்டும் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துவது நல்லது. எல்லோரும் அயோடின் கலந்த உப்பைத் தான் உட்கொள்ள வேண்டும் என்பது சரியில்லாதது).

Hepatitis B Virus காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலை பாதிப்பு பெரும்பாலும் பெரியவர்களுக்கு (Adults) என்றிருக்க, ஒட்டு மொத்தமாக குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி கொடுப்பது நல்லதன்று.

மாற்று:

அரசானது கருவுற்ற அனைத்துப் பெண்களையும் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என அறிய Hbs Ag பரிசோதனை செய்வது மட்டும் நல்லது. பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களின் (Hbs Ag Positive) குழந்தைகளுக்கு மட்டும் இத்தடுப்பூசி போடுவது நல்லது. இது பாதுகாப்பானது, விலையும் குறைவு, தேவையற்று அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது. மேலும் இத்தடுப்பூசிகளை நம்மூரிலே தயாராகும் தரம் நிறைந்த குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துக் குழுமங்களிடமிருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், யாருக்குக் கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

கொடுக்கக்கூடாதோர் பட்டியல்

1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படாத (Hbs Ag Negative) கருவுற்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள்.

2. Hbs Ag Positiveகுழந்தைகளுக்கு

3. முழு வளர்ச்சி இல்லாத குறைப்பிரசவ குழந்தைகளுக்கு (Premature born Children)

4. சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு எடை குறைவான குழந்தைகள் (Malnourished and undernourished Children

5. இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் (Anemic Children)

6. அதிக சளித்தொல்லையால் (Respiratory infection) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு

7. ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு (Children with History of Allergy)

முக்கிய பிரச்சனை என்னவெனில் பெற்றோர் அனுமதியின்றி (Informed Consen) பெரியவர்களுக்கும் ஒப்புதல் இன்றி (அதன் சாதக/பாதங்களை விளக்கிய பின்னரும்?!) யாருக்கும் இதைக் கொடுக்க கூடாது. இது “உரிமை மீறல்” பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். விஷயம் தெரிந்து கொள்வது (Right to correct) சாதக/பாதகங்களை (விளக்கப்பட்டால் தானே?) தெரிந்த பின்னர் தன் உடல் நலன் குறித்தான முடிவெடுக்கும் உரிமைகள் நோயாளிகள்/மக்கள் தெரிந்து பின்பற்றுவது முக்கியமானது. குறிப்பாக இந்தியாவில் பலரும் சத்துகுறைவால் பாதிக்கப்பட்டு, எடைக் குறைந்தும், இரத்த சோகையால் பாதிக்கப் பட்டும் இருக்கும், தற்போதைய சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது கொஞ்சம் கூட பொருந்தாத ஒன்று.

யார் யாருக்கு இத்தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும் என (CDC-USA) வரையறுத்ததைக் காண்போம்.

1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களுக்கு (Hbs Ag Positive) பிறக்கும் குழந்தைகளுக்கு

2. விபரீதமாக Hbs Ag இரத்தம் ஒருவர் உடம்பில் கலக்கும் (இது பரிசோதிக்காத இரத்தம் ஒருவர் உடம்பில் ஏற்றுகையில் இதன் பாதிப்பு வரலாம்)

3. Hbs Ag Positive உள்ள ஒருவரிடத்து உடலுறவு கொள்ளும்போது இதன் பாதிப்பு ஏற்படலாம்.

4. குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மஞ்சள் காமாலையின் பாதிப்பு (Acute Hepatitis B Infection) இருக்கையில் அக்குடும்பத்திலுள்ள 1 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக கொடுக்கலாம்.

அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசியை பொறுத்தவரை மருத்துவர்களால்/மருந்து குழுமங்களால் உருவாக்கப்படும் தேவையற்ற, பொய்யான மாய வலையில் சிக்காமல் இந்நோய் பரவ முக்கிய காரணமாக நீர், இரத்தம்/இரத்தப்பொருட்கள் ஒருவருக்கு ஏற்றுகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய பாதுகாப்புகள், பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியை அனைத்து மக்களும் பெற, அனைவருக்கும் (குறிப்பாக ஏழைகளுக்கு) அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்கள் (அனைவருக்கும் உரிய இடம், உண்ண சத்தான உணவு (வறுமை நீங்கி) அனைவருக்கும் வேலைப்பாதுகாப்பு, நிரந்தர வேலை, தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படல்), உடுக்க உடை, பாதுகாக்கப் பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வதே நிரந்தர தீர்வை நோக்கிய பாதையாக அமையும். தடுப்பூசிகளை விடவும் இவை முக்கியமானவை. நீண்ட கால, நிரந்தர தீர்வைப் பற்றியான கண்ணோட்டத்துடன் பார்த்தால் அவை செலவு குறைந்து இருப்பது தெளிவாக புரியும்.

தடுப்பூசி/மருந்தின் சாதக பாதங்களை விளக்கி, பின் மக்கள்/நோயாளிகள் கொடுக்கும் ஒப்புதல் (iகேடிசஅநன உடிளேநவே) இல்லாமல் குழந்தைக்கோ/பெரியவருக்கோ தடுப்பூசி கொடுத்தால், அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சட்டப்படி மருத்துவர்களும், மேலும் அத்தடுப்பூசியை உயர்த்திப் பிடிக்கும் மருந்து உற்பத்தி யாளர்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, ஏன் அரசோ பொறுப்பேற்க வேண்டும்.

மஞ்சள் காமாலை ஆட்கொல்லி தடுப்பூசியை தவிர்க்கவும்

By Barry Forbes The Tribune/ Thomson News paper, Sunday Feb 07, 1999 “Who is calling the shots” நிகழ்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் பின் விளைவுகள், பாதிப்பு காரணமாக அது கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது. அதில் பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட “Hep B” மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டம், அவ்வூசி “Multiple Sclerosis” எனும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியை ஏற்படுத்தியதின் விளைவாக நிறுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் விளைவாக Multiple Sclerosis என்னும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டதால், UK Smithkline Beechem நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற முடிவு அவ்விருவருக்கும் அந்த மருந்து குழுமம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

கனடா நாட்டில் 18,000 நான்காம் வகுப்பை சேர்ந்த மாணவர்களைக் காக்க Manitoba என்னுமிடத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மஞ்சள் காமாலை தடுப்பூசி பின் விளைவுகள் காரணமாக நீதி கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். Wyoming, Newhampshire, Illinois (USA) போன்ற பிற மாநிலங்களிலும் பெற்றோர் இத்தடுப்பூசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் 1990-1998 -க்கு இடைப்பட்ட காலத்தில் 17,497 பேர் காமாலை தடுப்பூசியின் பின் விளைவுகளால் ( Adverse Reactions) பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 5,983 பேர் உயிரை பாதிக்கும் அளவிற்கு, மருத்துவமனையில் அவசியம் சேர்ப்பதற்கு, நிரந்தர உடல் ஊனத்திற்கோ, இறப்பு... முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1999-ல் 0-1 வயது அமெரிக்க குழந்தைகளில் 54 பேருக்கு மட்டுமே அந்நோயின் தாக்கம் தென்பட்டுள்ளது. ஆனால் அதே வருடத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3.9 மில்லியன். 1 வயதிற்கு கீழான குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 0.001%. இது மிக, மிகக் குறைவு. அதனால் அங்கு தடுப்பூசி கட்டாயமயமாக்கப்படவில்லை.

Who wins? அமெரிக்க பொதுமக்களே இத்தடுப்பூசி திட்டத்தின் காரணமாக பணரீதியாகவும்/பிறரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலனடைந்திருப்பது the foxes in charge of the henhouse-Merch, Smithkline beechem எனும் பெரும் மருந்துக் குழுமங்கள் தான். அமெரிக்க சட்டப்படி, தடுப்பூசியின் பின் விளைவுகளுக்காக இவ்விரு மருந்து நிறுவனங்களையும் நீதி மன்றத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது. Merch நிறுவனத்திற்கு மட்டும் இத்தடுப்பூசி விற்பனையின் விளைவாக கிடைக்கும் ஒரு வருட பணம் 1 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Dr.Bonnie Dunbar - செல்களில் (cell) ஏற்படும் மாற்றங்கள் குறித்தான ஆய்வில் மிக முக்கியமானவர். மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு பிறகு பலரும் இறப்பு உட்பட மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், எனத் தெளிவாக கூறியுள்ளார். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 140-320 பேர் தான் மஞ்சள் காமாலை (Hepatitis ‘B’ Virus) காரணமாக இறக்கின்றனர்.

15,000 பிரஞ்ச் குடிமக்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கெதிராக அரசு மீது தொடர்ந்த வழக்கின் காரணமாக பின் விளைவுகள் இருப்பதை அரசு ஒப்புக் கொண்டு அக்டோபர் 1998ல் பிரஞ்ச் சுகாதார அமைச்சகம் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொடுத்து வந்த மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தை கை விட்டது. National Vaccination Information center கணக் கெடுப்புபடி அமெரிக்காவில் 1996ல் மட்டும் 14 வயத்திற்கு கீழ் 872 பேர் காமாலை தடுப்பூசி காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 13 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில் திரு. பாஸ்கரராவிற்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி பாதிப்பின் காரணமாக 70 பேர் தொலைபேசி செய்ததாகவும், 2 இறப்புகள் நிகழ்ந்ததாகவும் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2004ல் சேலத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுத்து பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி உள்ளது. கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தீபனுக்கு (தற்போது வயது 5) மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக வலிப்பு நோய் வந்துள்ளது.

1990ல் இங்கிலாந்தில் 598 மருத்துவர்களை உள்ளடக்கிய ஆய்வில் 50% மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட மறுத்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டியும் 50ரூ மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். (British Medical Journal 27.01.1990).

மஞ்சள் காமாலை தடுப்பூசியானது, மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவரின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுவதால் (அவர்களுக்கு AIDS வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதால்) ஊசி போடப்படுபவர்களுக்கும் AIDS தொற்றும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் விளைவாகவே AIDS திட்டமிட்டு பரப்பப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் தான் அமெரிக்காவில் முதலில் மஞ்சள் காமாலை தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அங்கு தான் AIDS தாக்கம் அதிகம் இருந்ததாக ஆதாரங்கள் உள்ளன.

பெரும்பாலான குழந்தைகளைப் பொறுத்தவரை, காமாலை தடுப்பூசியில் கிடைக்கும் பாதுகாப்பைக் காட்டிலும், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் 100 மடங்கு அதிகம் என்று Dr. Jane orient தலைவர் (AAPS) கூறுகிறார். 1991ல் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்கப்பட்ட 358 காம்பிய (Gambia) குழந்தைகளில் 20ரூ மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. (Lancet Study).

கல்பாக்க கதை: அணுசக்தி நிர்வாகமும், மஞ்சள் காமாலை தடுப்பூசியும்.

மருத்துவரான நான் கல்பாக்க கதிர்வீச்சின் பாதிப்பை (Multiple Myloma - எனும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய், இந்தியாவிலே, கல்பாக்கத்தில் அதிகம் என்றும், அதற்கான காரணம் இங்குள்ள கதிர்வீச்சு தான் என (புள்ளி விபரங்களுடன்) நிறுவிய பின், அதுவரை பெருமளவில் சுற்றுப்புற மக்களுக்கு ஒன்றும் செய்யாத அணுசக்தி நிர்வாகம், பல மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தி (என்னை ஓரங்கட்ட) அதில் மஞ்சள் காமாலை தடுப்பூசியை இலவசமாக பலருக்கும் கொடுத்து (கெடுத்து) வருவது வேடிக்கையாக உள்ளது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை (இக்கட்டுரையை) படித்த பின் என்ன சொல்ல போகின்றனர் என்பதை கேட்க ஆவலாக உள்ளது. இங்குள்ள அதிகாரிகள் அமெரிக்கர்கள் செய்யும் எதற்கும், எதிராக செய்வதை நினைத்து ஒரு வகையில் சந்தோஷமே. அமெரிக்காவில் Multiple Myloma - வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை கொடுக்கப்படுகிறது. இங்கு அது இல்லை. அங்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயமயமாக்கப்படவில்லை. இங்கு அதை அவர்கள் ஒருவேலை கட்டாயமாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மருத்துவ முகாம்களில் கலந்து கொண்ட பல அணு சக்தி மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை, என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின் குறிப்பு:

“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது”

மருத்துவ சேவையை கடும் எதிர்ப்பிற்கிடையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தாலும் அதன் மூலம் தண்டனை பெற்றவர்கள் மிகமிகக் குறைவே. இந்திய உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பானது, மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்காக குற்றவியல் வழக்கு அவர்கள் மீது தொடர முடியாது என்றும், பாதிப்பு/இறப்பிற்காக நஷ்ட ஈடு மட்டுமே கோர முடியும் என்பது மருத்துவர் கையில் எல்லையற்ற அதிகாரத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது நீதிமன்றங்கள் மக்கள் உரிமை/நலன்கள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

உதவி: திரு. பாஸ்கரராவ் பேட்டி
Pharmabiz இதழ் ஜனவரி 2003

புதன், 13 ஜனவரி, 2010

ஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும்

ஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும்
சி.அறிவுறுவோன்,
சோலை சுந்தரபெருமாள்பகவத்கீதைக்கு ஏராளமான உரைகள் வெளி வந்துள்ளன. ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய உரைநூல்களும் இதில் அடங்கும். கீதையின் சார்பாளர்கள் இந்த உரைநூல்களை லட்சக்கணக்கில் அச்சாக்கி இலவசங்கள் மூலம் பரப்பச் செய்கின்றனர். வெற்றியும் பெற்றுள்ளார்கள். மறுப்பதற்கில்லை. அமோக விளைச்சலும் உண்டு.


இந்நிலையில் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்களில் முதன்மை பங்கு வகிக்கும் தேவாரம், திருவாசகத்திற்கு உரைகள் எழுதப்படவில்லை. எழுத ஆட்கள் இல்லை என்பதால் இல்லை. இவைகளுக்கு உரைகள் எழுதக்கூடாது என்ற சட்டமே இருந்திருக்கிறது. இந்தச் சட்டங்களை அமுலாக்கியவர்கள் சைவ, வைணவ, பிராமணியப் புரோகிதர்கள் தான். தமிழ் மறைகளுக்கு உரை எழுதினால் அவற்றின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்று மூடாக்கு போட்டு இருக்கும் ரகசியத் தன்மையை இந்த கட்டுரையில் எழுத இயலாது. அது வேறு தளத்தில் எழுதப்படவேண்டும்.இந்த நூல்களுக்கு உரைகள் வெளிவந்திருந்தால், ஐந்தாம் வேதம் என்று போற்றப்படும் ‘பகவத்கீதை’ கேள்விக்கணைகளுக்கு தாங்க முடியாமல் கரைந்து போயிருக்கும். இப்படியான பூடகத்தன்மையோடு கீதையின் மெல்லிய இழைகள் கூட அறுபடாமல் காத்து வருவதில் இந்து மதத்திற்கு முழு பங்கு உண்டு. வெகுவாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் மக்களைத் திரட்டி வைத்து தங்களது மேலாதிக்கத்தில் தக்க வைத்து வரும் பிராமணிய புரோகிதர்கள் அரசாளும் தகுதி உடைய அறிவாளிகள் என்ற அடையாளத்திற்கு உட்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதனுள்ளே அவர்களின் சூட்சமங்கள் பொதிந்து கிடக்கின்றன.

வேதத்தை ஏற்றுக்கொண்ட அரசும் ஏற்றத்தாழ்வுள்ள வர்ணமும் ஒழுங்குப்படுத்தி வைத்திருக்கும் சூத்திர சாதியினுள் பிறந்த, வே.இந்திரசித்து சமகிருதத்தை முறையாக பயின்றவர். சமஸ்கிருத பண்டிதர்களுடன் விவாதித்தவர். இன்றும் விவாதத்திற்கு தயாராக இருப்பவர். தமிழ் இலக்கியங்களிலும் பயிற்சி உடையவர் என்றும் அறியமுடிகிறது. அவர் ‘பகவத்கீதை ஒரு பார்வை’ என்ற ஆய்வை வெளி யிட்டுள்ளார். இந்நூல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆயினும் பரவலாக அறியப்படவில்லை. இந்த ஆய்வினுள் பயணிக்கும்போது நமக்கு ஏராளமான தரவுகள் கிடைக்கின்றன.

இந்நூலுள் சொல்லப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் மாறுபட்டவை. இன்றைய காலகட்டத்தில் கவனத்துக்குரியவை. இந்து மதம் இந்தியாவின் பெரிய மதம் என்ற ஒரே காரணத்துக்காக அதற்குத் தனி மதிப்பும் முதன்மையும் அளிக்கப்படவேண்டும் எனும் ஒரு கோரிக்கையையே அரசியல் கோரிக்கையாக மக்கள் முன்வைத்து அதிகாரத்தை வென்றெடுக்க முயலும் அரசியல் சக்திகளின் உள்நோக்கத்தைத் தோலுரித்துக் காட்ட இந்நூல் பேரளவில் பயன்படும்.

இந்நூல் பத்தொன்பது உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அதில் ‘தமிழ் வைணவ நெறியும் கீதையும்’ எனும் தலைப்புள் காணப்படும் தகவல்கள் உற்று நோக்கத்தக்கவை. வைணவத்தின் பன்னிரு ஆழ்வார் களும் இயற்றிய எந்த ஒரு நூலிலும் கிருஷ்ணன் அர்ச்சுணனுக்கு ஓதியதாகச் சொல்லப்படும் பகவத் கீதை ஒரு இடத்தில்கூட குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். பன்னிரு ஆழ்வார்களும் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக் கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம் வைணவர்களுக்கு உயிர்மூச்சானது. அதைக்கூறாத எதையும் வைணவச் சார்பானதாக வைணவர்கள் கருதுவதில்லை. தொல் காப்பியர் காலமுதலே மாலியம் என்று சொல்லப்படும் வைணவம் தமிழகத்தில் நிலவி வருவதைத் தொல் காப்பிய வரிகளை எடுத்துக்காட்டிக் கூறியுள்ளார்.

‘திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே’,
‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’,
‘நாராயணா எண்ணா நா என்ன நாவே’


என்னும் சிலப்பதிகார வரிகளை எடுத்தாண்டு எட்டெழுத்து மந்திரம் சிலப்பதிகார காலத்திலேயே தமிழ்மக்களிடம் வேர்கொண்டுள்ளதை நிறுவியுள்ளார். அவரே பிற்காலத்திலே எழுதப்பட்ட கம்பராமாயணத்துள் எட்டெழுத்து மந்திரம் வரவில்லை என்பதால் வைணவர்கள் கம்பராமாயணத்தை வைணவநூலாக ஏற்க மறுத்ததால் கம்பர் பிறகு இரணியவதத்தைக் கம்பராமாயணத்துள் நுழைத்து அதனுள் எட்டெழுத்து மந்திரத்தை போதித்துள்ளார் என்று காட்டியுள்ளார். இதனால் வைணவர்கள் எட்டெழுத்து மந்திரத்தை எத்துணை உயிர் மூச்சாகக் கருதினர் என்பதை விளக்கியுள்ளார்.

கடவுள் நாற்பத்தைந்து பெயர்களால் அழைக்கப்படுவதைக் குறிப்பிட்டு அவற்றுள் நாராயணா என்னும் பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்று காட்டியுள்ளார். (பக்கம் 93) ஆகவே கீதை வைணவப் பெரியார்கள் வணங்கும் பகவான் கிருஷ்ணன் அல்லது கண்ணனால் அர்ச்சுணனுக்கு ஓதப்பட்டிருந்திருக்குமானால் உறுதியாக அதனுள் நாராயணா எனும் பெயர் வந்திருக்கும். வரவில்லை என்பதால் வேறு யாரோ ஒரு கண்ணனால் அல்லது கிருஷ்ணனால் கீதை சொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தெளிவான முடிவிற்கு வருகிறார். இதை மறுக்க முடியாது. பகவான் கண்ணனை மறுப்பது நூலாசிரியர் நோக்கமன்று. பிராமணியத்தை மறுப்பதும் சனாதனத்தை மறுப்பதுமேயாகும். ஆகவே, வைணவ நூல்களை வேதசாரத்தை எதிரொளிப்பவை என்று இட்டுக்கட்டி எழுதும் எழுத்துக்களைக் கடுமையாகச் சாடுகிறார்.

அடுத்துக் கவனத்தில் கொள்ளவேண்டியது பன்னிரண்டாவது உட்தலைப்பாகும். இதனுள் கீதை பத்துக் குற்றங்களும் நிரம்பிய நூல் என்று நிறுவியுள்ளதாகும். பவனந்தி முனிவரின் நன்னூல் நூற்பாவை மேற்கோள் காட்டி நிறுவியுள்ளார். ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் வேறுவழியில்லை.

‘கீதை காட்டும் இந்துமதக்கடவுள்’, ‘இந்துமதக் கடவுள் இரக்கமற்றவன் அறநெறி அறியாதவன்’, ‘இந்துமதம் காட்டும் கடவுள் - கருணையற்றவன்’, ‘இந்துமதக் கடவுள் குறுகிய மனம் படைத்தவன்’, ‘இந்துமதக் கடவுள் - சொல்வன்மையற்றவன்’, என்னும் தலைப்புகளில் மிகச்சரியாக ஆய்வை மேற்கொண்டு உள்ளார் என்பது புலனாகிறது. இவற்றைப் படிப் போர்க்கு இந்துமதக் கொடுங்கோன்மை கடவுளிடமிருந்தே தொடங்குகிறது என்பது புலனாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘ஆத்மாவைப்பற்றி - பகவத்கீதை’ எனும் தலைப்புள் பகவத்கீதையுள் ஆத்மக்கோட்பாடு குழப்பப்பட்டுள் ளதை நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் ஆன்மா இல்லை. அழிக்கப்படுவதும் இல்லை. உடல்கள் மட்டுமே அழிகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன எனும் கோட்பாடு நன்றாகக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப்போரில் மதன்லால் திங்க்ரா முதல் காந்திவரை ஆத்மா அழியாது உடல் தான் அழியும் எனும் கோட்பாடு மதவாதிக்கும், வினை மறவர்க்கும், அஹிம்சாவாதிக்கும் அச்சத்தை அகற்ற உதவிய கோட்பாடு என்பதில் ஐயமில்லை என்றாலும் தற்காலக் குற்றவியல் சட்டம், தண்டனைச் சட்டம் ஆகியவை ஆன்மா அழியாது உடல்தான் அழியும் என்பதால் ஒரு கொலையை கொலையன்று என்று ஒப்புக்கொள்ளுமா? ஒப்புக்கொள்ளா. ஆனால் பிராமணத்தியோடு உறவுகொண்ட சூத்திரன் கொல்லப்படவேண்டும் என்பதும் அது கொலையன்று என்பதும் மனுநீதி என்பதை மறந்துவிடுவதற்கில்லை. ஆகவே மனுநீதியை மக்கள் நீதியாக்க உயர்த்திப் பிடிக்கப்பட்ட கீதையின் ஆன்மக்கோட்பாட்டின் உடல்தான் அழியும்; ஆன்மா அழியாது எனும் பகுதி கொலையை நியாயப்படுத்த உதவுவதாகும் என்பதை உணரவேண்டும்.

‘மரணமில்லா பெருவாழ்வு குறித்து இந்துமதம்’ எனும் தலைப்பில் மனிதன் இறக்கும் நேரமே முதன்மையானது என்று குறிக்கப்பட்டுள்ளது. மனிதன் இறக்கும் நேரம் நல்ல நேரமாக இருந்தால் எவ்வளவு பெரிய அயோக்கியனும் பிறவிப்பெருங்கடல் நீந்தியவனாகிப் பேரின்பம் அடைவான். கெட்ட நேரத்தில் இறப்பவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அவன் பிறவி அறுபடாது; மறுபிறவி எடுக்கவேண்டியதாகிவிடும் என்று கிருஷ்ணன் வாய்மொழியாகப் பகவத்கீதையில் ஒலிக்கும்போது பிராமணர்களின் புரோகிதத்துக்கு முதன்மை வந்து விடுகிறது. எண்குணத்தான் தாளை வணங்காதத் தலை என்று வள்ளுவர் குறிப்பிடுவதில் வரும் எட்டு குணங் களும் இந்நூலுள் 63ஆம் பக்கத்தில் (கீதை ஓஐஏ: 24-25) குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பௌத்தக் கோட்பாடு. கீதையால் உள்வாங்கப்பட்டுள்ளதற்கு எடுத்துக் காட்டாகும். அதற்கு இந்நூலாசிரியர் கூறியுள்ள விளக்கம் பொருந்துவதாய் இல்லை. எப்படி இருப் பினும் கீதை புரோகிதத்துக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் பிராமணியத்தை ஊக்குவிக்கிறது என்பது நன்கு உணர்த்தப்பட்டுள்ளது.

இனி ஐந்தாவது வேதம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மகாபாரதம் கீதை இடம் பெறாதிருந்தால் அப்பெயர் பெற்றிருக்க முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. இந்தியாவில் சொத்தும், சாதியும் கூடப்பிறந்தவை. அரசும் ஏற்றத்தாழ்வுள்ள வர்ணமும் உடன் பிறந்தவை. அதனால்தான் முதலாளித்துவ சனநாயக காலகட்ட அரசு கூட வர்ணத்துக்கு மாறாக வகுப்பை உயர்த்திப்பிடிக்க வேண்டியதாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். வர்ணத்தை மறுவுயிர்ப்பு செய்ய எண்ணினாலும் பாரதீய ஜனதா கட்சி வகுப்புகளை உயர்த்திப்பிடிப்பதன் நோக்கம் இதில்தான் அடங்கியுள்ளது.

குலக்குழு (சாதி) ஆட்சிக்கு மாறாக ஒரு தனி ஆள் ஆட்சிக்கு வித்திட்டுச் சொத்து வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் வித்திட்ட போராகும். இதைத் தொடர்ந்தே பேரரசுகள் உருவாகி வளர்ந்தன. சிற்றரசுகளை ஒழித்துக்கட்டி மகதப்பேரரசு உருவானதும், பாரி போன்ற இனக்குழுத் தலைவர்களை ஒழித்துக்கட்டி சேர, சோழ, பாண்டியர்கள் எனும் முடிமன்னர்கள் உருவானதும் இதன்பிறகே. வடக்கே சமண பௌத்த மதங்கள் தலையெடுத்து பௌத்தம் அரச மதமானதும் தெற்கே களப்பிரர் ஆட்சியைப் பிடித்து பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் முதலான வற்றை அழித்து மக்கள் சொத்தாக்கியதும் நிகழ்ந்து முடிந்தபின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பக்தி இயக்கங்கள் தலையெடுக்கின்றன.

அவற்றால் பௌத்தம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் பிராமணியம் அரியணை ஏறுகிறது. இவ்வாறு மீண்டும் பிராமணியம் அரியணை ஏற முயற்சி செய்த காலத்தில் அல்லது அரியணை ஏறிய கொஞ்ச காலத்திலேயே கீதை எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கான ஆதாரம் ஒன்றை கீதையிலிருந்தே காட்டியுள்ளார். ‘சாதித் தொழிலை செய் கூலியை எதிர்பாராதே’ எனும் தலைப்பில் 103ஆம் பக்கத்தில் உள்ளது.

“இந்த அழிவற்ற யோகத்தை (வழியை) நான் முன்னர் வி°வானுக்குப் (சூரியனுக்கு) பகர்ந்தேன். வி°வான் மனுவுக்குச் சொன்னான். மனு இக்ஷ்வாகு வுக்குச் சொன்னான்” (பகவத்கீதை IV: 1)

“இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். அந்தயோகம் கால மிகுதியால் அழிந்தது”. (பகவத்கீதை IV: 2)

“அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன். இது மேலான மறையாகும்.” (பகவத்கீதை IV: 3)

இதில்வரும் மேலான மறையும் யோகமும் வர்ண முறையையும் வர்ணத்துக்குரிய தொழிலைச் செய்யும் படி வற்புறுத்துவதுமேயாகும்.

‘சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம்’ (பகவத் கீதை IV: 13) என்பது ‘நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டன’ என்று கீதை ஆசிரியன் பகவான் கிருஷ்ணன் கூறுவதாக அமைந்தது.

‘அந்தயோகம் காலமிகுதியால் அழிந்தது’ என்று ‘அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்’ என்று சொல்லப்பட்டதால் நால் வர்ணமும் குலத்தொழிலும் அழிந்துபோனதால் அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டி சொல்லப் பட்டது என்றே பொருள்படுகிறது. பௌத்தத்தாலும் களப்பிரராலும் அழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட வில்லை. காலமிகுதியால் அழிந்தது என்று சொல்லப் பட்டுள்ளது என்றாலும் உண்மை அதுவன்று என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பௌத்தமும், களப்பிரரரும் சிதைத்தனர்; அழித்தனர் என்பதே சரியாக இருக்கும். எனவே கீதை, மகாபாரதம் தோன்றி நீண்ட நெடுங்காலம் கடந்தே எழுதிச் சேர்க்கப் பட்டிருந்திருக்க முடியும்.

‘ஆராய்ச்சியாளர் பார்வையில் கீதை’ எனும் தலைப்பினுள் ஜோசப் இடமருகு குறிப்பிடும் அறிஞர்களின் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன என்றாலும் நூலாசிரியர் பகவத்கீதை இறைவனால் படைக்கப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை என்றும் பகவத்கீதையில் காணப்படும் 18 அதிகாரங்களும் ஒரே புலவனால் எழுதப்பட்டிருக்கலாம் என்பதற்கு இடமில்லை. ஏனெனில் முரண்பட்ட கருத்துக்கள் மிகுதியும் காணப்படுகின்றன. பல்வேறு காலங்களில் வாழ்ந்த வெவ்வேறு புலவர்களின் பாடல் களின் தொகுப்புத்தான் பகவத்கீதை என்று எழுதியுள்ளார்.

ஆக, பகவத்கீதை பகவான் என்று அறியப்பட்ட கண்ணனால் செய்யப்பட்டது அன்று பெயர் தெரியாத யாரோ ஒரு புலவரால் அல்லது வெவ்வேறு புலவர் களால் வெவ்வேறு காலங்களில் செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். பகவத்கீதை இலக்கணப்படி ஓர் ஒழுங்கான நூலன்று என்று தெளிவாக்கி விடுகிறார்.

பிராமணியத்தை மிக நுட்பமாக அம்பலப்படுத்துகிறார். வேதம் சிறுதெய்வ வழிபாட்டினை உயர்த்திப் பிடிப்பது என்பதை மொழி நூலறிஞர் ஞா. தேவ நேயப்பாவாணர் அவர்கள் கூற்றை மேற்கோளாகக் காட்டி நிறுவியுள்ளார். எனவே, வேதத்தின் சாரமாக உபநிஷதங்களைக் காட்டுவது பித்தலாட்டம் என்று கூறியுள்ளார். ‘உபநிஷதங்களும் கீதையும் சேர்ந்து பிரம்ம சூத்திரத்தில் அடக்கம். பிரம்மசூத்திரத்தில் வேதவியாசர் சுருதி என்று குறிப்பிடும் இடங்களில் உபநிஷதங்களையும் °மிருதி என்று குறிப்பிடும் இடங்களில் அநேகமாய் பகவத்கீதையையுமே கருத்தில் வைத்து பேசுகிறார்’ என்று (பக்கம் 27) ஒரு மேற்கோளை காட்டுவதன் மூலம் பிரம்மசூத்திரத்திற்கு மூலமே உபநிஷதங்களும் கீதையும் என்றாகி விடுகிறது. இவை மூன்றுமே இந்துக்களுக்கு வேதநூல்களாகும். இவற்றுக்கான ஒட்டுமொத்த பெயரே ‘பிர°தான திரயம்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இதில் வராத இன்றியமையாத செய்தி ஒன்று உண்டு.

ஸ்ருதி என்பது ஒரு வழிபாட்டுமுறையாக நெருப்பில் ஆகுதி செய்து வழிபடும் முறை. ஆகமம் உருவவழிபாட்டை வலியுறுத்துவது ஸ்ருதி என்பது ஆரிய வழிபாட்டு முறை. ஆகமம் என்பது இந்தியத் தொல்குடி மக்களுக்கு உரியது. இரண்டும் இணைந்தே வேதாகமம் ஆனது. ஆரியரும் இந்தியத் தொல்குடி மக்களும் இணைந்ததன் பண்பாட்டு வெளிப்பாடே வேதாகமம். ஆனால் பிராமணியம் ஆகமத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேதமே அனைத்திற்கும் மூலம் என்று கதைகட்டுகிறது. அதையே பிராமணர்கள் ஆரியர் வழித்தோன்றி யவர்கள் என்று கூறவும் செய்கிறது. உண்மை மறைக்கப்படுகிறது. ஆனால், உபநிஷதங்கள் சத்திரியர் களால் உருவாக்கப்பட்டவை. அதனாலேயே அரசு உருவாக்கத்தில் யாகங்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டது. அதனால் தான் வேதகாலத்திற்குப் பிறகு ஸ்ருதி வழிபாட்டுமுறை முதன்மைப்பட்டது. ஸ்ருதி வழி பாட்டு முறைக்கும், வேதகால வழிபாட்டு முறைக்கு மான முட்டல் மோதலை ரிக்வேதத்தில் வரும் மீமாம் சகனின் பாடல்கள் மூலம் அறியலாம்.

ஸ்மிருதியாகக் கருதப்படும் பகவத்கீதை மகாபாரதத்தில் இணைக்கப்பட்டதால்தான் மகாபாரதம் ஐந்தாவது வேதம் என அழைக்கப்படும் நிலையைப் பெற்றது. இது திட்டமிடப்பட்ட ஓர் உருவாக்கமே என்பதில் ஐயமில்லை. அது பிராமணர்களாலும் சத்ரியர்களாலும்தான் நிகழ்ந்திருக்கமுடியும். ஆகவே, இந்துமதத்தைப் பிராமண வர்ணத்தில் மதம் என்று மட்டும் கருதமுடியாது. இன்றைய நிலையில் பிராமணர் மற்றும் ஆளும் வர்க்கமதமாகத்தான் அதைப் பார்க்க முடியும். பிராமணியத்தை ஏற்காதவர்களையும் கடவுள் நம்பிக்கை இல்லாவர்களையும் கூட இந்துக்கள் என்று கணக்கெடுக்கும் மோசடி நடந்து வருகிறது.

‘கீதை நூலாசிரியர் நெஞ்சம்’ (பக்கம் 95) எனும் 12வது உள்தலைப்புத் தேவையில்லாதது மட்டும் இல்லை, ‘ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் கீதை’ (பக்கம் 33) எனும் 4வது உட்தலைப்புக்கு மாறானது. இந்தத்தலைப்புத் தேவைதான் என்று நூலாசிரியர் கருதுவாராயின் அங்கதமாகச் சொல்லப்படும் கருத்துக் கள் கொடுங்கோன்மையை வளர்க்கவும் பயன்படுத்த முடியும் என்றாகிவிடும். அங்கதத்தின் தேவை அடிப் பட்டுப்போகும்.

மேலும் அங்கதம் என்பது புகழ்வதுபோல் இகழ்வதாகும். கீதையின் தலைவன் தன்னைப்பற்றித் தானே கூறுவதாகும். தன்னைத் தானே புகழ்ந்துகொள்வதையும் மிகைப்படுத்திக் கூறிக்கொள்வதையும் தறுக்குரை என்றுதான் கூறவேண்டுமே தவிர அங்கத மென்று கூறமுடியாது. ஐம்புலன்களால் உணர முடியாத சாதாரண அறிவாலும் உணரமுடியாத ஞானநிலையிலேயே அறியமுடியும், உணர முடியும் என்று சொல்லப்படுகிற கடவுள் தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளாவிட்டால் ஞானிகள் கூற்றை மட்டுமே நம்பவேண்டியிருக்கும். கடவுளே அர்ச்சுணனுக்குக் கூறுவதால் எளியமக்களுக்கு நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. அது தறுக்குரையாகவும் தோன்றாது.

ஆகவே, கீதையை எழுதியவர் ஒருவரோ, பலரோ மக்களை ஏமாற்றும் நோக்கில் நயவஞ்சக உணர்வோடு கடவுளே கூறுவதுபோல்எழுதிச் சேர்த்துள்ளனர் என்பதே உண்மை. எனவே 12வது உள்தலைப்பு இந்த நூலின் உள்ளடக்கத்திலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளதை உணர்ந்து நூலாசிரியர் திரும்பப் பெற்றுக்கொண்டால் குழப்பமற்ற ஒரு நல்ல ஆய்வு நூலாகவே விளங்கும் என்பதில் ஐயமில்லை.எல்லைத்தமிழன் கவிதைகள்

மழையை ரசித்தல்

குடையை பிடித்துக் கொண்டு அல்ல
மழையில் நனைந்து கொண்டே
மழையில் ரசிப்பது தான் அமர்க்கு அழகு
என்கிறார் புட்டா*
மழையில் நனைந்து கொண்டே
உழுகிறான் உழவன்
மழையில் நனைந்து கொண்டே
படுத்துக் கிடக்கிறான் பாதசாரி
மழையில் நனைந்து கொண்டே
வாழ்கிறார்கள் ஏழைகள்.

* புட்டா: கவிஞர் விக்ரமாதித்யனின் மற்றொரு புனைபெயர்

பறத்தல்

பறக்கத் தயாராகும் பருவத்தில்
கனவுத்தீ படர்ந்து பிடிக்கும்
இனிக்கும் தீயின் ஆவல்
உடல் முழுக்க பரவி
சிறகுகள் அசையும்
பறத்தலில்
காற்றின் அலைக்கழிப்பும்
மரக்கிளைகளின் தடையும்
மேகங்களின் வேகமும்
சிறகுகளை வலுவாக்கும்
அல்லாதவற்றின் சிறகுகள்
முறிந்து தொங்கும்

நண்பர்களும் எதிரிகளும்

எதிரிகளுடனான சண்டையை
நண்பனிடம் விளக்கிக் கொண்டிருந்தேன்
சண்டைக்கான காரணங்கள்
வலுவாக இருக்கின்றன
எல்லா சண்டைகளும்
காரணங்களுடன் தான் நிகழ்கின்றன
நேற்று நெருக்கமாக நடந்தவர்கள்
பிரியமும் அன்பும் கொண்டவர்கள்
இன்று கீரியும் பாம்பும்
நேற்றைய நண்பர்கள் தான்
இன்றைய எதிரிகள்
இன்றைய எதிரிகள்
நாளை நண்பர்கள் ஆகலாம்
ரணக்கீறல்களுடன் பிரிந்தோம்
பேச்சின் முடிவில்

இரவின் மடி

வெளியெங்கும் நிசப்தம்
குடிகொண்டிருந்த போதும்
மனக்கதவுகள்
மூட மறுக்கும் வேளைகளில்
தூக்கம் ஏழேழு கடல் தாண்டி சென்று விடுகிறது
பாடுகள் சுமந்து எப்போதும்
சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்
இயேசுவைப் போல
சிலுவையில் அறையப்படுகிறது எனது தூக்கமும்
புரண்டு புரண்டு நினைவுகள் அகற்றியும்
மண்டை சூடாகி தகிக்கிறது
நிகழ்வுகளின் காயங்ளில் வெடித்துக் கிளம்பும்
புதிய பாதை
படைப்பின் மூலவேர்கள் தேடி அலையும்
மானிடப் பரப்பின்
அயர்ந்து தூங்கும் பின்னிரவு
காகங்களின் கரைதலில்
விழித்தெழும் காலை.சிக்கல்- சு.தமிழ்ச்செல்வி


லில்லி டீச்சருக்கு தினந்தோறும் இது ஒரு பெரும் பிரச்சனையாய் போய்விட்டது. படுக்கையை விட்டு மகள் ஜெனிட்டா எழுந்துவிட்டால் போதும். ஆறு மணியிலிருந்து ஏழரை எட்டுவரைகூட மகளோடு கழிப்பறையில் மல்லுக்கட்ட வேண்டியதாயிருக்கிறது. பருப்பை ஓர் அடுப்பிலும் பாலை மற்றோர் அடுப்பிலும் வைத்துவிட்டு வந்து மகள் எழுந்து விட்டாளா என்று பார்த்தாள். அவள் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். சில சமயம் விழித்துக் கொண்டாலுமே கூட தூங்குவது போல் பாவனை செய்யக்கூடியவள்.
“ஜெனி... ஜெனி....”
“ம்”
“எழுந்திருக்கல?”
“ம்... எழும்புறம்மா.”
“பொழுது விடிஞ்சிடுத்துடி எழுந்துரு”
ஜெனிட்டா சோம்பல் முறித்து எழுந்து உட்கார்ந்தாள்.
“பல் வெளக்கிட்டு வா. பால் தாறேன்.”
லில்லியின் கணவன் சேவியர் காலையிலேயே எழுந்து சாம்பாருக்கு தேவையான வெங்காயம், காய் இவற்றை நறுக்கி வைத்துவிட்டு நடைப்பயிற்சிக்குப் போயிருந்தான். அதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைப்பவன். காபி, டீ எதையும் வீட்டில் அவன் எதிர்பார்ப்பதில்லை. வழியில் ஏதாவது ஒரு கடையில் குடித்துக்கொள்வான். இதைக்கூட அவன் லில்லிக்கு செய்யும் உபகாரமாய் நினைத்தான்.
லில்லிக்குத்தான் நிறைய தலைவலி. காலைச் சிற்றுண்டி, மதியச்சாப்பாடு செய்யவேண்டும். அடுக்குக் குவளைகளில் மகளுக்கும் கணவனுக்கும் தனக்கும் தனித்தனியாய் எடுத்துவைக்க வேண்டும். பாட்டில் தேடி தண்ணீர் நிரப்பி, துண்டுதேடி, பைதேடி... இதெல்லாம் போதாதென்று ஜெனிட்டாவின் குடலோடு வேறு தினமும் குத்துச்சண்டை நடத்த வேண்டிருக்கிறது லில்லிக்கு. ஜெனிட்டாவை கழிப்பறைக்கு அனுப்புவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. பலி பீடத்துக்குப் போக பயந்து பின்னுக்கு இழுக்கும் ஆட்டைப்போல பார்க்க பாவமாக இருக்கும். என்ன செய்து தொலைப்பதென்று எதுவும் புரியாமல் விழிப்பாள் லில்லி.
அப்படி என்னதான் இருக்குமோ அவள்குடலில். இம்மியும் இளகிக்கொடுக்காத கல்குடல். எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தாகிவிட்டது. ஜெனிட்டாவுக்கு குடல் பிரச்சனை ஒரு பங்கென்றால் வலிக்கும் என்ற பயம் பத்து பங்காக இருந்து காலைக்கடன் கழிப்பதே பெரும் சிக்கலாகிக் கொண்டிருந்தது. கழிப்பறைக்குள் கால்வைக்கக்கூட பயந்தாள் ஜெனிட்டா.
‘நாட்டுல ஒரு டாக்டர் கூடவா ஒழுங்கா படிச்சி வந்திருக்க மாட்டாங்க. தினசரி காலையில குழந்தைய வெளிக்கு போக வைக்க முடியாத டாக்டருங்க என்ன படிச்சிட்டு வந்திருப்பாங்க.’ லில்லியின் கையாலாகாத்தனம் மருத்துவர்களின் மீது கோபமாகத் திரும்பும்.
ஜெனிட்டா குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே அவளுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. குழந்தை தினமும் வெளிக்குப் போகாது. மலம் இறுகிக் கொள்ளும். அப்போதெல்லாம் குழந்தையைக் காலில் போட்டு முருங்கைக் கீரையின் சிறு காம்பை ஓட்டைக்குள்விட்டு பிடித்துக்கொள்வாள். முருங்கைக் காம்பு வைத்த ஓரிரு நிமிடங்களுக்குள் மலம் எவ்வளவு இறுகி இருந்தாலும் வந்துவிடும். இருப்பினும் மலத்துளையைக் சுற்றி தெறிப்புகள் ஏற்பட்டு ரத்தம் கசிவதை தடுக்க முடியாது. பிறகு அதற்கு மருந்து தடவிக்கொண்டிருப்பாள் லில்லி.
ஜெனிட்டாவை மழலையர் பள்ளியில் சேர்த்த பிறகு முருங்கைக் குச்சி மருத்துவம் முடியாமல் போய் விட்டது. தான் வளர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்வாளோ என்னவோ காலில் உட்காராமல் ஆட்டம் காட்ட ஆரம்பித்து விட்டாள். இப்போது இரண்டாம் வகுப்பிற்கு வந்துவிட்டாள். மருத்துவர்கள் அவ்வப்போது நீட்டு நீட்டான மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறார்கள். அதை மலத்துளைக்குள் விடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அப்படியும் இரண்டு நாட்களுக்குத்தான் நிவாரணம் கிடைக்கிறது. வளர்ந்தால் சரியாகிவிடும் என்கிறார்கள். கீரையும் பாலும் முட்டையும் நிறையக் கொடுக்கச் சொல்கிறார்கள். லில்லியும் கொடுத்துத்தான் பார்க்கிறாள். இவற்றை விடவும் கடை பண்டங்களைத்தான் ஜெனிட்டா அதிகமாய் விரும்பித் தின்று தொலைக்கிறாள். ஒரே பெண்பிள்ளை விரும்பித் தின்பதை வாங்கிக் கொடுக்காமலும் இருக்க முடியவில்லை.
அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு பாலை ஆற்றியபடி ஜெனிட்டாவைக் கூப்பிட்டாள். போராட்ட நேரம் ஆரம்பமாகப் போகிறதே என்ற ஒருவிதமான மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தவள். “என்னம்மா?” என்றாள்.
“பல் வெளக்கிட்டல்ல”
“ம்”
“இந்தா இதக்குடி”
கவனமாய் பால் டம்ளரை வாங்கிக் கொண்டவள் லில்லியின் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தாள்.
“நல்லா ஆத்திட்டன். சுடாது. சீக்கிரமாக் குடி.”
“ம்”
“வெண்டைக்காய் நறுக்கணும். என்னால நின்னுட்டு இருக்க முடியாது. குடிச்சிட்டு வா சீக்கிரமா” சமையலறைக்குத் திரும்பினாள்.
“அம்மா”
“என்னடி?”
“இன்னக்கி எனக்கு ஆய் வரல்லம்மா”
“என்னக்கித்தான்டி ஒனக்கு அது தானா வந்துச்சி?”
“...”
“எப்பத்தான் இந்த பிரச்சனைத் தீருமோத் தெரியலையே ஆண்டவரே” அருவாமனையை எடுத்துவைத்து கழுவிய வெண்டைக்காய்களை நறுக்க ஆரம்பித்தாள்.
“ஜெனி இன்னுமா பால் குடிக்கிற?”
“இன்னும் கொஞ்சம் இருக்கும்மா”
“குடி மடக்கு மடக்குன்னு”
“ரொம்ப ஆறிப்பொயிட்டுதும்மா. வயத்தப் பெரட்டுது”
“வெத வெதன்னு குடுத்தா சூடா இருக்கு குடிக்க முடியலம்பே. ஆத்திக்குடுத்தா சில்லுன்னு இருக்கு கொமட்டுதும்ப. நீ என்னக்கித்தான் நல்லாருக்குன்னு சொல்லி குடிச்சிருக்குற. சீக்கிரம் குடி.”
“எனக்குப் போதும்மா”
“குடிடி எல்லாத்தையும் குடிச்சாத்தான் ஆய் வரும்”
“அம்மா இன்னக்கி மட்டும் வேண்டாம்மா. எனக்கு ஆயி வரலம்மா”
“இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம். நீ பாலக்குடிச்சிட்டு இப்ப பாத்ரூமுக்குள்ள போவணும் சொல்லிட்டன். நேத்தைக்கு முழுசா வயத்தவிட்டு கழிஞ்சிருந்தாக் கூடஇன்னக்கி, இருந்துட்டுப்போன்னு விட்டுடலாம். ஆட்டாம் புழுக்கையாட்டம் ரெண்டு வந்து விழுந்துது. அதோட எழும்பிட்ட. இன்னக்கிம் இருக்கலன்னா என்ன அர்த்தம்”
“ஆண்டவர் மேல சத்தியமா எனக்கு ஆயி வரல்லம்மா”
“சத்தியம் பண்றியா நீ. ஏற்கெனவே ஓம் ஒடம்புல முக்காவாசி கல்லாவே இருக்கு. இதுல ஆண்டவர்மேல ஆணயிட்டு வேற சத்தியம் பண்றியா? ஒனக்கும் ஒப்பனுக்கும் ஈவு எறக்கங்குறதே இருக்காதாடி. ஒரு பொட்டச்சி கெடந்து புள்ளக்கிட்ட எவ்வளவு போராடுறாள்னு ஒப்பனும் பாவப்பட மாட்டேங்கிறான். நம்ப அம்மா இவ்வளவு கெஞ்சி கூத்தாடுதேன்னு ஓந்நெஞ்சிலயும் சொரக்கமாட்டங்குது. நான் என்னடி பாவம் பண்ணினேன். ஒங்க ரெண்டு பேருக்கிட்டயும் நான் ஒவ்வொரு நாளும் நரகத்த அனுபவிக்கிறன் தெரியுமாடி. ஆண்டவரே என்னை எதுக்காக இப்படி சோதிக்கிற.”
தன் அம்மா புலம்புவதை சகித்துக்கொள்ள முடியாத ஜெனிட்டா “சரிம்மா நான் பாத்ரூமுக்குப் போறன்” என்று எழுந்து வந்தாள். சமையல்கட்டை அடுத்திருந்த கழிப்பறையுடன் கூடிய குளியலறைக்குள் நுழைந்தாள்.
“ஜெனி இரு இந்தா இத வாங்கிட்டு போடி”
“பேப்பர் வேண்டாம்மா. நான் டாய்லெட் பேஷின்லயே போயிக்கிர்றன்”
“அதெல்லாம் வேணாம். நீ எப்பவும் போல பேப்பர்லயே போ நீ போனியா போகலையான்னு எனக்குத் தெரிய வேணாம்”
“நான் சொல்றம்மா”
“நீ ஒண்ணும் சொல்ல வேணாம். நானே பாத்துக்கிர்றன். நீ பேப்பர்லயே போ”
முறைப்புடன் தாளை வாங்கிக்கொண்டவள் கோபத்தில் படீரென கதவை அடித்துச் சாத்தினாள்.
“பாத்துடி. கதவு ஒடஞ்சிடப்போகுது. வீட்டுக்காரங்ளுக்கு காதில விழுந்துட்டா அப்பறம் அதுக்குவேற நான் விளக்கம் சொல்லிக்கிட்டு நிக்கணும். இப்ப அதுக்கெல்லாம் நேரம் இருக்காச் சொல்லு.”
விசில்வந்த குக்கரை இறக்கி வைத்துவிட்டு வெங்காயம் தக்காளி வதக்கிக்கொட்டி புளிக்கரைசல் சேர்த்து சாம்பாரை கொதிக்கவிட்டாள். ரசத்திற்காக சூடான பருப்புத் தண்ணீருக்குள் முழு தக்காளியை எடுத்துப் போட்டிருந்தாள். ரசம் வைக்க வேண்டும், வெண்டைக்காய் வதக்கவேண்டும். கடைசியாய் ஆளுக்கு இரண்டு தோசை ஊற்றவேண்டும். எத்தனையைச் செய்வது? ரசமும் வெண்டைக்காய் பொரியலும் மட்டும் இருந்தாலே போதும். அவளும் ஜெனிட்டாவும் பெரும்பாலும் ரசத்தில்தான் சாப்பிடுவார்கள். சாம்பார் என்றால் ஜெனிட்டாவுக்கு ஆகவே ஆகாது. லில்லிக்கும் சிலசமயம் பிடிக்காமல்தான் போய்விடுகிறது. காரசாரமாய் வத்தல் குழம்போ, புளிக்குழம்போ வைத்தால் இரண்டு வாய் அதிகமாய்ச் சாப்பிடலாமென்று தோன்றும். ஆனால் அவளின் கணவன் சேவியருக்கு சாம்பாரைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது. தினமும் பருப்பை கடைந்து காய்போட்டு வேகவைத்து இறக்கி வைத்துவிட வேண்டும். மூன்று வேளைக்குமே சோறும் சாம்பாரும் கொடுத்தாலும் தின்றுவிட்டுக் கிடப்பான்.
“ஜெனி”
“என்னம்மா?”
“என்னடி பண்ற உள்ள?”
“ஆயி இருக்கப் போறம்மா”
“நீ ஒக்காந்திருக்கிற மாதிரி தெரியலையே. நின்னுக்கிட்டுல்ல இருக்கிற”
“சுவத்தில பெரிய பல்லி ஒண்ணு தாவுச்சிம்மா. அதான் எழுந்தன்”
“சரி ஒக்காந்து இரு”
“ம்”
‘கதவை மூடி வைத்துவிட்டுக்கூட உள்ளே நிம்மதியாய் நிற்க முடியவில்லையே ஆண்டவரே’ முணுமுணுத்துக் கொண்டாள் ஜெனிட்டா.
இந்நேரம் இந்த ஜெனிட்டா குமாரமங்கலம் சுந்தரமூர்த்தி அய்யங்கார் வீட்டு வாரிசாய்ப் பிறந்திருந்தால் இதுபோன்ற பிரச்சனையெல்லாம் அங்கேயும் ஏற்பட்டிருக்குமா என்று ஒரு கணம் நினைத்தாள் லில்லி. இதுபோல் ஒவ்வொரு சம்பவத்தையும் அந்தக் குடும்பத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்கும் பழக்கம் லில்லிக்கு எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இப்போது இது மட்டும்தான் அவளால் முடிகிறது. வேறு என்ன செய்வது? எல்லாமேதான் நடந்துமுடிந்து விட்டதே. திரண்டு வந்த கார்மேகம் மழை பெய்யாமலே கலைந்து போனதைப் போல லில்லி கண்ட கனவுகள் அனைத்தும் வீணாய் சிதைந்து போய்விட்டதே.
லில்லி படித்த அதே பள்ளியில் அதே வகுப்பில்தான் ரெட்டைத்தெரு ராமானுஜ அய்யங்கார் மகள் வனஜாவும் படித்தாள். ஏழாம் வகுப்பிலிருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம். வகுப்பில் அவளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மற்ற ஆசிரியர்கள் அவளிடம் காட்டும் அக்கறை ஆகியவற்றை பார்த்த லில்லி வனஜா பேசும் அய்யங்கார் ஆத்து பாஷையும் அவளுடைய பழக்கவழக்கங்களும் ரெண்டும் கெட்டானாய் இருந்த லில்லியைக் கவர்ந்துவிட்டன.
வனஜாவின் பாஷையை தானும் ஓரளவு பேச கற்றுக் கொண்டாள் லில்லி. போதாக்குறைக்கு கடவுளின் அருள் பெற்ற பிள்ளைகள் மட்டும் தான் அய்யங்கார் ஆத்தில் வந்து பிறப்பார்கள் என்றும் வனஜா அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தாள். இது தானொரு அய்யங்கார் வீட்டு பெண்ணாய்ப் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை லில்லியின் மனதில் ஏற்படச் செய்திருந்தது. வனஜாவைப் போலவே நடந்துகொள்ள ஆசைப்பட்டாள். மீன், முட்டை, கறி இவற்றை ஒதுக்கியதோடு அவற்றைக் கண்டால் குமட்டவும் செய்தாள். இவைகளை விரும்பிச் சாப்பிடும் தன் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் ஒருவிதமான அசூயையுடன் பார்த்தாள் தான் ஒரு மதம் மாறிய கிருத்துவப் பெண் என்ற அடையாளத்தை சிரமப்பட்டு மறைக்க முயற்சித்தாள்.
ஆசிரியர் பயிற்சி படிக்க லில்லி வனஜாவைப் பிரிந்து கடலூர் சென்றுவிட்ட போதும் வனஜாவை மட்டுமே அவள் உற்ற தோழியாய் நினைத்தாள்.
கடவுளின் அருள்பெற்ற வனஜாவை ஒருநாள் தற்செயலாய் சினிமாக்கொட்டகை வாசலில் பார்த்தாள் லில்லி. அவள் வேறொரு ஆணுடன் தோள்கள் உரச உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தாள். லில்லி அதைப்பார்த்து அதிர்ந்துதான் போனாள்.
“என்ன வனஜா நீ இவன்கூட வந்திருக்கிற?”
“ஏய் அவன் இவன்னு ஏக வசனத்துல பேசாதடி. காதுல விழுந்துடப்போறது. அவரு இப்ப தாலுக்கா ஆபீஸ்ல நல்ல வேலயில இருக்கார் தெரியுமோ. மாதம் பதினெட்டாயிரம் சம்பளம் வாங்குறாராக்கும்”
“வாங்கட்டுமே அதுக்காக நீ ஏண்டி அவன்கூட வரணும்?”
“என்ன இது கேள்வி. சும்மா பொழுதுபோகாமயா நான் சுத்தறேன். நாங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறம்.”
“வீட்டுக்குத் தெரியுமா?”
“ஒனக்குத் தெரியாதா? எங்கக்கா கூட இப்படித்தான் வேற ஜாதிக்காரன விரும்பி வீட்டுக்குத் தெரியாமே கல்யாணம் பண்ணிண்டா. இப்ப திருக்கோவிலூருல ஜம்முன்னு வாழறா”
“அதிருக்கட்டும் ஒங்க வீட்டுல இதுக்கு ஒத்துக்குவாங்களாடி?”
“திரும்பத்திரும்ப என்ன இது கேள்வி. யாரு ஒத்துக்கணுங்கிற? நான் இவர்கூடத்தான் வாழப்போறன். இவர் ஒத்துண்டா போறாதா?” என்றவள்
“கல்யாணத்துக்குப் பிறகு சொல்றன். ஒருநாள் எங்க ஆத்துக்கு வந்துட்டுப் போ” என்றவாறே அவனுடன் வண்டியில் ஏறிப்போய்விட்டாள்.
குடும்ப மானத்தையும் கௌரவத்தையும் கட்டிக் காக்க வேண்டிய பெண் இப்படி பொறுப்பில்லாமல் போகிறாளே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாள் லில்லி.
படிப்பு முடிந்த ஓராண்டுக்குள் லில்லிக்கு திருவண்ணாமலைப் பக்கம் வேலையும் கிடைத்தது. மேற்கொண்டு அஞ்சல் வழியில் படிக்க விண்ணப்பித்திருந்தாள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இளங்கலை கணிதம் எடுத்துப் படித்தாள். செமினார் வகுப்புகளுக்கு திருவண்ணாமலைக்குச் செல்வாள். வகுப்பில் வைத்துத்தான் முதன் முதலில் விக்னேஷ்வரனை சந்தித்தாள். பக்கத்து பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து வகுப்பைக் கவனித்தார்கள். அடிக்கடி இவளைப் பார்த்து புன்னகைத்தான். நெற்றிப்பட்டையும் கழுத்தை ஒட்டி தொங்கிக்கொண்டிருந்த ஒற்றை ருத்ராட்சக் கொட்டையும் பதிலுக்கு இவளையும் புன்னகைக்க வைத்தது.
இரண்டொரு நாளில் வனஜாவின் பிரிவை ஈடுசெய்வதாய் இருக்கும் இவனது நட்பு என்று நம்பினாள். நன்றாகப் பேசினான் அவன். வனஜா பேசும் அதே பாஷையில் இனிக்க இனிக்க அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத்தோன்றும் லில்லிக்கு. நாளாவட்டத்தில் அவன் உரிமையோடு அவளைத் தொட்டுத் தொட்டு பேசவும் ஆரம்பித்தான். லில்லிக்கு அப்படி அவன் நடந்துகொள்வதுகூட உள்ளுர மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது. அவனிடமிருந்து விலகிநின்று பழக வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.
தனிமையில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் தன் வீட்டிற்கு வந்த பிறகு லில்லி கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் முக்கியமான பூஜைகளின்போது சொல்ல வேண்டிய சுலோகங்கள் பற்றியும் ஒவ் வொன்றாக அவளுக்குக் கற்றுக்கொடுத்தான். மூன்றாண்டு முடிவில் கல்யாணம் பற்றி பேசும் போது தான் விக்னேஷ்வரன் வீட்டில் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது லில்லிக்கு தெரியவந்தது. இவ்வளவு ஆசைஆசையாய் பழகி கடைசியில் பிரிவதா? லில்லியால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லா கனவிலும் மண் விழுந்துவிட்டது என்று கலங்கித் தவித்தாள்.
கடைசியாய் சந்தித்தபோது விக்னேஷ்வரன் சிறியதொருபிள்ளையாரைக் கொடுத்து “லில்லி இது எங்க தாத்தாவோட அப்பா காலத்துலேருந்து எங்காத்து பூஜை அறையில் இருந்தது. இத என்னோட ஞாபகமா நீ வச்சிக்க. ஒனக்கு ஏதாவது கஷ்டம் வந்தாக்கூட இத எடுத்து கைல வச்சிக்கிட்டு நான் சொல்லிக்கொடுத்த சுலோகத்த சொல்லு. கஷ்டமெல்லாம் வெலகிடும். மனசார நான் ஒன்ன விரும்பினதுக்கு என்னால செய்ய முடிஞ்சது இது மட்டும்தான். என்ன மன்னிச்சிடு லில்லி” என்று தழுதழுத்தான் அவனின் கலங்கிய கண்களைப்பார்த்து நெகிழ்ந்து போய்விட்டாள் லில்லி. “பரவால்ல, நீங்க அழுதா, என்னால அத தாங்கிக்க முடியாது. நான் எப்பவும் ஒங்கள நெனச்சிட்டேத்தான் இருப்பேன்.” என்று பதிலுக்கு இவளும் உணர்ச்சிகளை கொட்டிவிட்டு பெருந்தன்மையோடு பிரிந்துவந்து விட்டாள்.
லில்லியால் நிம்மதியாய் இருக்கமுடியவில்லை. தன் தோழி வனஜாவிடம் பிரச்சனையை சொல்லிப் பார்க்கலாமா என்று நினைத்தாள் அவள் மூலமாக ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்குமென்ற நப்பாசையில் அவள் வீட்டுக்குப் போனாள்.
வனஜா அதற்குள் இரண்டு பிள்ளைகளை பெற்றிருந்தாள். இரண்டும் நல்ல சூட்டிகையாய் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தன. வனஜாவை ஒரு ராணியைப்போல் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் அவளுடைய கணவன்.
பேச்சை ஆரம்பித்து மெதுவாக தன் விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள் லில்லி. எல்லாவற்றையும் கேட்ட பிறகு. “எங்கிட்ட ஒரு வார்த்த இதப்பத்தி சொல்லியிருந்தா முன்கூட்டியே நான் ஒன்ன தடுத்திருப்பனே. இப்படி ஏமாந்திட்டியேடி” என்று லில்லிக்காக உண்மையாகவே வருந்தினாள் வனஜா.
“நீயெல்லாம் வேறு ஆள கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழலயா. எனக்கு மட்டும் ஏண்டி இப்படி?”
மெதுவாக இவளின் காதோரம் குனிந்து.
“எங்க மனுஷாள் தம் வீட்டு பொண்ணுங்க எந்த கீழ்சாதி பையன விரும்பினாலும் கல்யாணம் பண்ணிண்டு தொலையட்டுமுன்னு விட்டுடுவாங்க. ஆனா ஆண்பிள்ளைகள மட்டும் அப்படி ஒருநாளும் விடவே மாட்டாங்க. குலம் கோத்திரம், பதினாறு பொருத்தம் எல்லாம் பாத்துதான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. எங்க பையனுங்க வேற பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சி நீ எங்கயாவது பாத்திருக்கிறியா சொல்லு”
மௌனமாய் உட்கார்ந்திருந்தாள் லில்லி.
“வேத்தாள ஆத்துக்குள்ளயே சேக்கமாட்டாங்க. அதுவும் மாட்டுப்பொண்ணா சேக்கணுமுன்னா முடியுமா சொல்லு”
தன்னை விக்னேஷ்வரன் ஏன் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதற்கான காரணம்கூட லில்லிக்கு நியாயமாக தெரிந்தது. வேறுவழியில்லை என்று நினைத்து தன் மனதை தேற்றிக் கொண்டாள்.
பிறகு வீட்டில் ஏற்பாடு செய்த சேவியருடன் மோதிரம் மாற்றிக்கொண்டு அவனுக்கு மனைவியான போதும் விக்னேஷ்வரன் கொடுத்த பிள்ளையாரை மட்டும் மறக்காமல் தன்னுடனே வைத்துக் கொண்டாள். மரப்பிள்ளையாரும் சுலோகமும் அவளுக்கு அவ்வப்போது கைகொடுத்து உதவியதாகவும் நம்பினாள்.
தன் மகள் ஜெனிட்டாவின் கையில் அந்த பிள்ளையாரைக்கொடுத்து சுலோகத்தை சொல்லச்செய்யலாமா என்று அடிக்கடி தோன்றும். அவள் தன் அப்பாவிடம் சொல்லி ஏதாவது புதுப்பிரச்சினை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இது நாள் வரை அப்படி செய்யாதிருந்தாள். ஆனால் இனிமேலும் யோசிக்கக்கூடாது. இன்றைக்கு அதை செய்துவிட வேண்டும். ஜெனிட்டாவே கூட இது என்ன ஏதென்று ஆயிரம் கேள்விகளைக் கேட்கலாம். கேட்கட்டும். கேள்விக்கு பதில் சொல்வது முக்கியமில்லை. நமக்கு காரியம் நடந்தாக வேண்டும். அதுதான் முக்கியம் என்று நினைத்தவள்.
“ஜெனி” என்றாள் கழிப்பறையைப் பார்த்து.
“ம்”
“என்ன ஆச்சா?”
“இன்னும் இல்லம்மா.”
“இரு வர்றன்.” என்றவள் அலமாரியில் மறைத்து வைத்திருக்கும் பிள்ளையாரை எடுத்துவரப் போனாள். அதே நேரம் “லில்லி தயிர் வேணுமா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் சேவியர்
“ரெண்டு ரூபாய்க்கு வாங்குங்க” என்றவள் ‘போச்சி இவன் வந்துட்டான். இன்னக்கும் முடியாது’ என்று தனக்குள்ளே அலுத்துக்கொண்டாள்.
“மணி எட்டு ஆயிடுத்துடி ஜெனி... இனிமே எப்ப குளிக்கிறது எப்ப சாப்பிடுறது. தலவேற கட்டணும்.” சத்தம் போட்டாள்.
“நான் குளிக்கிறம்மா”
“இன்னொரு தடவ ஒக்காந்து பாரு ஜெனி”
“....”
“கிருமிகள் ரெத்தத்துல கலந்துரும் ஜெனி.”
“முடியலம்மா வலிக்குது.”
“ஒக்காந்து ட்ரை பண்ணி பாரு ஜெனி”
கழிப்பறைக்குள்ளிருந்து அழும்குரல் கேட்டது.
“என்ன ஜெனி அழுவுறியா?”
இன்னும் சற்று உரக்க தேம்பினாள் அவள்.
“கதவ தொற ஜெனி. இப்ப எதுக்கு அழுவுற?”
ஜெனிதா கதவைத் திறந்து பேப்பரைக் காட்டிவிட்டு மேலும் சத்தமாய் அழுதாள். பேப்பரில் இரண்டு மூன்று சொட்டு ரெத்தம் மட்டும் இருந்தது.
“எப்பவும்தான் ரெத்தம் வரும். அதோட டாய்லெட்டும் வந்துரும். இன்னக்கி ரெத்தம் மட்டும் வந்துருக்கு. உள்ள இழுத்துக்கிட்டியாடி. இறுக்கி இறுக்கிவச்சி என்னடி பண்ணப்போற. அய்யோ கடவுளே... ஆண்டவரே... என்னால தாங்க முடியலயே...” தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள் லில்லி.
இவற்றையெல்லாம் கவனித்தபடியே தயிரை வாங்கிவந்து வைத்த சேவியர் “லில்லி அவள விடு. நீ பள்ளிக்கொடம் கௌம்புற வேலயப்பாரு” என்றான்.
திரும்பி இவனைப் பார்த்தாள்.
“நானும் ஜெனியும் ஊருக்குப் போறம். நம்ம கொல்லயில இன்னக்கி அறுப்பு அறுக்குதாம். எங்கப்பா வரச்சொல்லி பேசுனாங்க”
“பள்ளிக்கொடம்?”
“நான் ஒரு வாரத்துக்கு மெடிக்கல் லீவு வரும்போதே பாபு வாத்தியார்கிட்ட குடுத்துட்டு வந்துட்டன்.”
“அப்ப ஜெனி?”
“அவளுக்கும் ஒரு வாரம் லீவு சொல்லிட வேண்டியது தான்.”
“என்னங்க இப்புடி திடீருன்னு?”
அதான் சொன்னேன்ல. அறுப்பு அறுக்குதாம். அண்ணங்க யாரும் வீட்டுக்கு வரலயாம். எங்கப்பா பாவம். வயசானவங்க அவங்க. என்ன செய்வாங்க. இந்த முறை நான்தான் போகணும்.”
“ஜெனி எதுக்கு?”
“நான் மட்டுந்தான் போவமுன்னு நெனச்சன். இப்பத்தான் இவளயும் கூட்டிப் போகலாமுன்னு தோணுச்சி. பாவம் தெனமுந்தான் °கூல் போறா. ஒரு வாரம் ஊருல வந்து இருக்கட்டுமே. பக்கத்துவீட்டு புள்ளங்ககூட விளையாடிட்டு வரட்டும். கிராமத்து அனுபவமும் அவளுக்கு கெடச்ச மாதிரி இருக்கும்”
“அப்ப நான் மட்டும் தனியா இருக்கணுமா?”
“நீயும் வேணுன்னாலும் லீவு போட்டுட்டு வாயேன்”
“அதெல்லாம் முடியாது. எங்க ஸ்கூல்ல ஏற்கனவே ரெண்டு பேரு மெடிக்கல் லீவுல இருக்காங்க”
“அப்பன்னா சனிக்கெழம வா. நாங்க இப்ப போறம்.”
“ஜெனி இப்படி இருக்காளே”
“அவள நான் பாத்துக்கிர்றன்.”
“அவ வயிறு ரெண்டுநாளா ரொம்ப சிக்கலாருக்குங்க.”
“நான் பாத்துக்கிர்றன்.”
“ஒங்கக்கிட்ட கூச்சப்படுவாங்க.”
“அத விடு. எங்கம்மா இருக்காங்கல்ல. அவங்க பாத்துப்பாங்க. இப்ப அவள யாங்கூட கிளப்பி விடு.”
“போற வழியில நெல்லை விநாயகா ஸ்வீட் ஸ்டால்ல கொஞ்சம் தின்பண்டம் வாங்கிக்கிட்டு போங்க.”
“ஊருல இல்லாத தின்பண்டமா?”
“ஒரு வாரம். ஒண்ணுமில்லாட்டி ஏங்கிப் போயிடுவாங்க.”
“எனக்குத் தெரியாதா, கொல்லய சுத்தி சோளம் வெளஞ்சிநிக்கிது. களத்துமேட்டுல ஒருபக்கம் பயத்தங்கா. இன்னொரு பக்கம் தொவரை. கேப்ப கருதும் கம்மங்கருதும் வாட்டிக்குடுப்பாங்க எங்கம்மா. அந்த வாசனயே அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்பா. நீ வேணுன்னா அவளக் கேட்டுப் பாரேன்.”
“ஆமாம்மா அனிதா மேரியக்கா நிச்சயதார்த்தத்துக்குப் போனப்ப எனக்கு ஆயா வாட்டிக் கசக்கிக் குடுத்தாங்கம்மா. ஆனா என்னாலதான் நெறயா திங்க முடியல. அப்பா கூட்டிட்டு வந்துட்டாரு.”
“சரி சரி போதும் போ”
அழைத்துக் கொண்டு போயே விட்டான்.
ஒரு வாரத்திற்கு ஜெனிட்டாவோடு மல்லுக்கட்ட வேண்டியதில்லை என்று சற்று நிம்மதியாய் இருந்த போதும் ஜெனிட்டாவைப் பற்றி கவலையாகவே இருந்தது. ‘கிராமத்தில் போய் தினமும் எப்படி வெளிக்குப் போவாளோ யாரும் பார்க்காமல் இஷ்டப்படி முக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்க பாத்ரூம் வசதிகூட இல்லையே’ இதுவரை ஒவ்வொன்றையும் மகளுக்கு பார்த்துப் பார்த்து தன் கையாலேயே செய்து பழக்கப்பட்டுவிட்டாள் லில்லி. ஜெனிட்டா இல்லாதது வெறுமையாய் இருந்தது. ஊரில் வைத்தே அவளுக்கு இந்தமுறை பிள்ளையார் வைத்தியத்தை செய்துபார்த்துவிடுவது என்று திட்டமிட்டுக் கொண்டாள். சனிக்கிழமை எப்போதும் வரும் என்று காத்திருந்தாள்.
சனிக்கிழமை விடிந்ததும் விடியாததுமாக கிளம்பி விட்டாள். ஊருக்கு வரும் முதல் பேருந்தில் வந்திறங்கி லில்லியை சேவியர் எதிர்கொண்டு அழைத்துப் போனான். வீட்டிற்கு போவதற்குள் ஜெனிட்டாவைப் பற்றி ஆயிரம் விசாரிப்புகள்.
அம்மா வரும் என்று ஜெனிட்டாவுக்கு தெரியும். இருந்தபோதும் எப்போது வருவாள் என்று அதைப் பற்றி அவள் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை. லில்லி வீட்டிற்கு சென்ற நேரத்தில் அவள் வீட்டிலும் இல்லை.
“ஜெனி எங்க அவளக்கூப்பிடுங்க.”
“நீ காப்பி குடிச்சிட்டு வா. நம்ம களத்துமேட்டுக்குப் போவம். ஜெனி அங்கதான் போயிருப்பா.” இருவரும் களத்துமேட்டிற்குப் போனார்கள். லில்லி தன் முந்தானை மறைப்பிற்குள் பிள்ளையாரை எடுத்து வைத்துக்கொண்டு வந்திருந்தாள்.
நெல் பட்டறைகளைக் காட்டி “இந்த வருசம் நல்ல விளைச்சல்” என்றான் சேவியர்.
“அதிருக்கட்டும் ஜெனி எங்கங்க?”
பழைய புதர்மண்டிய திட்டை நோக்கி கையைக் காட்டினான். புதர்களின் மறைவில் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் ஊசியா? உலக்கையா? நூலா? கேட்டுக் கொண்டு தூரமாகவும் பக்கம் பக்கமாகவும் பாவாடையை மழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். முந்தைய இரவில் அவர்களின் பாட்டி சொன்ன ஆறுமரக்கால் பல்லுக்காரன் பிடித்துக் சென்று அடைத்துவைத்துள்ள பிள்ளைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்படியெல்லாம் அந்த பல்லுக்காரனிடமிருந்து தப்பித்து வரலாம் என்று தீவிரமாய் யோசித்து ஆளுக்கு ஒரு யோசனையாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
லில்லி தன் மகள் ஜெனிட்டாவின் குரல் வரும் திசையில் பின்பக்கமாய் சென்று அவர்கள் யாரும் அறியாதவாறு மறைந்து நின்று கொண்டாள். குனிந்து ஜெனிட்டா உட்கார்ந்திருக்கும் இடத்தை உற்று பார்த்தாள்.
ரெத்தம் சிந்தாமல் வலிய வேதனை எதுவுமில்லாமல் அதுபற்றிய உணர்வுகூட இல்லாமல் வெகு அனாயசமாய் புதர் மறைவில் ஜெனிட்டா உருவாக்கியிருந்தாள் பொன்னிறத்தில் மின்னும் அதை. அது தன் முந்தானைக்குள் மறைத்து எடுத்து வந்திருக்கும் பிள்ளையாரைப் போன்று உருவத்தில் அப்படியே ஒத்திருந்தது. இதழ்கடையில் சிறு புன்னகை நெளிய இது இனிமேல் தேவையில்லை என்று நினைத்தவள் கையிலிருந்ததை நழுவவிட்டாள். கணவன் நிற்குமிடம் நோக்கி நடந்தாள். தூரத்தில் மாதாகோவில் மணி ஒலித்துக்கொண்டிருந்தது.


செய்திகள் - குறிப்புகள் - கருத்துகள்:-மு.சிவகுருநாதன்


பாமரனின் பாசிசக்குரல்

லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறையினர் நடத்திய ‘கனாக்காலம் - 2007’ என்ற கருத்தரங்கில் ‘சினிமாவும் சமூகமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்த கவிஞர் லீனா மணிமேகலை ‘துப்பட்டா’அணியாததால் கல்லூரிவாசல் வரை சென்று திரும்பினார். அந்த கருத்தரங்கில் பாலு மகேந்திரா, அஜயன்பாலா, ஞாநி, பாமரன் போன்றோர் கலந்து கொண்டனர். இது பற்றி கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை ‘இந்த இடம் எங்களுக்கு கோயில் போன்றது’ என்று கூறுகிறார். அவருடைய பார்வையில் அது சரியானதுதான். ஆனால், அந்த விழாவில் கலந்து கொண்ட பாமரன் பண்பாடு, நம்பிக்கைகள் பற்றி நிறைய பிதற்றியிருக்கிறார் (குமுதம் ரிப்போர்ட்டர் - 27.12.2007).

பெரியார் வள்ளலாரையும், சங்காரச்சாரியையும் பாமரனைப்போல ஒன்றாகப் பார்க்கவில்லை; வேறுபடுத்தித்தான் பார்த்தார். விநாயகர் சிலை உடைத்தல், ராமர் படத்தை செருப்பால் அடித்தல் போன்ற எதிர்க் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெரியாரை பாமரன் பண்பாட்டின் பெயரால் கொச்சைப்படுத்துகிறார். “இந்துக்கள் தவிர பிற மதத்தினர் உள்ளே வரக் கூடாது. ஆண்கள் மேலாடையுடன் வரக் கூடாது, பெண்களே வரக்கூடாது” என்றெல்லாம் விதிகள் உள்ளது செருப்பைக் கழற்றிப் போட வேண்டும் என்பதைப் போல. மேலும் ‘தலித்கள், சூத்திரர்கள் கோவிலுக்கு நுழையக்கூடாது, அர்ச்சகர் ஆகக் கூடாது, தேர் இழுக்கக் கூடாது, டீக்கடையில் தனி கிளாஸில்தான் டீ குடிக்க வேண்டும்... என்றெல்லாம் விதிகள் உள்ளன. பண்பாடு கருதி பாமரன்கள் இவற்றைக் கடைபிடிக்கட்டும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை.

“சண்டைக்கோழி” வசனப் பிரச்சினையில் போராட்டம் செய்தவர்கள் ‘சிவாஜி’ ‘அங்கவை, சங்கவை’ பிரச்சினையில் எங்கே போனார்கள்? “என்றெல்லாம் ‘சோ’வைப்போல மிகவும் அறிவுப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல் நாமும் கேள்வி எழுப்பலாம். எல்லாவற்றிற்கும் முன் நிபந்தனைகள் விதிக்கும் பாமரன் போன்றவர்கள் எதற்கு குரல் கொடுத்தார்கள் - கொடுக்கவில்லை என்று விரிவாக எழுத இங்கு இடமில்லை.

தமிழ் சினிமா சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள், அரவாணிகள், மாற்றுத்திறனுடையோர் போன்றோரை ஒவ்வொரு படங்களிலும் இழிவான முறையில் சித்தரித்து வருகிறது. தொடக்க கால கருப்பு-வெள்ளைப் படங்களிலிருந்து பாமரன் போன்றவர்கள் போற்றும் பருத்திவீரன், கற்றது தமிழ் போன்ற படங்கள் வரை இந்நிலைதான். அதைப்பற்றியெல்லாம் பாமரன் உள்பட பலர் தட்டிக் கேட்டதில்லை. ‘சிவாஜி’ படத்தில் ‘அங்கவை-சங்கவை’ கதாபாத்திரங்கள் மூலம் இவர்கள் கருமைநிறமுடைய பெண்களை கொச்சைப்படுத்தப்பட்டதற்காக கொதிக்கவில்லை.

பதிலாக தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க்குடிப்பெருமை மீதான தாக்குதல் என்று தாங்கமுடியவில்லை இவர்களால். அங்கவை-சங்கவைக்குப் பதிலாக குட்டி ரேவதி, லீனா மணிமேகலை என்று பெயர் வைத்திருந்தால் பாமரன்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் ரஜினி, சுஜாதா, சங்கர், மன்னிக்கவும் ஷங்கர், சாலமன் பாப்பையா போன்ற வியாபாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள். பாமரன் போன்றவர்கள் எழுதியும், பேசியும் வருபவை மாற்றுச் சிந்தனைகள் என்ற போர்வையில் கலாச்சார போலீஸ்களின் பாசிசக் குரலையே.

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி பற்றி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். முத்துகுமரன் குழுவின் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டு விட்டது. “மக்கள் விரும்பினால் சமச்சீர் கல்விமுறை வரும்” என்றார் திருச்சியில் பேசிய குழுவின் தலைவர் முத்துக்குமரன். மக்களின் விருப்பத்தை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை.

அரசு மெட்ரிக் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் மதிப்பெண் பட்டியலில் 1100க்குப் பதிலாக 500க்கு அளிக்கப்படும் என்ற ‘புரட்சி’கரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி வெறும் மதிப்பெண் பட்டியலுடன் நின்று விடும் அபாயம் இருக்கிறது.

10-ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்க, ஆதரவாக வந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைய ஏதுமில்லை. மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்பாடம் சுமையாக இருப்பதாகச் சொல்லி குறைக்க வைக்கிறார்கள். (தமிழ் என்று ‘இந்துத்துவா’ தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம் என்பது வேறு விஷயம்.) நாம் இதரப் பாடங்களில் சுமை குறைக்கப்பட வேண்டும் என்கிறோம். அரசு மதிப்பெண் சுமையைக் குறைத்து 1100ஐ 500க்கு மாற்றித்தர சித்தமாக உள்ளது. இதேபோன்று இனி மெட்ரிக் மற்றும் அரசுப்பள்ளிகளில் ஒரே வண்ணச் சீருடை, ஒரே நேரத்தில் தேர்வு, பெயரில் உள்ள மெட்ரிக் என்ற வார்த்தை நீக்கம் போன்ற ‘அதிரடி’ திட்டங்களையும் செயல்படுத்தலாம்.

சர்வ சிக்ஷ அபியான் (SSA) திட்டத்தில் எந்த அளவிற்கு முன்னேற்றம் என்பது அதன் மூலம் பலனடைந்தவர்களுக்கே வெளிச்சம். இன்னமும் சேர்க்கை விண்ணப்பத்தில் “பெரியம்மை தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளதா?”, என்று கேட்பதைப் போல “பள்ளியில் சேர்க்கப்படவேண்டிய பள்ளி வயதுக் குழந்தைகள் சேர்க்கப்படாமல் இல்லை” என்று கண்ணைமூடிக் கொண்டு எழுதி வைத்திருக்கிறார்கள் கல்வி அலுவலகங்களில். SSA திட்டத்தைப் பற்றி உணர்ச்சி மேலிட, பக்திப்பெருக்கோடு எம்.எல்.ஏ. ரவிக்குமார் காலச்சுவடு பிப்ரவரி 2008 இதழில் ‘விஜயகுமார் சார், உங்களை வணங்குகிறேன்!’ (கமல் சார், ரஜினிசார் என்பது போல) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஆந்திரமாநிலம் ரிஷி வாலியிலிருந்து கொண்டு வரப்பட்ட செயல்வழிக் கற்றல் (ABL) அம்மாநிலத்திலேயே நடைமுறையில் இல்லை. இதில் ஈடுபடும் அதிகாரிகள், ஆசிரியர்கள் வீட்டுக் குழந்தைகள் இப் பள்ளிகளில் படிப்பதும் இல்லை. அரசு சிறப்பானது என்று சொல்கிற திட்டத்தை ஏன் ஆங்கிலப் பள்ளிகளில் அமல்படுத்தவில்லை? என்பது போன்ற பல்வேறு வினாக்கள் எழுப்பப்படுகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்திருந்தால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது, அரசு நடத்தும் சமத்துவ விழாக்கள் மற்றும் அடிக்கடி எடுக்கப்படும் ‘ஒழிப்பு’ உறுதிமொழிகளைப் போல. எண்ணங் களிலும் செயல்பாட்டிலும் தோழமை உணர்வு வரவேண்டும். மேலும் திட்ட இயக்குநர் விஜயகுமாரை ‘தமிழ்நாட்டு பாவ்லோ ஃபிரேயர்’ ஆக மிகைப்படுத்தி கற்பனை செய்ய வேண்டியதில்லை.

தொடர்ந்து ரவிக்குமார், “தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்து அத்வானி அழுததாக ஒரு செய்தியைப் படித்தேன். அத்வானி மட்டுமல்ல, நரேந்திர மோடி கூட அழுது விடுவார்” என்றும் எழுகிறார். தமிழ்நாட்டில் மோடி ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது போலிருக்கிறது. அந்த இருவருக்கும் ‘பர்ஸானியா’ படத்தைப் போட்டுக் காட்ட ரவிக்குமார் ஏற்பாடு செய்யலாம். பாவம், அழுதவர்களை கொஞ்சமாவது மகிழ்ச்சிப்படுத்தலாம் அல்லவா?

சமத்துவமில்லாத பொங்கல்

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் கொண்டாட உத்தரவு வருகிறது. கிராமங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் மிகவும் கவனமாக தனித்தனி பானைகளில் பொங்கலிட்டு டி.வி.களில் பேட்டியும் கொடுக்கிறார்கள். எல்லா சாதியினரும் அவரவர் வீட்டு அரிசியை ஒன்றாகப் பொங்கி சாப்பிடுவார்களா? தலித் வீட்டு பொங்கலை பிற சாதியினர் ஏற்றுக் கொள்வார்களா? மத நீக்கம் செய்யப்பட்ட பண்டிகைகள் சாத்தியமா? என்று தெரியவில்லை. இங்கு பொங்கல் உள்பட அனைத்துப் பண்டிகைகளும் மத அடையாளங்களுடன் தான் நிகழ்த்தப்படுகிறது. வீடுகளில் நடைபெறும் இந்நிகழ்வு களை அரசுக் கொண்டாட்டமாக மாற்றத் தேவையில்லை.

இதே போல் கல்வியில் மத நீக்கம் நடைபெறவேயில்லை. மொழிப் பாடங்கள் மற்றும் வரலாற்றில் (அறிவியலையும் சேர்த்து) மதக் கூறுகள் ஆழப்படிந்த இந்துத்துவா, தமிழையும், வரலாற்றையும் குழந்தை களிடம் சொல்லிக் கொடுத்து வருகிறோம். சர°வதி படம், சரஸ்வதி பூஜை (கலைமகள் ஆராதனை விழாவாம்) கொண்டாடாத பள்ளிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டம் தொடங்கி, அனைத்து விழாக் களும் மத அடையாளத்துடன் தான் நடத்தப் படுகின்றன. மதம்/சாதி நீக்கம் சாத்தியப்படாத வரையில் சமத்துவத்திற்கு வாய்ப்பில்லை.

நரேந்திர மோடியை வாழ்த்தும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

குஜராத் 2002-ல் இனப்படுகொலை நடத்தி, குஜராத்தில் கோர வெறித்தாண்டவமாடிய ‘மரண வியாபாரி’ நரேந்திரமோடி நமது போலியான ஜனநாயக அமைப்பைப் பயன்படுத்தி மீண்டும் முதல்வராயிருக்கிறார். வாழ்த்து சொல்லும் சம்பிர தாயம் முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுமானால் தேவைப்பட்டிருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவருக்கு என்ன அவசியம் வந்தது?

மேலும் மோடி மதவெறியுடன் கூடவே, ‘கர்மயோக்’ என்ற குஜராத் அரசு செலவில் வெளியிடப்பட்ட நூலில், “மலமள்ளுவது புனிதமான பணி அதைச் செய்பவர்கள் ‘யோக நிலை’ அடைவார்கள் என்றும் எழுதி தலித்துகளை கேவலப்படுத்தியுள்ளார். தமக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று நினைக்கிறாரா? கிருஷ்ணசாமி. இந்நிலையில்தான் தலித் ஒற்றுமை அவசியமாக இருக்கிறது.

“பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நீங்கள் ஈட்டிய வெற்றி ஈடு இணையற்றது. நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள். சி.எம். என்றால் காமன் மேன் என அளித்த விளக்கம் அற்புதம். வருங்காலத்திலும் சாமானியர்களின் முதல்வராகத் திகழ்ந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்க வேண்டும். உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைக் காட்டிலும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களே உங்களுக்குப் பெரிதும் கை கொடுத்துள்ளன. அந்தத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது பகுதிக்கு என்ற பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கும் சமமாக அமைய வேண்டும். காலம் காலமாக சமுதாய ரீதியாக ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தனி கரிசனமும் கவனமும் செலுத்த வேண்டும்.” தினமணி (திருச்சி), 27 டிசம்பர், 2007.

பல்லாயிரம் முஸ்லீம்களை கொன்று குவித்தும் லட்சக்கணக்கில் மக்களை அகதிகளாக்கியும் கிடைத்த வெற்றி ஈடு இணையற்றதுதான். இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காக குஜராத் ‘மாதிரி’யை ஒரிசா போன்ற பிற மாநிலங்களுக்கும் செயல்படுத்தத் துவங்கியுள்ளது சங் பரிவார் கும்பல். குஜராத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை காவிமயப்படுத்துவது மோடிக்கு அவர்கள் மீதுள்ள கரிசனம் இன்றி வேறென்ன? ரஜினியின் உண்ணாவிரதத்திற்கு சென்று அருகே அமர்ந்து கொண்டது போல மதுரையில் நடத்தும் ‘சமநீதி சமூக மாநாட்டிற்கும்’ மோடியை அழைத்து கவுரப்படுத்தியிருக்கலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் மோடியின் ‘கர்மயோக்’ நூலுக்கு எதிர்ப்பு அறிக்கை (30.11.2007) வெளியிடப்பட்டது. மேலும் நரேந்திர மோடியின் தமிழக வருகையை எதிர்த்து பாசிச எதிர்ப்பு முன்னணி (AFF) ஜனவரி 14, 2008-ல் நடத்திய கருப்புக் கொடி முற்றுகைப் போராட்டத்தில் இணைந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அடித்தள மக்களுக்கு எதிரான போராட்ட வடிவங்கள்

பிறரை வருத்தாமல் தன்னையே வருத்திக் கொள்ளும் உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களையே காந்தி விரும்பினார். எதிர்க்கலாச் சாரவாதியான பெரியாருக்கு உண்ணாவிரதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இன்று நடக்கின்ற போராட்டங்கள் அடித்தள மக்களின் வாழ்வை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது. மண்டல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது ‘ஷூக்களுக்கு பாலிஷ் போடும் போராட்டம் நடைபெற்றது. தமிழக மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் தெருக் கூட்டுதல், எருமை, கழுதைகள் மேய்த்தல்... இன்னபிற கலக(!?) போராட்ட வடிவங்கள் அரங்கேறின. இவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசாத, எழுதாத அரசியல் தலைவர்களோ, பத்திரிக்கைகளோ இல்லை (பா.ம.க. தவிர). அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இல்லாவிட்டால் அவர்களும் இதில் இணைந்திருப்பார்கள்.

ஒரு இதழ் இவர்களின் போராட்ட வடிவங்களை பாராட்டி தனிக் கட்டுரையே வெளியிட்டது. இந்த மாதிரியான போராட்டங்கள் நடத்துவோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? (வன்கொடுமைச் சட்டம் நீதிமன்றத்தில் என்ன பாடுபடுகிறது என்பது ராஜேஷ் சுக்லாவின் கட்டுரையில் தெரிகிறது). வைக்கோலையும் குப்பைக் கூளங்களையும் போட்டு கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்தும்போது அதை அணைக்க காவல்துறை படும்பாட்டை தொலைக்காட்சிகளில் அடிக்கடி காணமுடிகிறது. சிலசமயம் படுகாயம் கூட ஏற்படுகிறது. ஆனால் மேற்கண்ட போராட்டங்களின் மீது காவல்துறையோ, பொதுமக்களோ எவ்வித வருத்தமும் அடைவதில்லை போராட்டக் காரர்கள் இனிவரும் காலங்களில் மலமள்ளும் போராட்டம், சாக்கடையை சுத்தம் செய்யும் போராட்டம் போன்றவற்றையும் நடத்தலாம். அரசும் இவர்களது சேவயைப் பயன்படுத்திக்கொண்டு கஷ்டப்படும் தொழிலாளிக்கு ஒரு நாளாவது ஓய்வு அளிக்கலாம்.

குமுதமும் ஞாநியும்

ஞாநி முன்பு வெளியிட்ட “தீம்தரிகிட” இதழ் ஒவ்வொன்றிலும் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். “தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமையுடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம். படைப்பாளியின் உரிமையை தன் உரிமையாக அறிவித்து வரும் குமுதம் குழும இதழ்களைத் தவிர.” இதைப் படித்ததும் எழுத்துரிமைப் போராளி பிம்பம் வந்து தொலைக்கிறது. தற்போது குமுதத்தில் ஞாநியின் ‘ஓ... பக்கங்கள்’ பெருத்த விளம்பரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. குமுதம் தன்னுடைய வாசகங்களை மாற்றிக் கொண்டதாக யாரும் நினைக்க வேண்டாம்; அப்படியேதான் இருக்கிறது. மேலே உள்ள ஞாநியின் வாசகங்களைப் பார்க்கும் போது ஒன்று சொல்ல தோன்றுகிறது. “கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”. (நன்றி-குமுதம்). இதற்கு பதில் ஞாநியிடம் இருக்கிறதோ இல்லையோ காலச்சுவடு கண்ணனிடம் கண்டிப்பாக இருக்கும்.
ஒரு தாதா கவிதை செய்வது எப்படி?

ஒரு தாதா கவிதை செய்வது எப்படி?

ஆங்கிலம் வழி தமிழில்: கண்ணன். எம்


தேவைப்படும் பொருட்கள்:

ஒரு செய்தித்தாள், ஏதோவொரு கத்திரிக்கோல்.

நீங்கள் செய்ய நினைக்கும் கவிதையின் நீளம் கொண்ட ஒரு கட்டுரையை, செய்தியை செய்தித் தாளிலிருந்து வெட்டி எடுங்கள். வெட்டி எடுக்கப்பட்ட கட்டுரையின், செய்தியின் வார்த்தைகளை ஒவ்வொன்றாக, மிக கவனமாக வெட்டி எடுங்கள். வெட்டி எடுத்த வார்த்தைகள் அனைத்தையும் ஒரு பையில் இட்டு குலுக்குங்கள். குலுக்கிய பின் பையின் உள்ளிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக வெளியே எடுங்கள். அவற்றை மிகுந்த கவனத்துடன் பையிலிருந்து எடுத்த அதே வரிசையில் ஒரு தாளில் பிரதியெடுங்கள்.

இப்போது உங்கள் முன் உங்களைப்போலவே உங்கள் கவிதை.

அதன் முன் சுயம் ததும்பும்
படைப்பாளியாக நீங்கள்.

வக்கிரம் நிறைந்த மந்தைக்கு இதை
ரசிக்கத் தெரியாது.

- டிரிஸ்டன் ஸாரா

(Tristan Tzara (1986 - 1963)


நான் திரும்பச் சொல்கிறேன்:
அனைத்தையும் விட்டு விடுங்கள்.
‘தாதா’ வை விட்டுவிடுங்கள்
மனைவியை விட்டு விடுங்கள்; காதலியையும் கூட,
உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் விட்டுவிடுங்கள்
உங்கள் குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு விடுங்கள்
உங்களுடைய நிழலிருந்து விடுபடுங்கள்
தேவைப்பட்டால், உங்களுடைய சுகமான
வாழ்க்கையையும் ஒளிமயமான வாழ்க்கையையும் விட்டுவிடுங்கள்
நெடுஞ்சாலையில் நில்லுங்கள்

- ஆந்த்ரே ப்ரத்தோன்
(Andre Breton (1986-1966)

ஆங்கிலம் வழி தமிழில்: கண்ணன்.