திங்கள், 22 நவம்பர், 2010

தமிழில் சிறு பத்திரிக்கைகளுக்கான காலம் முடிந்து போய்விட்டதா?- மு.சிவகுருநாதன்

("சஞ்சாரம்" இதழை வெளியிடும் முன்பு நாம் அனுப்பிய துண்டறிக்கை.இது சஞ்சாரம் முதல் இதழ் உள்அட்டையில் வெளியானது.)

தமிழில்சிறு பத்திரிக்கைகளுக்கான காலம் முடிந்து போய்விட்டதாக ஓய்வு பெற்ற எழுத்தாளர்கள் அறிவிக்கிறார்கள். சிறு பத்திரிக்கை என்று
தொடங்கப்பட்டவையயல்லாம் பெரும் பத்திரிக்கையை நோக்கிய பாய்ச்சலில் இடைநிலை இதழ்களாக உருமாறி வருகின்றன. சிறு பத்திரிக்கை இயக்கத்திலிருந்து பெரும் பத்திரிக்கைக்குத் தாவுவதும் பெரும் பத்திரிக்கைகள் சிறு பத்திரிக்கை வாசகர்களைக் குறி வைத்து இதழ் நடத்துவதும் இங்கு சாத்தியமாகி உள்ளது.

மய்யநீரோட்ட இலக்கிய, அரசியல், கலை வடிவங்களுக்கு மாற்றுக்களைக் வெளிக் கொணர்ந்த சிறு பத்திரிக்கை இயக்கம் இன்று தொய்வடைந்துள்ளது. சிறு
பத்திரிக்கைக்கான தேவையும், காலந்தோறும் புதிய பல நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும் வேளையில் காத்திரமான விமர்சனங்களையோ, படைப்புக்களையோ இடைநிலை இதழ்களில் காண முடிவதில்லை. வாரம், வாரமிருமுறை இதழ்களுக்குப் போட்டியாக இடைநிலை இதழ்கள் எவ்வித கொள்கைகளும் இன்றி பக்கங்களை நிரப்பி வியாபாரத்தைப் பெருக்குகின்றன. சிறு பத்திரிக்கை மற்றும் பெரும் பத்திரிக்கைக்கான இடைவெளி முற்றிலுமாக அழிந்து இரண்டு தளங்களிலும் இயங்குபவர்கள் வியாபார நோக்கங்களுக்காக இணைந்து உலா வருவதை தற்போது அவதானிக்க முடிகிறது.

சென்ற நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட
எழுச்சியும் தாக்கமும் தற்போதைய காலங்களில் முற்றிலும் சுணக்கம் கொண்ட
செயல்பாடுகளும் முடங்கிப் போன பலரது நிலையும் நம்மை கவலை கொள்ள வைக்கின்றன.

தேஹ்ரிஅணை, சர்தார் சரோவர் அணை போன்றவற்றை அடுத்து சேது சமுத்திரத் திட்டத்தை சுற்று சூழலியர்களிடமிருந்து இந்துத்துவவாதிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரத்தில் கூட அக்பர் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கேள்வி கேட்க முடிகிறது. ஆனால் ராமனுக்கான ஆதாரம் கேட்டால் தலைக்கு விலை அறிவிக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் இத்துத்துவாவிடம் இணக்கம் கொண்டிருக்கும் சூழலாக இது இருக்கிறது.

பாலியல் கல்வியை எதிர்க்கும்இந்துத்துவா கட்சிக்கு இது பற்றி விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதவாதத்தை எதிர்க்க இன்றுள்ள ஒரே நம்பிக்கை இடதுசாரிகள் மட்டுமே. 123 அணுசக்தி ஒப்பந்தத்தில் இடதுசாரிகள் காட்டிய வேகத்தை போலல்லாது ‘ராமர் பாலம்’ பிரச்சனையில் இடதுசாரிகளின் நிலைப்பாடு மிகவும் கவலைஅளிப்பதாகவே இருக்கிறது.

டீக்கடைகளில் தலித்துகளுக்கு இன்னும் தனிக்குவளைதான்.
ஆனால் தலித் இயக்கங்களும் தலைவர்களும் தனித்தமிழ் பெயர் சூட்டல்,
விடுதலைப்புலிகள் ஆதரவு என்று கலாச்சார வாதிகளாக மாறி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள தலித்துகள் பற்றி எவ்வித
அக்கறையும் இல்லை. உத்திரப் பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியின் வெற்றி பிராமணர்களின் வெற்றியாக கணிக்கப்பட்டு, தமிழகத்திலும் அது தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. தலித் -பிராமணர் கூட்டணி இயல்பானது என்று பிரச்சாரம்செய்யப்படுகிறது. அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரது செயல்பாடுகள் மலிவான முறையில் கொச்சைப்படுத்தப்படுகிறது.

தலித் அரசியலின் கூர்மை மழுங்கடிக்கப்பட்டு தலித்துகள் கையில் அதிகாரம் என்பது தலைவர்களின் அதிகார போதை -துய்ப்பு என்பதாக புதிய பரிணாமம் கண்டுள்ளது. தலித்துகளில் ஓரங்கட்டப்பட்ட அருந்ததியர்கள் தனியே போராட வேண்டிய சூழல் இருக்கிறது. சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறை பல்வேறு தளங்களில் நிகழ்ந்து கொண்டு வருகிறது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக இந்துத்துவ சக்திகள் பிற்பட்டோரை தூண்டிவிடும் போக்கு உள்ளது.

தமிழ்சினிமா எப்போதும் போல் குப்பைகளை உற்பத்தி செய்து கொண்டுள்ளது.
தமிழ்ப்பெயர் என்ற ஒரே காரணத்திற்காக இவற்றிக்கு மக்கள் வரிப்பணம் வாரி
இறைக்கப்படுகிறது. திராவிட இயக்க சென்சார் போர்டுகளின் உதவியுடன் பெரியார் படம் வெளியிடப்பட்டு அதில் முடிந்தவரை பெரியாரை
கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். அவரைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள்
அவரின் கொள்கைகளை கொஞ்சம் கூட நினைப்பது இல்லை.

அரசியலைப்போலவே இலக்கியத்திலும் வாரிசுகளின் அடாவடித்தனங்களை சகிக்க முடியவில்லை. ‘இலக்கியமேஸ்திரிகள்’ எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள் வாசகன் - படைப்பாளி உறவு மீண்டும் அதிகாரத்தை நோக்கியதாக கட்டமைக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் ஒரு சிறு பத்திரிக்கையின் பணி என்னவாக இருக்கமுடியும்?

01. அனைத்துத் தளங்களிலும் மாற்றுக்களைத் தேடுதல்.

02. சிறு பத்திரிக்கைச் சூழலில் இப்போது இருக்கின்ற இடைவெளியை நிரப்புதல்.

03. தமிழ்ச்சூழலில் மீண்டும் விவாதத்திற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துதல்.

04. எங்கோ ஓர் மூலையில் இயங்கும் ஒத்த கருத்து உடையவர்களை இணைத்துக்கொண்டு செயல்படுதல்.

05.நிலவுகின்ற சமூக அமைப்பை கேள்விக்குட்படுத்துவதோடு மறைக்கப்பட்ட /
ஒதுக்கப்பட்ட வரலாறுகள் மற்றும் எழுத்துக்களை வெளிக்கொண்டு வருதல்.

06. பெண்களின் எழுத்தை அதன் இயல்பான வீச்சோடு தணிக்கைகள் இன்றி வெளிப்படுத்துதல்.

07. புலம் பெயர் எழுத்துக்களில் உள்ள மேட்டிமைத்தனங்களை நீக்கி அடித்தட்டு மக்கள் எழுத்தைப் பதிவு செய்தல்.

08. அரவாணிகள் பற்றிய எழுத்துக்கள் மூலம் அவர்களது வலியை/வேதனைகளைப் பதிவு செய்வதோடு அவர்களது படைப்பாளுமையை இனம் காணல்.

09. கதை, கவிதை, சினிமா, ஓவியம், சிற்பம், இசை போன்றவற்றோடு களஆய்வு, வாய்மொழி வரலாறு போன்றவற்றையும் தொகுத்தல்.

10. யதார்த்த வகை எழுத்துக்களின் போதாமைகளை தவிர்க்க நான் லீனியர் எழுத்துக்களை பயன்படுத்தல்.

11. வெகுஜன மக்கள் திரளின் சினிமா, இசை, அரசியல் இன்னபிற சொல்லாடல்களின்பால் கவனம் குவித்தல்.

12. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்றவற்றால் கேலிக்குள்ளாகும் ஜனநாயகம்/சமூகம் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தல்.

சார்புஇல்லாத தனித்த செயல்பாடு என்று ஒன்று இருக்க முடியாது. நுண்ணரசியல் சார்பு மற்றும் முன்னுரிமை வேலைத்திட்டங்களின்படி எங்களது செயல்பாடு அமையும். நிறப்பிரிகை, கிழக்கு, அனிச்ச வழியில் சஞ்சாரமும் தலித்துகள், பெண்கள், அரவாணிகள், சிறுபான்மையினர், விளிம்பு நிலையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அனைவரின் ஊடாக அகமும் புறமும் பயணிக்கும். எங்களது கருத்துக்களோடும் செயல்பாட்டோடும் இசையும் தோழர்கள் அனைவரது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம். தங்களின்
கருத்துக்களையும் படைப்புகளையும் எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: