ஞாயிறு, 21 நவம்பர், 2010

இருத்தல் நிமித்தங்கள்... :-பு.க.சாலினி

வெளிறிய வானில் வெண்மேகத் திட்டுகள்
களிபாளம் விட்ட மனதில் படரும் சஞ்சலப் படிவுகள்
மனித முகங்களின் மனப்போக்குவரத்தில்
மறைந்து சிதையும் தீற்றல் புள்ளிகள்
மின்னல் வேலியில் சருகுகள்
விள்ளல் முகம் நோக்கிய உறவுகள்
உன்மத்த உலகினையும் ஊழல் உப்பரிகைகளையும்
சிறை கொண்டன கேந்திரங்கள்.
அன்பின் வறுமை தெளிவின் வெறுமை
அன்றாடப் பூபாளம் நாட்காட்டியுடன்
மன்றாடும் நீலாம்பரி விழித்துளிகள்
மனிதச் சக்கைகளின் அகங்களில்
சரள சம்பிரதாயச் சரடுகள்
மரத் தக்கைகளுடன் சுவர்களில் புரளும் இதயச் சுவடுகள்
கண்களின் எதிர்பார்ப்பு விரிசல்கள்
கனவுக் கண்ணாடிஉடைசல்கள்.
கவலை எச்சக் கிழிசல்கள் கவியான ஆசைப் பிழியல்கள்
ஏகாந்தத்துடன் தனிமை உறவாடல்
எதிர்க்காற்றில் கருத்துக் களவாடல்
ஏசும் கண்களின் கடமை மீறல்
எக்களிக்கும் உயர்வின் உரிமை கோரல்
பட்ட மரத்தின் கிளை நுணுக்கங்களாய்
விட்டுத் தெறிக்கும் உணர்வுத் துணுக்குகள்
அத்தனைக்கும் மொத்தமாய்
தென்றலும் தேம்பியவாறு உறையும் மன இடுக்குகளில்
ஒளிப்பிழம்படிக்கும் நேரங்களில் நேசம் வார்க்கும்
அமுதமான அமைதி அமைக்கும்
ஆறுதல் அள்ளித் தெளிக்கும்
துன்பச் சுவடுகள் துடித்தழியும்.
இவையாவும்
இருட்டிய இருத்தலின்
ஒர் அமானுசிய அறையின்
சன்னல் கம்பிகளால் மட்டுமே.

கருத்துகள் இல்லை: