ஞாயிறு, 21 நவம்பர், 2010

மைத்ரேயி கவிதைகள்

1. ஒரு நீண்ட பயணத்தின் போது அறிந்தேன்.
நினைவுகளில் என் வாழ்வு மூழ்கிக் கொண்டிருந்ததை
ஏழு ஜென்மத்தின் காலங்களை விழுங்கிக் கொண்ட
அந்தப் பயணம், அந்த மனிதர்கள், அந்தப் பார்வைகள்...
சொப்பனத்தில் வருவது போன்ற கரங்களுடைய
அவன் மற்றும் அவனது எழுத்து
அதில் ஒர் கணம் நான் பிறந்து வாழலாம்
அவன் எனக்காக ஏழு ஜென்மம் எடுப்பான்
நான் இன்புறுவேன் நான் அதில் வாழ்ந்து விடுவேன்
எனது இதயத்தை எனது உணர்ச்சியை
எனது அன்பை
குன்றின் மணிகளாகக் கோர்த்து
அவன் அணியக் கொடுத்தேன் வரலாற்றிற்காக
கடலெல்லாம் நிலமாக மாறும்
நிலம் எல்லாம் நீலம் பாய்க்கும்
நான் அதில் மூழ்கி விடுவேன்.
காய்ந்த சருகான காலம் அந்த வருகை
அவனது பொய்கள் அவன் செய்கை அந்தப் பார்வை
அந்த முகம் இருளை வரவழைக்கும்.
சூன்யம் நிiந்த அவனது வாழ்வு
சுற்றுச்சூழல் நண்பர்கள் அனைவரும்
தோன்றுவர் வீணடிக்க காலத்தை
நினைவு எனக்குள் தோன்ற
படைத்திருப்பேன் கவிதையாக அவனை.


2. இமைகளை மூடி விழித்திருக்கிறேன்
காலையில் புலரும் முன்
இருண்ட ஒளியைப் பரப்புகிறது வெளி என்னுள்
எனது நீண்ட மெல்லிய பயணம்
அழகிய சிற்பங்களை சுமந்த கற்களின் உயரம்
இறந்த மரங்களில் உறவாடிய உயிர்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது இவையனைத்தும்
அறுபது மணி நேர ஒலியைக் கேட்காததால்
எண்ண ஒட்டங்களை என்ன செய்வது
கண்களுக்குப் புரியவில்லை
கைகள் பதிவு செய்கின்றன
மரத்தின் இதழில் உயிர் பெறுகின்றன
எனது கவிதைகள்
இதயம் உருகியது நீராக அழுகையில்
நீரின் குமிழியில் அவனின் பிம்பம்
விரல் நுனியில் எடுத்துப் பருகினேன்
மணித்துளிகளாய் கரைந்து கொண்டிருக்கிறான்
ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன பயணங்கள்
எங்கள் தொடர்ச்சியில் இறக்கும் வருடங்கள்
ஒன்று இல்லாமல் போகும்.

கருத்துகள் இல்லை: